Published : 22 Feb 2023 05:51 AM
Last Updated : 22 Feb 2023 05:51 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கேள்வி கேட்பது குற்றமா?

எரிமலை எப்படி உருவாகிறது, டிங்கு?

- பி. ஆஸ்டின் சிரில், 3-ம் வகுப்பு, சவுத் ரோட்டரி மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி, திருப்பூர்.

பாட்டிலுக்குள் இருக்கும்போது குளிர்பானம் அமைதியாக இருக்கிறது. நீங்கள் மூடியைத் திறக்கும்போது, உள்ளே அடைபட்டிருந்த கார்பன் டை ஆக்சைடு வாயு அழுத்தத்தோடு நுரையுடன் பொங்கி வெளியே வருகிறது அல்லவா! அதே மாதிரிதான் பூமிக்குள் இருக்கும் நெருப்புக் குழம்பு அதிக அழுத்தத்தின் காரணமாக, நிலத்தைப் பிளந்துகொண்டு வெளியே வருகிறது. பூமி பல அடுக்குகளால் ஆனது.

பூமியின் மேல் அடுக்கு (Crust) பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகள் எல்லா இடங்களிலும் திடமான பாறைகளாக இல்லை. சில இடங்களில் கொதிக்கும் பாறைக்குழம்பாகவும் (Magma) இருக்கிறது. இந்தப் பாறைக்குழம்பு மேலடுக்கின் இடுக்குகளில் சேரும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாறைக்குழம்பு அந்தப் பகுதியில் சேரும்போது, கடுமையான அழுத்தம் காரணமாக பூமியின் மேல் பகுதியை நோக்கிச் செல்லும்.

அப்போது மேலடுக்குப் பிளந்துகொண்டு, அதிக அழுத்தத்துடன் பாறைக்குழம்பை வெளியேற்றும். காற்றில் பாறைக்குழம்பு கோடிக்கணக்கான துண்டுகளாகச் சிதறும். தூசி போன்ற துகள்களில் இருந்து பெரிய பாறைகள்வரை குழம்பு மாற்றம் அடையும். இதைத்தான் எரிமலை வெடிப்பு என்கிறோம். வெடிப்புக்குப் பிறகு சில எரிமலைகள் செயலிழந்துவிடுகின்றன. செயல்பாட்டில் இருக்கும் சில எரிமலைகள் சூடான சிவப்பு எரிமலைக் குழம்பை (Lava) வெளியேற்றிக்கொண்டிருக்கின்றன, ஆஸ்டின் சிரில்.

எல்லாரும் என்னை முந்திரிக்கொட்டை என்கிறார்களே, கேள்வி கேட்பது ஒரு குற்றமா, டிங்கு?

- ச. திவ்யஸ்ரீ, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

‘கேள்வி கேட்பது’ எப்படிக் குற்றமாகும்? நானே உங்கள் கேள்விகளுக்குத்தானே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கேள்விகளைக் கேட்டு, பதில்களைத் தேடச் சொன்னதாலேயே புகழ்பெற்றவர் தத்துவஞானி சாக்ரடீஸ். புதிய விஷயங்களை மட்டுமே அவர் கேள்வி கேட்கச் சொல்லவில்லை. ஏற்கெனவே கண்டறியப்பட்ட விஷயங்களையும் கேள்விக்கு உள்படுத்த வேண்டும் என்கிறார். சிந்திக்கும்போதுதான் கேள்விகள் பிறக்கும்.

நல்ல கேள்விகளால்தான் சிறந்த பதில்கள் கிடைக்கும். அதனால் நீங்கள் தாராளமாகக் கேள்விகளைக் கேட்கலாம். பிறர் ‘முந்திரிக்கொட்டை’ என்று அழைப்பதால், கேள்வி கேட்பதை நிறுத்திவிடாதீர்கள், திவ்ய. உங்களைப் போன்ற கேள்வி கேட்பவர்களாலேயே இந்த உலகம் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x