Last Updated : 13 Feb, 2023 03:12 PM

 

Published : 13 Feb 2023 03:12 PM
Last Updated : 13 Feb 2023 03:12 PM

இந்திய கிரிக்கெட்டில் இன்று (13-02-2018): தென் ஆப்பிரிக்கா.. 27 ஆண்டுகள்.. ஒரு வெற்றி!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதனையை நிகழ்த்திய நாள் இன்று.

1960களில் தென் ஆப்பிரிக்கா பின்பற்றிய நிறவெறி கொள்கையால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது அந்த அணி. மீண்டும் 1991ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது. முதன்முறையாக 1991ஆம் ஆண்டில்தான் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்தியாவில் நடைபெற்ற அந்தத் தொடரை இந்தியா 2 - 1 என்ற கணக்கில் வென்றது.

இதன் தொடர்ச்சியாக 1992-93ஆம் ஆண்டில் இந்திய அணி முதன்முறையாகத் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றது. ஒரு நாள் தொடரை 2 - 5 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அதன் பிறகு இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் 2001, 2007, 2011, 2013 ஆகிய ஆண்டுளில் இரு தரப்பு தொடர்களில் தென் ஆப்பிரிக்க மண்ணில் மோதியிருக்கின்றன. இதில் 2001ஆம் ஆண்டில் 1 - 3, 2007ஆம் ஆண்டில் 0 - 4, 2011ஆம் ஆண்டில் 2 - 3, 2013ஆம் ஆண்டில் 0 - 2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தொடரை இழக்கவே செய்தது.

தொடர்ந்துவந்த இந்தச் சோதனைக்கு 2018ஆம் ஆண்டில் இந்திய ஒரு நாள் அணி முற்றுப்புள்ளி வைத்தது. 2018ஆம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. அதில் முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது. ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வென்றபோது, தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒரு நாள் தொடரை வென்ற சாதனையைப் படைத்தது!

அந்தச் சாதனை அரங்கேறிய நாள்தான் (13-02-2018) இன்று. ஒட்டுமொத்தமாக அந்தத் தொடரில் 5 - 1 என்ற கணக்கில் இந்தியா ஒரு நாள் தொடரை வென்று அசத்தியது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x