Published : 19 Sep 2017 10:50 AM
Last Updated : 19 Sep 2017 10:50 AM

தொழில் தொடங்கலாம் வாங்க! 32: தெரிந்த சமூகத்தில் உதவி பெறலாமே?

தொழில் வாழ்க்கை நம் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதி. அதனால்தான் சமூகத்தில் நடக்கும் எதுவும் உங்கள் தொழிலைப் பாதிக்கலாம்.

எனக்குத் தெரிந்து ஒரு கோடி ரூபாய் அளவில் வருமானம் ஈட்டிவந்த ஒரு மின்னணுப் பாதுகாப்பு நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் பத்து மடங்கு தொழில் செய்தது. உபயம்: ‘ஒசாமா பின் லேடன்’. இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் எல்லா நிறுவனங்களும் பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்துவதில் அதிக முதலீடுசெய்ய ஆரம்பித்தன. அடுத்த சில ஆண்டுகளில் ஒரு பன்னாட்டுப் போட்டி நிறுவனம் இந்த கம்பெனியை நல்ல விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அக்கம் பக்கம் பாருங்க!

‘டீமானிட்டைசேஷன்’ என்னும் ‘டெமன்’ கட்டவிழ்த்தப்பட்ட வாரத்தில் ரிலீசான படங்கள் படுத்தன. அதே போல் சுனாமி, முதலமைச்சர் மரணம், ஜி.எஸ்.டி. என எது வேண்டுமானாலும் உங்கள் தொழிலை எப்படி வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஒரு ரயில் சிக்னலுக்காக ஐந்து நிமிடங்களுக்கு மேல் நின்றால் வண்டியில் பழம் விற்பவர்கள் குறைந்த நேரத்தில் எல்லாவற்றையும் விற்றுவிட்டு இறங்கிப்போவதைப் பார்க்கிறோம். 1991-ல் ராஜீவ் காந்தியின் படுகொலையின்போது நான் திருச்சிக்கு அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். பல மணி நேரப் பசிக்குப் பின்பு ரயில் நிலையத்தில் உப்புமா கிடைத்தது. பதினைந்து ரூபாய் ஒரு பொட்டலம் என்று விற்றார்கள். அடுத்த சாப்பாடு எங்கே எப்போது என்று தெரியாத நாங்கள் விலையை யோசிக்காமல் வாங்க வந்த வேகத்தில் உப்புமா தீர்ந்தது.

இதைப் பலர் அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை புறச் சூழலை உற்று நோக்குபவர் எந்த நிகழ்விலும் தனக்கு ஆதாயம் தேடிக்கொள்வார். அல்லது குறைந்த சேதத்தோடு தப்பிப்பார். மழை பெய்யலாம் என்று யோசிப்பவர் குடை கொண்டுபோவதைப் போலத்தான் இதுவும். மேலும் கீழும் போகக்கூடிய இந்தத் தொழிலின் தன்மையை முதலில் உணர வேண்டும். தொழிலில் எவ்வளவு கவனம் உள்ளதோ அதே அளவு சந்தையில்/ சமூக நிலவரத்தில் கவனம் கொள்ளுதல் அவசியம்.

திறன் பற்றாக்குறை

சமூகம் என்பதில் நம் குடும்பங்களும் அடங்கும். எத்தனை வாய்ப்புகள் நம் குடும்பத்துக்கு உள்ளேயே உள்ளன. ஆனால், எத்தனை பேர் இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்? உங்களுக்கு ஒரு வசதிவாய்ந்த உறவினர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் ஒரு தொழில் கடன் வாங்க முடியுமா உங்களால்? நம் தனிப்பட்ட உறவுகளையும் தொழில் உறவுகளையும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் பேணுவது ஒரு திறன். பல குடும்பங்களில் கொடுக்கல் வாங்கல் சண்டையில் முடியக் காரணம் இந்தத் திறன் பற்றாக்குறையால்தான்.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அவசரமாகத் தேவைப்படுகிறது. ஒரு பேமெண்ட் வரவில்லை. பணியாளர்களுக்குச் சம்பளம் போட வேண்டும். ரொட்டேஷனுக்குக் கிடைத்தால் ஒரு மாதத்திலோ இரண்டு மாதங்களிலோ திருப்பித் தரலாம். உங்கள் உறவினரிடம் வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் உள்ளது. பிரமாத வட்டியில்லை. நீங்கள் கேட்கிறீர்கள். அவர் மனசுக்குள், “சொந்தக்காரர் வட்டி கேட்க முடியாது. முதலே எப்போ திரும்பும்னு தெரியாது. லேட்டாகிப் போய்க் கேட்டால் அனாவசிய மனஸ்தாபம்தான்!” இப்படி ஓடும். கடைசியில் கையை விரிப்பார். உங்களுக்குப் பணம் இருப்பது தெரிந்தும் கொடுக்காத எரிச்சல் இருக்கும். வேறு வழியில்லாது அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கிச் சமாளிப்பீர்கள். “கொடுத்து உதவியிருக்கலாம்” என்ற எண்ணம்தான் மிஞ்சியிருக்கும்.

சரி, இந்தக் கதையை இப்படி ஓட்டுவோம் இப்போது. நீங்கள் பணம் கேட்டு அவர் கொடுக்கிறார். வட்டிகூட இல்லை. நாம் அதைச் சொன்ன நாளில் அவர் கேட்காமலேயே கொடுப்போமா? கொடுக்க மாட்டோம் என்பதுதான் பெரும்பான்மை மனோபாவம். கேட்காத கடன் வராது. கேட்டால் “இவ்வளவு வச்சிருக்கான்; ஏன் இவ்வளவு அல்பமா கேக்கறான்? இதை வச்சுதான் சாப்பிடப்போறானா?” என்று எண்ணத் தோன்றும்.

ஆனால், உங்களால் அவர் சம்பாதிக்கும் வட்டிக்குச் சற்று மேலாக (அதாவது நீங்கள் கடன் வாங்கும் வட்டிக்குச் சரி பாதியில்) ஒப்புக்கொண்டு, சொன்ன நாளில் சொன்ன தொகையைக் கேட்காமல் கொண்டு கொடுத்தால் உங்கள் உறவை அழகாகத் தொழிலுக்குப் பயன்படுத்துகிறீர்கள் என்று பொருள். இரு தரப்புக்கும் லாபம், நல்லுறவு, பரஸ்பர உதவி எல்லாம் கிடைக்கும்.

பரஸ்பர நம்பிக்கை அவசியம்

இது சொந்தக்காரர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், உடன் வசிப்பவர்கள் என யாரிடம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு கூட்டுறவு போலச் செயல்பட முடியும். பரஸ்பர நம்பிக்கை மட்டும் அவசியம். பல ஏழை எளியவர்கள் சீட்டு கட்டுவது இந்த அடிப்படையில் தான். கடன் வாங்க மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் பெற, விளம்பரம் செய்ய, தொழில் ஆலோசனை பெற எனப் பல வகைகளில் உங்கள் சமூக உறவுகள் உதவலாம். இன்று ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்கள் இதற்கு இன்னமும் எளிமையாக வழிவகுக்கின்றன.

ஒரு காலத்தில் கிராமத்து வாழ்க்கை கூட்டுறவை மட்டுமே நம்பி இருந்தது. ஒவ்வொரு பிரிவும் மற்ற எல்லோருக்கும் தேவைப்பட்டார்கள். உதவியும் பெற்றார்கள். ஒரு கிராமமே சுயசார்புடன் செயல்படும். விளைந்ததை விற்கச் சந்தை கூடும். எல்லோராலும் எல்லோருக்கும் பயன் உண்டு. அன்னியரிடம் போய்க் கை ஏந்துவதைவிடக் குடும்பமாய்த் திகழும் கிராமத்துக்குள்ளேயே பரிவர்த்தனை நடக்கும். சாதிக் கொடுமை, வர்க்க பேதங்கள் போன்றவை கிராமத்தில் இருந்தன; அவற்றை நான் மறுக்கவில்லை. ஆனால் “உனக்கு ஒன்று வேண்டும் என்றால் உன் சனத்தைக் கேளு” என்ற எண்ணம் இருந்தது.

நகர வாழ்க்கையின் அன்னியமாக்கல் நம்மை முகம் தெரியாத நிறுவனங்கள் முன்தான் உதவி கோர வைக்கின்றன. தெரியாத சமூகத்தில் உதவி பெறுவதைவிடத் தெரிந்த சமூகத்தில் உதவி பெறலாமே?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x