Published : 31 Aug 2023 06:25 AM
Last Updated : 31 Aug 2023 06:25 AM
ஓணம், முற்றிலும் கேரளியமான ஒரு பண்டிகை. பல பண்பாட்டுப் படையெடுப்புகள் கேரளத்தில் நடைபெற்றபோதும் கேரளம் தனது நாட்டார் தன்மையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதை இம்மாதிரி பண்டிகைகள்வழி அறிய முடிகிறது. பெரும்பாலான கேரளப் பண்டிகைகளில் உழைக்கும் ஒரு கூட்டமும் ஜனங்களின் பங்களிப்பும் உண்டு.
மலையாளிகளும் இந்த ஓணத்தை அதே தனித்துவத்துடன் கொண்டாடுகிறார்கள். ஒன்றாம் ஓணம், மஞ்சள் பூக்களுடனான அத்தப்பூக் கோலத்தில் தொடங்கும். அடுத்த அடுத்த ஓணங்களின் அத்தப்பூக் கோலம் ஒவ்வொரு வண்ணமாகக் கூடி விரிந்து மனத்தில் வியாபகம் கொள்ளும். ஐந்தாம் ஓணம் வல்லம் களிக்கானது (படகுப் போட்டி). பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ள ஆராமுளயில் நடைபெறுவதால் இது ஆரமுள வல்லம் களி என அழைக்கப்படுகிறது.
வல்லம் களி கேரளத்தில் பல பகுதிகளில் நடைபெறுகிறது. ஓணத்தை ஒட்டி நடைபெறுவதில் இந்த ஆரமுள வல்லம் களிதான் விசேஷமானது. ஆரமுளயில் பம்பை நதிக்கரையில் பார்த்தசாரதி கோயில் உள்ளது. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் சாரதியாக இருந்தவர் பார்த்தசாரதி என்பதால் இங்கு படகுச் சாரதிகளையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.
சுண்டன் வல்லம் (படகு) என கேரளத்தின் மற்ற பகுதியில் அறியப்படும் படகு, இங்குப் ‘பள்ளியோடம்’ என அறியப்படுகிறது. பள்ளியோடம் ஒரு திருக்கோயிலைப் போல் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. பள்ளியோடங்களை நதியில் இறக்குவதே ஒரு தனிப் பண்டிகையைப் போல் இங்கு கொண்டாடப்படுகிறது.
நிறப்பரையில் (நெல் தானியம் வைக்கும் பெட்டி) நெல்லை நிரப்பி வணங்கி, கோயிலி லிருந்து வல்லம் களிக்கான வெற்றிலையும் புகையிலையும் வாங்கி வல்லத்தை ஆற்றில் இறக்குவார்கள். வல்லத்திலும் வேட்டி, துண்டுடன் மட்டும்தான் ஏற முடியும். படகு என்பது பத்மநாபன் படுத்துறங்கும் பாம்புப் படுக்கையாகவும் பாவிக்கப்படுகிறது என்பதால் அதற்கொரு தெய்வாம்சம் வந்துவிடுகிறது.
இதை ஒட்டி ஆரமுள வல்லம் சத்யயும் (வல்லம் விருந்து) இங்கு பிரசித்தம். வல்லம் களிக்காக வரும் படகுச் சாரதிகளை, பார்த்தசாரதியைப் போல் பாவித்து விருந்தளிக்கப்படுகிறது. 30 விதவிதமான கறியும் குழம்பும் பாயசமும் கொண்டு சாரதிகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
வல்லம் களிப் படகுகளைச் செலுத்தும் சாரதிகள், அதற்கு உற்சாகமூட்டும் தலைவர்கள் இவர்களுடன் வஞ்சிப்பாட்டுக் காரர்களுக்கும் படகுக்குள் இடமுண்டு. மலையாளத்தில் ‘ஆர்க் விளி’, ‘கூக்கு விளி’ என இரு விளிகள் உண்டு. உற்சாகக் குரல் அழைப்புதான் ஆர்க் விளி. இரண்டாவது விளி ஒருவரைக் கேலிசெய்ய, ஏளனம் செய்ய விளிப்பது. படகுப் போட்டி, “ஆர்க்கே... ர்ர்ர்...’ என்கிற ஆர்க்கு விளியுடன் தொடங்கும்.
