Published : 06 Feb 2023 06:05 PM
Last Updated : 06 Feb 2023 06:05 PM

மாதவிடாய் சுழற்சியைச் சீரமைக்க உதவும் சித்த மருத்துவ குறிப்புகள்

டாக்டர் க.தர்ஷினி பிரியா

பொதுவாக, பெண்கள் உடலில் முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் சுரப்பி சுரக்கும்; அடுத்த 14 நாட்கள் புரொஜெஸ்ட்ரோஜன் சுரப்பி சுரக்கும்; 28 ஆம் நாட்களின் முடிவில் மாதவிடாய் ஏற்படும். இதுவே இயல்பான மாதவிடாய் சுழற்சி.

ஆனால், எல்லோரின் உடல்வாகும் இந்த கணக்கோடு ஒத்துப்போவது இல்லை. இருப்பினும், 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். இதற்கு முன்னரோ பின்னரோ ஏற்பட்டால், அதுவே ஒழுங்கற்ற மாதவிடாய். பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை இது.

அறிகுறிகள்

  • ஐந்து நாட்களுக்கு மேல் நீடிக்கும் ரத்தபோக்கு
  • தொடர்ந்து வெகு நாட்களாகவோ, வெகு மாதங்களாகவோ மாதவிடாய் வராமல் இருப்பது
  • மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தபோக்கால் 4 (அ) 5 நாப்கின்களுக்கு மேல் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது
  • குறைந்தளவு மாதவிடாய் அதாவது ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல் ஏற்படுவது

காரணங்கள்

  • பாலிஸிஸ்டிக் ஓவேரியன் ஸின்ட்ரோம்
  • தைராய்டு சுரப்பி கோளாறு
  • ஹார்மோன் சரிவரச் சுரக்காமல் இருப்பது
  • மாதவிடாய் சுழற்சி முடியப்போகும் தறுவாயில் ஏற்படும் மனஅழுத்தம்
  • உடல்பருமன்

சித்த மருத்துவம் அளிக்கும் தீர்வுகள்

முதல் ஐந்து நாள்கள்: ஒரு பெண் மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து ஐந்தாவது நாள்கள்வரைக்கும் இயல்பாக மாதவிடாய் ஏற்படும் காலம். இக்காலக்கட்டத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பதால், பெண்களுக்கு இந்நாள்களில் ஓய்வு மிகவும் அவசியம். இந்நாள்களில் தினமும் எள்ளுருண்டை ஒன்றோ, இரண்டோ எடுத்துக்கொள்வது நல்லது. எள் விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது. இது மனித உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் போலவே செயல்படும். இந்த விதையில் வளமான துத்த நாகமும் இருப்பதால், மனித உடலில் உள்ள புரோஜஸ்ட்டிரோன் அளவை அது அதிகரிக்கும். இதன் காரணமாக, உடலில் ஹார்மோன் அளவு மேம்படும்; மாதவிடாய் சுழற்சியும் சீர்படும்.

6 முதல் 14 நாட்கள்: இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு ஃபாலிகுலார் கட்டம் (Follicular phase) நடைபெறும். இதில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு உயரும். இது பெண்களின் கருப்பையின் புறணி வளரவும், தடிமனாக இருக்கவும் உதவும். இதில் நுண்ணறை தூண்டுதல் ஹார்மோன் (Follicle stimulating hormone) காணப்படும். இந்த ஹார்மோன் கருப்பையில் உள்ள நுண்ணறைகள் வளர காரணமாக இருக்கின்றன. பத்து முதல் பதினான்கு நாட்களில் வளரும் நுண்ணறைகளில் ஒன்று முழுமையாக முதிர்ந்த முட்டையை (Mature egg) உருவாக்கும். இக்காலகட்டத்தில், பெண்கள் தினமும் காலையில் உளுந்துக் களியை சாப்பிடுவது நல்லது. அது இடுப்பு எலும்பை வலிமைப்படுத்தும்; எலும்புகளுக்குப் போதுமான அளவு சுண்ணாம்புச் சத்தை அளிக்கும்; இடுப்பு வலி ஏற்படுவதைத் தவிர்க்கும்; முக்கியமாக, ஆரோக்கியமான முதிர்ந்த முட்டையை உருவாக்க உதவும்.

டாக்டர் க.தர்ஷினி பிரியா

15 முதல் 28 நாட்கள்: 15 முதல் 28 நாள் வரை லூடியல் கட்டம் (luteal phase) நடைபெறும். முதிர்ச்சி அடைந்த முட்டை ஃபலோபியன் குழாய்கள் (Fallopian tubes) வழியாகக் கருப்பைக்குள் பயணிக்கும் காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் ப்ரோஜஸ்ட்டிரோன் எனும் ஹார்மோன் அளவு அதிகரித்துக் காணப்பட்டால் கர்ப்பத்துக்கு உடல் தயாராகிறது என்று அர்த்தம்; ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் குறைந்தால் அடுத்த மாதவிடாய் சுழற்சி ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.

இந்தக் காலகட்டத்தில் வெந்தயக் கஞ்சி தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கஞ்சியில் இருக்கும் ஐஸோஃப்ளேவோன்கள் (Isoflavones), ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களைப் போதுமான அளவில் சுரக்கச் செய்யும்; மாதவிடாய் சுழற்சியில் உதிரப்போக்கு இயல்பாக இருக்கவும் அது உதவும்

மேற்கூறிய வழிமுறைகளைப் பருவமெய்திய பெண்களும், ஒழுங்கற்ற மாதவிடாயால் அவதிப்படும் பெண்களும் பின்பற்றலாம். முக்கியமாக, இயல்பான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருக்கும் பெண்களும் இவ்வழிமுறைகளைப் பின்பற்றலாம். அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படச் சாத்தியமுள்ள மாதவிடாய் கோளாறுகளைத் தடுப்பதற்கு அது உதவும்.

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: dharshini874@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x