Published : 05 Sep 2017 11:02 AM
Last Updated : 05 Sep 2017 11:02 AM
சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லுதர்ட் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி வந்தார். இந்தியா உறுப்பினராக முயற்சி செய்துகொண்டிருக்கும் ‘அணு விநியோக நாடுகள் குழு’ (Nuclear Suppliers Group) வின் தலைவராக சுவிட்சர்லாந்து இருப்பதால், அதிபர் டோரிஸின் தற்போதைய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில், இந்தியா அணு விநியோக நாடுகள் குழுவிலும், ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு குழுவிலும் (Missile Technology Control Regime) அங்கம் வகிக்க சுவிட்சர்லாந்து ஆதரவளித்திருக்கிறது.
இதற்கு இந்தியா நன்றி தெரிவித்திருக்கிறது. இருதரப்பு நாடுகளும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேம்படுத்தவும் முடிவுசெய்திருக்கின்றன. அத்துடன், இருநாடுகளுக்கும் இடையில் ரயில்வே துறை தொடர்பான இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. கறுப்பு பண ஒழிப்பில் இந்தியாவுக்குத் தேவைப்படும் தகவல்களை அளிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் தெரிவித்திருக்கிறார். சுவிட்சர்லாந்து, இந்தியாவின் ஏழாவது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகவும், பதினோறாவது வெளிநாட்டு முதலீட்டாளராகவும் இருக்கிறது.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளராகிறார் ராஜிவ் மஹரிஷி!
இந்தியாவின் அடுத்தத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக ராஜிவ் மஹரிஷி ஆகஸ்ட் 31-ம் தேதி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக இருக்கும் ஷஷி காந்த் ஷர்மா பதிவிகாலம் செப்டம்பர் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக ராஜிவ் மஹரிஷி அறிவிக்கப்பட்டிருக்கிறார். 2015-ம் ஆண்டிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜிவ், ஆகஸ்ட் 30-ம் தேதி ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலான பணிகாலத்தில், ராஜஸ்தான் தலைமை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். முன்னதாக, இவர் ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் பதவிகாலம் ஆறு ஆண்டுகள். அறுபத்தைந்து வயது வரை இந்தப் பதவியை வகிக்கமுடியும். ராஜிவ் மஹிரிஷி ஆகஸ்ட் 2020 வரை இந்தப் பதவியில் தொடர்வார்.
உலகின் பெரிய ‘எக்ஸ்-ரே லேசர்’ துப்பாக்கி!
‘ஐரோப்பிய எக்ஸ்-ரே ஃப்ரீ எலக்ட்ரான் லேசர்(XEFL)’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் உலகின் பெரிய ‘எக்ஸ்-ரே லேசர்’ துப்பாக்கி, ஜெர்மனியில் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து செயல்படதொடங்கியிருக்கிறது. இந்த ‘எக்ஸ்எஃப்ஈஎல்’ எந்திரம், அணுக்கள், வைரஸ், வேதியல் வினைகள் போன்றவற்றில் ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்தது. அதிவேக கேமரா போல் செயல்படும் இந்த லேசர் துப்பாக்கி, ஒரு நொடியில் 27,000 லேசர் துடிப்புகளைப் பாய்ச்சும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
70 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில், பதினொரு நாடுகளிடம் நிதிபெற்று, எட்டு ஆண்டுகளில் இந்த லேசர் துப்பாக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த லேசர் துப்பாக்கி, அறிவியல் உலகின் நானோ ஆராய்ச்சிகளை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும். இந்த லேசர் துப்பாக்கியை வைரஸின் அணு விவரங்களை அறியவும், மூலக்கூறு செல்களை 3-டி படங்கள் எடுக்கவும், வேதியல் வினைகள் நடைபெறும்போது பதிவுசெய்யவும் பயன்படுத்தலாம்.
ஜி.டி.பி. வளர்ச்சி 5.7 சதவீதமாகச் சரிவு
இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் மாதவரையிலான ஜி.டி.பி. வளர்ச்சி சதவீதத்தை விளக்கும் அரசு தரவுகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகின. கடந்த மூன்று காலாண்டுகளில் சந்திக்காத சரிவை இந்தக் காலாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி சதவீதம் சந்தித்திருக்கிறது.
இதற்கு முந்தைய காலாண்டின் (ஜனவரி-மார்ச்) ஜி.டி.பி. வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது. கடந்த 2016-ல், இதே காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு, இந்தியாவின் முதல் காலாண்டின் ஜி.டி.பி.
வளர்ச்சி சதவீதம் 6.6 ஆக இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால், கருத்துக் கணிப்பைவிடக் குறைவான வளர்ச்சியே எட்டப்பட்டிருக்கிறது.
கடந்த நிதியாண்டிலிருந்தே (மார்ச் 2016) ஒவ்வொரு காலாண்டிலும் ஜி.டி.பி. வளர்ச்சி சதவீதம் சரிவையே சந்தித்துக்கொண்டிருக்கிறது. 2016 நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.4 வளர்ச்சி சதவீதத்தை எட்டியிருந்த நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி சதவீதம் இந்த நிதியாண்டின் காலாண்டில் 6.4 சதவீதமாகச் சரிந்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகான பிரச்சினைகள் போன்றவற்றை இந்த ஜி.டி.பி. வளர்ச்சி சரிவுக்குக் காரணமாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பி.எஸ்.எல்.வி. சி-39 தோல்வி
இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஆகஸ்ட் 31-ம் தேதி, பி.எஸ்.எல்.வி. சி-39 ஏவுகணையுடன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரோவின் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதில், பி.எஸ்.எல்.வி. ஏவுகணை இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்திருக்கிறது.
ஐ.ஆர்.எஸ்.-1இ என்ற செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்ற பி.எஸ்.எல்.வி.-டி1 ஏவுகணை செப்டம்பர் 20, 1993-ம் ஆண்டு தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு, பி.எஸ்.எல்.வி. 39 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. “பி.எஸ்.எல்.வி. சி-39 ஏவுகணையின் வெப்பக் கவசம் பிரியாதததால் ‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச்’ செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் நிறுத்த முடியவில்லை. அதனால், இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் தோல்விக்கான காரணம் குறித்து விரிவாக ஆராயப்படும்” என்று இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். வழிகாட்டுதல்களுக்கும் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்வதற்கு உதவும் வகையிலும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவிவருகிறது. அந்த வகையில், தோல்வியடைந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக்கோள் எட்டாவது செயற்கைக்கோளாகும்.
பி.வி. சிந்து வெள்ளி, சாய்னா வெண்கலம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட சாய்னா நேவால் வெண்கலப் பதக்கத்தையும் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். ஸ்ரீகாந்த் கிடாம்பி தொடரின் காலிறுதிப் போட்டியில் வெளியேறினார். ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்ற மகளிர் தனிநபர் இறுதிப் போட்டியில் சிந்துவும் ஜப்பானின் நசோமி ஒக்குஹாராவும் விளையாடினார்கள். இந்தப் போட்டியில் இரண்டு செட்களைக் கைப்பற்றிய நசோமி, தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால், சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், நசோமியை எதிர்த்து விளையாடிய சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT