Published : 22 Mar 2023 05:59 AM
Last Updated : 22 Mar 2023 05:59 AM
கடல்நீர்நாய் தூங்கும்போது பக்கத்தில் இருக்கும் கடல்நீர்நாயின் கையை ஏன் பிடித்துக்கொள்கிறது, டிங்கு?
- அ. வமீதா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
கடல்நீர்நாய் (Sea Otter) குடும்பமாக வாழ்க்கையை நடத்தக் கூடியவை. நீரோட்டம் குறைவாக இருக்கும் என்பதால் ஓய்வெடுக்கும்போதும் தூங்கும்போதும் கெல்ப் காடுகள், கடல்தாவரங்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்கின்றன.
தூங்கும்போது நீரின் சுழற்சியால் குடும்பத்தை விட்டுத் தனியாகச் சென்றுவிடுவோமோ என்கிற பயம் அவற்றுக்கு இருப்பதால், அருகில் இருக்கும் கடல்நீர்நாயின் கையைப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன. இப்படிக் கைகளைப் பிடிக்கும்போது அவற்றுக்கு இடையே அன்பும் உருவாகிறது. அவரவர் குடும்பத்தைத் தவிர, வேறு கடல்நீர்நாயின் கைகளை இவை பிடிப்பதில்லை, வமீதா.
எங்கள் வீட்டுக்கு அருகில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு அலைந்து திரிகிறார். அவரைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. பிறக்கும்போது எல்லாரும் நன்றாகத்தான் இருக்கிறோம். பிறகு எப்படி இந்த நிலைக்கு ஒரு சிலர் மட்டும் ஆளாகிறார்கள், டிங்கு?
- கோ.வி. அவந்திகா, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
நீங்கள் சொல்வது உண்மைதான். பிறக்கும்போது எல்லாரும் மனநலத்துடன்தான் பிறக்கிறோம். தாங்க முடியாத இழப்பு, அதிர்ச்சி, ஏமாற்றம், விபத்து, நோய் போன்ற பல காரணங்களால் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்படலாம். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களை அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், நாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பெரும்பாலும் ஒதுக்கிவிடுகிறோம். அதனால்தான் நீங்கள் பார்ப்பவரைப் போன்று சிலர் அலைந்து திரிகிறார்கள். முன்பெல்லாம் மனநலம் தொடர்பான மருத்துவம் பெரிதாக இல்லை. இப்போது மருத்துவத்தின் உதவியுடனும் குடும்பத்தினரின் கனிவு, அக்கறையுடனும் இயல்பான மனநிலைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
அதனால், நீங்கள் குறிப்பிடுபவருக்கும் சிகிச்சை அளித்தால், அவர் குணமாகலாம். சமூகம் கைவிட்ட யாரோ ஒருவர் மீது, நீங்கள் காட்டும் அக்கறை மகிழ்ச்சியளிக்கிறது, அவந்திகா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT