Published : 15 Mar 2023 06:01 AM
Last Updated : 15 Mar 2023 06:01 AM
ஏன் ஆஸ்திரேலியாவில் மட்டும் வயிற்றில் பையுடைய விலங்குகள் இருக்கின்றன, டிங்கு?
- எம். நிரஞ்சனா தேவி, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
ஒரு காலத்தில் நிலப்பகுதி பிரியாமல் ஒரே கண்டமாக இருந்தது. அப்போது தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியாவின் சில பகுதிகளில் வயிற்றில் பையுடைய (மார்சுபியல்) விலங்குகள் பரிணமித்து வாழ்ந்து கொண்டிருந்தன. நிலப்பகுதி பிரிந்தபோது, ஆஸ்திரேலியா தனித் தீவுக் கண்டமாக மாறியது.
அதனால், மற்ற கண்டங்களில் இருந்து புதிய விலங்குகள் ஆஸ்திரேலியாவுக்கு வரவில்லை. எனவே மார்சுபியல் விலங்குகள் எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தென் அமெரிக்காவில் புதிய விலங்குகளின் வருகையால், நாளடைவில் மார்சுபியல் விலங்கு வகைகளில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன, நிரஞ்சனா தேவி.
டைம் மெஷின் இருந்தால், என் அப்பா என்னைப் போல் சிறுவனாக இருந்த காலத்துக்குச் சென்று அவருடைய குறும்புகளை ரசிப்பேன். உனக்கும் அப்படி ஓர் ஆசை இருக்கிறதா, டிங்கு?
- சி. அனிஷ், 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
உங்கள் கேள்வியே ரசிக்க வைக்கிறது, அனிஷ். எல்லாரும் பெற்றோரின் சுவாரசியமான சிறு வயது அனுபவங்களைக் கேட்டுத்தான் வளர்ந்திருப்போம். நானும் என் அப்பாவின் குறும்புகளை ரசித்திருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாகக் கேட்பதுபோல் அவ்வளவு சுவாரசியமாக இருக்கும். உங்கள் அப்பா, என் அப்பாவைப் போல் குறும்புகள் செய்த இரண்டு பேரின் அனுபவங்கள் புத்தகங்களாக வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று உலகப் புகழ்பெற்றது.
இதை ரஷ்ய எழுத்தாளர் அலெக்சாண்டர் ரஸ்கின், ‘When daddy was a little boy’ என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறார். ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ என்று தமிழிலும் வந்திருக்கிறது. இன்னொன்று ‘அம்மாவின் சேட்டைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சாலை செல்வம் இதே மாயாபஜாரில் தொடராக எழுதியிருக்கிறார். இரண்டையும் படித்துப் பாருங்கள். அட்டகாசமாக இருக்கும். உங்கள் அப்பாவின் சேட்டைகளை நீங்களும் ஒரு புத்தகமாக எழுதலாமே!
மச்சம் ஏன் உருவாகிறது? மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பது உண்மையா, டிங்கு?
- கி. ஆர்த்தி, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
தோலில் உள்ள மெலனோசைட்டுகள் மெலனின் என்கிற நிறமியை உற்பத்தி செய்கின்றன. இவற்றின் மூலமே தோலுக்குரிய நிறத்தைப் பெறுகிறோம். மெலனோசைட் செல்கள் கொத்தாக வளரும்போது, மச்சம் உருவாகிவிடுகிறது.
பெரும்பாலான மச்சங்கள் குழந்தைப் பருவத்தில் தோன்றுகின்றன. வளர வளர மச்சங்கள் மறைந்துவிடுகின்றன. சில மச்சங்கள் மட்டுமே வாழ்க்கை முழுவதும் இருக்கின்றன. மச்சங்களால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது வெறும் மூட நம்பிக்கைதான், ஆர்த்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment