Published : 13 Mar 2023 02:51 PM
Last Updated : 13 Mar 2023 02:51 PM
இன்று ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்றால் விமானத்தைப் பயன்படுத்தலாம். நேரம் இருந்தால் கப்பல் மூலம் சில நாள்கள் பயணம் செய்து, இலக்கை அடையலாம். உள்நாட்டில் என்றால் ரயில், பேருந்து, கார் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், ஆதிகாலத்தில் மக்கள் எவ்வாறு பயணம் செய்திருப்பார்கள்?
மனிதர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்கு ஆரம்பத்தில் தங்கள் கால்களையே நம்பியிருந்தனர். பிறகு வளர்ப்பு விலங்குகளின் மீது ஏறி, பயணம் செய்ய ஆரம்பித்தனர். அவ்வாறு பயணத்துக்குப் பயன்படுத்திய விலங்குகளில் முக்கியமானது குதிரை. மற்ற எந்த விலங்கையும்விட குதிரை வேகமாக ஓடும். நீண்ட தூரத்துக்கும் செல்லும். இந்தக் குதிரைகளை மனிதர்கள் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்பதற்கான விடை தற்போது ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.
பல்கேரியா, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியக சேகரிப்பில் இருந்த 200க்கும் மேற்பட்ட பழங்கால மனிதர்களின் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் வெண்கலக் காலத்தில் வசித்த மனிதர்களின் எலும்புகளில் குதிரை மீது பயணம் செய்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்திருக்கிறது. இந்த மனிதர்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்.
ஒரு மனிதர் குதிரை மீது சவாரி செய்தாரா என்பதை இடுப்பு, தொடை போன்ற எலும்புகளில் இருக்கும் 6 அடையாளங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புகளில் இந்த அடையாளங்கள் இருந்தன. இதன் மூலம் அப்போதே மனிதர்கள் குதிரைகளின் மீது பயணம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த ஆராய்ச்சிக்கு முன்பு, மனிதர்கள் குதிரைகளைப் பயன்படுத்தியதும் குதிரையின் பாலைப் பருகியதும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், குதிரையைப் பயன்படுத்தி, பயணம் செய்ததை இந்த ஆய்வுதான் முதல் முறையாக ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
குதிரைகளில் சவாரிதான் செய்திருக்கிறார்கள். குதிரைகளைப் போர்க்களத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT