Published : 13 Sep 2017 04:02 PM
Last Updated : 13 Sep 2017 04:02 PM
உற்பத்தியில் சேவை என்பதும், சேவையில் உற்பத்தி என்பதும் உண்டு என்று எழுதியிருந்தேன். அப்படி என்றால் என்ன? ஒரு கார் உற்பத்தி செய்தாலும் அதை விற்பதில், விநியோகிப்பதில் சேவை அடங்கியுள்ளது. ஒரு சிகை அலங்காரச் சேவை என்றாலும் அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரமும் அடங்கியுள்ளது. ஆனால் எது முதன்மையோ அதன் கலாச்சாரம் மேலிடும்.
நிறுவனத்தின் கலாச்சாரம்!
எல்லா நிர்வாகங்களுக்கும் விலை குறைப்பு, வாடிக்கையாளர் சேவை, திறமையான மக்கள் பங்கீடு எல்லாம் வேண்டும். ஆனால், எந்த வகை நிறுவனத்துக்கு எது மிக அவசியம் என்பதுதான் கேள்வி. அதைத்தான் துறை சார்ந்து குறிப்பிட்டிருந்தேன். உற்பத்தி என்றால் சிக்கனமும், பணி வழிமுறைகளில் கவனமும், சேவை என்றால் வாடிக்கையாளர் உறவுமுறையும் துரித நடவடிக்கையும் முக்கியம். எல்லா நிறுவனங்களும் எல்லா விஷயங்களிலும் சரிசமமாகக் கவனம் செலுத்த முடியாது. செலுத்தக் கூடாது என்றுகூடச் சொல்வேன்.
ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆர் & டி பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்குத் தனிநபர் சுதந்திரம், தனிமை, ஆய்வுக்கேற்ற வசதிகள் முக்கியம். அங்குக் கூட்டு உழைப்பு, நேரந்தவறாமை, சிக்கனம் என்றெல்லாம் நிர்வாகம் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம். ஒரு விற்பனை நிறுவனம் என்றால் அங்கு இலக்குகளை நோக்கி நகர்தல், வாடிக்கையாளர் தேவைக்காக உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்யும் சுதந்திரம், வேகமான முடிவுகள் ஆகிய முக்கியம். இப்படி நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்கள் பணி சார்ந்த பண்புகளை நிர்வாகிக்கும். இதுதான் மெல்ல மெல்ல நிறுவனத்தின் கலாச்சாரமாக உருவெடுக்கும்.
எதில் கவனம் அதிகம்?
அதேபோல தனியார் துறை, அரசு சார்ந்த துறை மற்றும் அரசாங்கம் என ஒவ்வொன்றுக்கும் தனி கலாச்சாரக் கூறுகள் உண்டு. அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த துறைகளில் முதலாளிகளின் நேரடி தாக்கம் குறைவு. ஆனால் செங்குத்தான நிறுவன அமைப்பில் மேலதிகாரியின் அதிகாரம் மிக அதிகம். எதைச் செய்ய வேண்டும் என்பதைவிட எதைச் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதனால்தான் புதியதைச் செய்யப் பெரும் தயக்கமும் பயமும் சந்தேகமும் இயல்பாகவே இருக்கும். அதனால் மாறுதல்களை நிகழ்த்துவதில் பெருத்த தாமதம் ஏற்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் வேகமாகச் செயல்பட முடியும். ஒரு முடிவு எடுத்துவிட்டால் உடனே நிகழ்த்த முடியும். ஆனால், அரசாங்க நிறுவனங்களில் முடிவு எடுப்பதும் செயல்பாடுகளைத் துரிதப்படுத்துவதும் பெரும் சவால்கள். இந்தக் கட்டமைப்பும் அதன் கலாச்சாரப் பின்னணியும்தான் காரணங்கள். தனி மனிதர்கள் அல்ல. நல்லவர்களும் வல்லவர்களும் எல்லா அமைப்புகளிலும் இருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பை மதிப்பு கூட்டிப் பெரும் வளமாக எடுத்துச்செல்வதில்தான் நிர்வாகத் திறமை உள்ளது.
அரசாங்கத்துக்கும் அது சார்ந்த நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகம். இடையூறுகள் அதிகம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கேட்கலாம். அதனால் எவ்வளவு உன்னத நோக்கங்கள் இருந்தாலும், எவ்வளவு திறமையான தலைமையும் ஊழியர்களும் இருந்தாலும், தொழில் துறைகளில் அரசு நிறுவனங்கள் திண்டாடுவது இதனால்தான்.
உங்கள் தொழிலையே ஆராயுங்கள்!
தொழில் தொடங்கும் பலர் காசு வருகிறது என்று ஏதோ தொழிலை ஆரம்பித்து, பின்னர் தனக்கு ஒத்துவரவில்லை என்று முடங்குவதைப் பார்க்கிறோம். தனக்கு இசைவான, தனக்குத் தெரிந்த, தனக்கு மனிதத் தொடர்புகள் உள்ள கலாச்சாரம் கொண்ட தொழிலைத் தேர்ந்தெடுப்பது நல்லது. விவசாயம் செய்யும் மனநிலையும் பெட்டிக்கடை வைத்திருப்பவர் மனநிலையும் காப்பீடு வைத்திருப்பவர் மனநிலையும் ரியல் எஸ்டேட் செய்பவர் மனநிலையும் வேறு வேறாகத்தான் இயங்க முடியும். ஒவ்வொரு தொழிலும் சில மனநிலைகளை நம்முள் தோன்றவைக்கும். அதைப் புரிந்துகொள்ளுதல் உத்தமம்.
உற்பத்தி பெரிதா, சேவை பெரிதா என்பதை விவாதிப்பதல்ல என் நோக்கம். ஒவ்வொரு தொழிலிலும் உள்ள கலாச்சார வேறுபாடுகளை உணர்த்துவதும் அது தரும் எதிர்பார்ப்புகளை உணர்த்துவதும்தான் என் குறிக்கோள். உங்கள் தொழிலையே ஆராயுங்கள். அது ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் உங்களுக்குப் புரியும்.
ஒரு முதலாளியாக இந்தப் புரிதல் முக்கியம். இது உங்கள் தொழில் வாழ்க்கையை மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் நேர நிர்வாகம், உங்கள் உடல் உழைப்பு, உங்கள் போக்குவரத்து, குடும்பத்துக்கான உங்கள் நேரம், உங்கள் தொலைபேசி நேரம், உங்கள் தொழில் உபாதைகள் எனச் சகலமும் உங்கள் தொழிலையும் பாதிக்கும்.
ஒரு முதுபெரும் எழுத்தாளர் வாழ்க்கைக் குறிப்பில் இதைப் படித்தேன். அவர் எழுதும்போது அவர் மனைவி அதிர்ந்துகூட நடக்கத் தயங்குவாராம். அவர் மனஓட்டம் தடைபடக் கூடாதே என்று. நைட் ஷிஃப்ட் முடித்த ஊழியர் தூங்கும் அறையை வெளிச்சம் வராமல் அடைத்து வைக்கும் குடும்பத்தினரைப் பார்த்திருக்கிறேன். “கடையை மூடிவிட்டு வருவதற்கு மணி 11 ஆகும்.
அதனால் 10 மணிக்கு மேலதான் சுடச் சுடச் சமைப்பேன்” என்று சொல்வோரைக் கண்டிருக்கிறேன். ஊர் ஊராய் அலைபவர் வீட்டில் ஒரு பிரயாணப் பெட்டி எப்போதுமே தயார் நிலையில் இருக்கும். கிராமத்தில் விவசாயம் செய்பவர்கள் எந்த நல்லது கெட்டதுக்கும் போகத் தவறுவதில்லை. அவர்கள் மகனே நகரத்துக்கு வேலைக்குச் சென்றபின் எதற்குச் செல்லாவிட்டாலும் புரிந்துகொள்கிறார்கள். “லீவு எடுப்பது கஷ்டம் பா” என்பான் மகன். அதே சொந்தத் தொழில் வைத்திருப்பவரின் மனைவி கேட்பார்: “ஒரு அரை நாள் போய் வந்திட முடியாதா? உங்களைக் கேட்க முதலாளியா இருக்கார்?”
தொழில் உங்களை மாற்றும். உங்கள் குடும்பத்தையும் மாற்றும். தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது அது உங்கள் குடும்ப வாழ்க்கையையும் மாற்றும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்!
தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT