Published : 11 May 2023 06:47 PM
Last Updated : 11 May 2023 06:47 PM
ஐரோப்பா நாடுகளுக்கு வெளியே உள்ள நாடுகளின் தொழில்முனைவோரை ஒன்றிணைக்கும் உலகளாவிய தொழில்நுட்ப மாநாடான 'Web Summit Rio' கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள், முதலீட்டாளர் குழுமங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்றனர். அவர்களில், பிரேசிலைச் சேர்ந்த 26 வயது பெண்ணும் ஒருவர். அந்த மாநாட்டில் அவரது உரை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
யார் இந்தப் பெண்?
அந்தப் பெண்ணின் பெயர் Txai. 21 பழங்குடியினருடன் இணைந்து செயல்படும் Kanindé Ethno எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அவர். அவரது தலைமையிலான இளைஞர்கள் குழு, வீடியோ கேமராக்கள், ட்ரோன்கள், ஜிபிஎஸ், அலைப்பேசிகள், சமூக வலைப்பின்னல்கள் மூலம் அவரது கிராமத்தில் நடக்கும் நில ஆக்கிரமிப்பைக் கண்காணித்து, பாதுகாத்து வருகிறது
கவனம் ஈர்த்த உரை
அந்த மாநாட்டில் அவர் பேசும்போது, "இன்று நமக்குத் தொழில்நுட்பம் ஓர் ஆயுதம். நமது காட்டைப் பாதுகாக்க, தொழில்நுட்பத்தையும், மூதாதையர் அறிவையும் இணைத்து ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதே நேரம், தொழில்நுட்பம் தீமைக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார். நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க நாங்கள் பயன்படுத்தும் செயற்கைக்கோள்தான், ஆக்கிரமிப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது என்று தொழில்நுட்பத்தின் ஆபத்தை அனைவருக்கும் புரியும் வகையில் அவர் உணர்த்தினார். மேலும், பேஸ்புக் போன்ற சமூக ஊடகத்தில், அவரது பூர்வீக நிலங்கள் விற்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தது அங்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"இயற்கையுடன் மீண்டும் இணைவதற்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை என்பதை நாம் மறுக்க முடியாது. எனக்கு உதவ விரும்புவதாகச் சொல்பவர்களிடம், நான் சொல்வது எல்லாம் ஒன்றுதான். முதலில், வந்து எங்களைச் சந்தியுங்கள்; எங்களுக்குத் தேவையானதைப் பாருங்கள்; அதன் பின்னர் எங்களுக்கு உதவுங்கள்" என்கிறார் அந்தச் சட்டம் படிக்கும் ஆர்வலர்.
உலகளாவிய அளவில், காலநிலை மாற்றத்தைப் பற்றிப் பேசுவது பொருளாதாரத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "நாம் கிட்டத்தட்டத் திரும்ப முடியாத கட்டத்தில் இருக்கிறோம்; நாம் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பதை நிறுத்திவிட்டு மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்" என்று உலகநாடுகளின் தலைவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT