Last Updated : 15 Apr, 2023 12:27 PM

 

Published : 15 Apr 2023 12:27 PM
Last Updated : 15 Apr 2023 12:27 PM

ஒட்டகச்சிவிங்கி இதயத்தின் எடை என்ன?

உலகிலேயே மிக உயரமான விலங்கு ஒட்டகச்சிவிங்கி. இதன் தாயகம் ஆப்பிரிக்கா.

ஆப்பிரிக்கா கண்டத்தின் நான்கு பகுதிகளில் 4 வகை ஒட்டகச்சிவிங்கிகள் காணப்படுகின்றன.

எந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வோர் ஒட்டகச்சிவிங்கிக்கும் உடலில் உள்ள கோடுகள், புள்ளிகளில் சிறிய வித்தியாசம் இருக்கும்.

முழுமையாக வளர்ந்த ஒட்டகச்சிவிங்கி 4.3 மீட்டர் முதல் 5.7 மீட்டர் உயரம் வரை இருக்கும். அதாவது மூன்று மனிதர்கள் ஒருவர் மீது இன்னொருவர் ஏறி நின்றால், எவ்வளவு உயரமாக இருப்பார்களோ அவ்வளவு உயரமானது ஒட்டகச்சிவிங்கி. குட்டி பிறக்கும்போதே ஒரு மனிதனின் உயரம் இருக்கும்.

ஒட்டகச்சிவிங்கி தன் நீண்ட கழுத்தின் மூலம் எதிரிகள் வருவதை விரைவாக அறிந்துகொள்கிறது. அடர்ந்த காடுகளைவிட புல்வெளிகளே ஒட்டகச்சிவிங்கிகளுக்குச் சிறந்தவை.

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை உணவு சாப்பிடுவதிலேயே செலவிடுகின்றன. ஒரு நாளைக்கு 45 கிலோ இலைகளையும் இளங்கிளைகளையும் சாப்பிடுகின்றன. சில நேரம் பழங்களையும் புற்களையும் சாப்பிடுவதும் உண்டு. உயரமான மரக்கிளைகளில் இருந்து பசுமையான இலைகளைச் சுவைத்துச் சாப்பிடுவதற்கு நீண்ட கழுத்து உதவியாக இருக்கிறது.

நிலத்திலிருந்து நீரைப் பருகுவதற்குக் கடினமாக இருக்கும். கால்களை அகலமாக வைத்துக்கொண்டு, நீண்ட கழுத்தைத் தரைக்குக் கொண்டுவந்து நீரைப் பருக வேண்டும். அப்படிப் பருகும்போது எதிரிகள் எளிதாக வேட்டையாடிவிடும். அதனால் ஒட்டகச்சிவிங்கிகள் தண்ணீரை அதிகமாகப் பருகுவதில்லை. இலைகளில் இருந்து கிடைக்கும் நீர்ச்சத்தே அவற்றுக்குப் போதுமானது என்பதால், சில நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீரைக் குடிக்கின்றன.

ஒட்டகச்சிவிங்கிகள் உயரமாக இருந்தாலும் வேகமாக நடக்கக்கூடியவை. ஆண் ஒட்டகச்சிவிங்கிகள் தங்களுக்குள் யார் பலசாலி என்பதைப் பார்ப்பதற்காக தலையால் மோதிக்கொள்வதுண்டு.

ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு 45-50 செ.மீ. நீளம் இருக்கும். இலைகளையும் கிளைகளையும் நாக்கால் பிடித்து, இழுத்துச் சாப்பிடுவதற்கு நீளமான நாக்கு வசதியாக இருக்கும்.

ஒட்டகச்சிவிங்கியின் இதயம் சுமார் 11 கிலோ எடை இருக்கும். நில வாழ் விலங்குகளில் மிகப் பெரிய இதயம் இவற்றுக்குத்தான் உண்டு.

ஒட்டகச்சிவிங்கியின் குட்டி பிறக்கும்போதே 2 அடி உயரத்தில் இருந்துதான் கீழே விழும். ஒன்றரை ஆண்டுகள் தாயுடன் வசிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x