இறக்குவதற்கு முன் வஞ்சிப் பாட்டும் பாடுகிறார்கள். வஞ்சிப் பாட்டு, வல்லம் களிக்கே உரிய மலையாளக் கவிதை வடிவம். ராமபுரத்து வாரியரின் குசேல விருத்தம் என்கிற பாட்டுதான் இன்றைக்கும் முன்னுதாரணமான வஞ்சிப்பாட்டாக அதிகம் பாடப்படுகிறது.
பாகவதக் கதையைச் சொல்வதாக இருந்தாலும் இதன் முதல் இரண்டு பகுதிகள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியையும் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவையும் போற்றுகின்றன. பார்த்தசாரதி வர்ணனை, பீஷ்மபர்வம் என இன்னும் பல வஞ்சிப் பாட்டுகளும் உள்ளன.
கேரளத்தில் காவாளம் என்கிற ஊரில் ‘கய்னகிரி சுண்டம் வல்லம்’ பல பரிசுகளைப் பெற்றுத் தோற்கடிக்க முடியாத வல்லமாகத் திகழ்ந்தது. இந்த வல்லம், காவாளம் சுண்டன் என அழைக்கப்பட்டது. இந்தச் சுண்டன் வல்லத்தைப் பற்றி 1967இல் ‘காவாளம் சுண்டம்’ என்கிற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது.
அந்தப் படத்துக்காக ‘குட்டநாடன் புஞ்சையிலே கொச்சுப் பெண்ணே குயிலாளே...’ என்கிற வஞ்சிப்பாட்டை பிரபல மலையாளக் கவி வயலார் ராமவர்மா எழுதினார். இன்று இந்தப் பாட்டுதான் மலையாளத்தின் ஒரே வஞ்சிப்பாட்டாகிவிட்டது.
ஓணத்தின் மற்றொரு அம்சம் நகைச்சுவை, பாட்டு காஸட்டுகள். தரங்கினி நிறுவனம் வெளியிட்ட ஓணப் பாட்டுகள் இன்றும் மலையாளிகள் நெஞ்சில் திரைப்படப் பாடல்போல் ஒலித்துக்கொண்டிருப்பவை; அதுபோல் ஓணத்தில் வெளியிடப்படும் நகைச்சுவை காஸட்டுகள். ஹரிஸ்ரீ போன்ற பிரபல மிமிக்ரி குழுக்கள் வெளியிடும் நகைச்சுவை காஸட்டுகள் ஒலிப்பது ஓணத்தின் ஒரு பகுதியாக ஒரு காலத்தில் இருந்தது.
‘ஓணத்தின் இடைக்கு புட்டு கச்சவடம்’ என்ற ஒரு பழமொழி உண்டு. ‘ஓணத்தின் இடையில் நீ புட்டு வியாபாரம் செய்கிறாயா?’ என்கிற மாதிரியான பொருள் தரும் இந்தப் பழமொழிபோல் ஓணம் ஒரு திருவிழாவாக அல்லாமல் பல்வேறு அம்சங்களைப் பண்பாட்டு மாற்றங்களுடன் ஆற்று வெள்ளப் போக்கைப் போல் இழுத்துக்கொண்டு வந்து ஒரு பன்மைத்துவத்துடன் திகழ்கிறது.
‘குட்டநாடன் புஞ்சையிலே கொச்சுப் பெண்ணே குயிலாளே...’ என்ற பாடலின் காணொளியைக் காண: https://rb.gy/blezv
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT