Published : 17 Aug 2023 06:02 AM
Last Updated : 17 Aug 2023 06:02 AM
சக்தி தலங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும். அவற்றில் பல பெரிய ஆலயங்களாக இருக்கும். சில சின்னஞ்சிறு கோயிலாக இருக்கும். அப்படி ஒரு சிறப்பு பெற்ற சந்நிதிதான் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில்.
புலியூர் என்றும் தற்போது சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் அழகிய நகரில் தில்லை நடராஜருக்கு நான்கு திசைகளிலும் நான்கு காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் கீழத்தெரு மாரியம்மன், மேற்கில் எல்லை அம்மன், வடக்கில் தில்லை காளி, தெற்கில் வெள்ளந்தாங்கி அம்மன் என அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு எல்லை தெய்வத்துக்கும் ஒரு சிறப்பு வரலாறு உண்டு.
துதிக்கையில் தொங்கிய பெண்: ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் பெய்த பெருமழையில் ஊரே வெள்ளக்காடானது. ஊர் மக்களின் வேண்டுதலுக்கு இணங்கி கோபுரத்தின் ஒளி தெற்குப் பகுதியில் படர, அங்கு ஒரு பெண் வெள்ளத்தில் நீந்திவந்தாள். அப்போது அவளை நோக்கி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. ஊர் மக்கள் செய்வதறியாது நிற்க, அந்த யானை அந்தப் பெண்ணைத் துதிக்கையால் தூக்கி தில்லை கோயிலுக்குத் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது.
ஊர் மக்கள் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு பெண் இல்லை. யானையின் துதிக்கையின் பிடியில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை இருந்தது. ஊரைச் சூழ்ந்திருந்த வெள்ளமும் வடிந்தது. இந்த அதிசயத்தை ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் தெரிவித்தனர். தில்லை அந்தணர்களின் யோசனைப்படி அந்தச் சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்து, வெள்ளந்தாங்கி அம்மன் என்னும் பெயரைச் சூட்டி ஊர் மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.
கருவறை தெய்வங்கள்: சின்னஞ்சிறு ஆலயம்தான். ஆலயத்தின் முகப்பில் வெள்ளந்தாங்கி அம்மன் யானையின் துதிக்கையில் இருப்பது போலவும், சாமரம் வீசும் பெண்கள், துவாரசக்திகள் உடன் அழகுற காட்சி தருகிறார்.
மகா மண்டபத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் மட்டுமே அமைந்துள்ளன. மகாமண்டபத்திற்கு அடுத்தது கருவறை. இங்கு மேற்கு திசை நோக்கி யானையின் துதிக்கையில் அம்மன் அரவணைத்து இருப்பதுபோல் தெய்விகமாகக் காட்சி தருகிறாள் வெள்ளந்தாங்கி அம்மன். அம்மனின் இடப்பக்கம் சபரி சாஸ்தா வலப்பக்கம் சிவலிங்கம் என மூன்று தெய்வங்களையும் கருவறையில் தரிசிக்கலாம்.
கோஷ்டத்தில் துர்க்கை அம்மன் சந்நிதி மட்டுமே உள்ளது. பிரகாரத்தில் வீரனார் சிரசு வடிவில் காட்சி தருகிறார். நவகிரக சந்நிதி தனியாக உள்ளது. கோயிலின் இடதுபுறம் எல்லையம்மன் பிரம்மாண்ட சுதை சிற்பமாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காத்த மகேஸ்வரியை விவசாயம் செய்யும் அனைவருமே பயபக்தியோடு வந்து தாங்கள் விதைக்கப் போகும் விதையை இங்கு வைத்து பூஜை செய்துவிட்டு பிறகுதான் அதை விதைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் இயற்கைப் பேரிடர்களில் இருந்து விவசாயத்தையும் தங்களையும் அன்னை அரவணைத்து காப்பாற்றுவாள் என்று நம்புகிறார்கள்.
கிரக தோஷங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்படும் திருமணத் தடை இந்த ஆலயத்தின் அம்மனை வழிபடுவதன் மூலம் விலகுகிறது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தில் அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் கயிறு, மஞ்சள், சிவப்பு, பச்சை என இந்த மூன்றில் ஏதாவது ஒரு நிறத்தில் புடவையை அம்பாளுக்குச் சாற்றி, வளையல் வைத்து வழிபாடு செய்தால் 30 நாள்களில் திருமணத் தடை விலகுவதாக ஐதிகம்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அம்பாளுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக நீரை வீடு முழுக்க உள்ளேயும் வெளியேயும் தெளிக்க வேண்டும். தம்பதியினர் இருவரும் தங்கள் சிரசில் தெளித்துக்கொள்ள வேண்டும்.
வேண்டுதலுக்குப் பின், குழந்தை பிறந்தவுடன் 30 நாள்களுக்குள் இவ்வாலயத்திற்குக் குழந்தையைக் கொண்டுவந்து அம்பாளுக்குக் கீழே வைத்து, "தாயே இது உன் அருளால் கிடைத்த செல்வம் இதை சிறப்பாக வளர்க்க நீதான் அருள்புரிய வேண்டும்" என்று வணங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அம்பாளுக்கு வஸ்திரம் வாங்கிக்கொடுத்துவிட்டு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
திருவிழாக்கள்: ஆடி மாதம் பத்து நாள் உற்சவம். முதல் நாள் காப்பு கட்டும் உற்சாகத்தோடு தொடங்குகிறது. பத்து நாள்களும் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும். ஒன்பதாம் நாள் பாலமான் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு முன்னே வர பல்வேறு வகையான காவடிகள் பின்னே வரும். பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவார்கள்.
`ஓம் சக்தி பராசக்தி' என்ற பக்தர்களின் கோஷம் எங்கும் எதிரொலிக்கும். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.
பத்தாம் நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தவுடன் திருஊஞ்சல் வைபவம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையின் அருள் வேண்டி அவரின் நாமாவளிகளைப் பாடுவார்கள்.
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க் கிழமை இரண்டு தினங்களிலும் அம்பாளுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் சர்வ பிரார்த்தனைக்காக துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்தில் நெய் தீபம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.
வேண்டும் வரம் தரும் அற்புத சக்தியாக விளங்கும் வெள்ளந்தாங்கி அம்மனை வணங்கி சகல சௌபாக்கியமும் பெற சிதம்பரம் வாருங்கள்.
அமைவிடம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், சபாநாயகர் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.
- pbg1972pbg@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT