Published : 23 Jan 2023 06:38 AM
Last Updated : 23 Jan 2023 06:38 AM
சென்ற வாரம் சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா சென்னை வந்திருந்தார். கூடவே தன்னுடைய மகள் - அதாவது சே குவேராவின் பேத்தி - பேராசிரியர் எஸ்டெஃபானியா குவேராவையும் அழைத்துவந்திருந்தார். மருத்துவரான அலெய்டா குவேரா மனித உரிமைச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கிவருபவர். குறிப்பாக, உலக மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் கிடைக்கச் செய்வதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருப்பவர். அவரது சென்னை வருகை கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, பொதுத்தளத்திலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது.
கேரளா, தமிழ்நாடு, கொல்கத்தா என பயணித்து அவர் பல்வேறு சந்திப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். கடந்த வாரம் புதன்கிழமை சென்னையில் உள்ள ஏசிஜே (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம்) இதழியல் கல்லூரியில் மாணவர்களுடன்கலந்துரையாடலில் ஈடுபட்டார். ‘இந்து தமிழ் திசை’சார்பில் அந்நிகழ்வில் நானும் கலந்து கொண்டு அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.
தந்தை சே குவேரா குறித்த நினைவுகள், கியூபப் புரட்சி, அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு, பொருளாதாரச் சூழல், அமெரிக்காவுடனான மோதல் என பல விஷயங்களை இந்தக் கலந்துரையாடலிலும் அதையொட்டிய சந்திப்புகளிலும் அவர் பகிர்ந்துகொண்டார்...
உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டவை என்ன?
நான் சிறுவயதாக இருக்கும்போதே என்னுடைய தந்தை கொல்லப்பட்டுவிட்டார். அவரைப் பற்றி நான் அறிந்துகொண்டவையெல்லாம் என்னுடைய அம்மா வழியாகவும், என் தந்தையின் நண்பர்கள் வழியாகவும்தான். மேன்மையான மனிதனாக இருப்பதுதான் என்னுடைய தந்தையின் வாழ்க்கை லட்சியமாக இருந்துள்ளது.
நிறம், இனம், மொழி, மதம், வர்க்கத்தின் அடிப்படையில் சக மனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுவதை அவரால் சகித்துக்கொள்ள முடியாது. எவ்வளவு துன்பங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டாலும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடக்கூடியவர். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டஇந்த அற விழுமியங்கள்தான் என்னை வழிநடத்துகின்றன.
முதலாளித்துவத்துக்கு எதிரான கியூபாவின் பயணம் எப்படிப்பட்டது?
கியூபா மனிதநேயத்தை முன்னிறுத்தும் ஒரு நாடு. மனிதநேயத்தைதான் நாங்கள் வருங்கால தலைமுறையினரிடம் முதலீடு செய்கிறோம். ஒருமுறை சிறுமி ஒருவள், அவளது அம்மா மருத்துவப் பணிக்காக வெளியூருக்கு சென்றுவிட்டதால் அழுதுகொண்டிருந்தாள். “உன் அம்மா சே குவேரா போல்சக மனிதனுக்கு உதவுகிறார். அதற்கு நீ அழ வேண்டிய விஷயம் அல்ல. பெருமைப்பட வேண்டிய விஷயம்” என்று கூறினேன்.
இப்படித்தான் கியூபாவில் குழந்தைகளுக்கு மனிதத்தை விதைக்கிறோம். சக மனிதன் மீது அக்கறை செலுத்த, அவர்களது துயரத்தைப் புரிந்துகொள்ள எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம். இந்த அற விழுமியங்கள் வழியாகவே நாங்கள் முதலாளித்துவத்தை எதிர்த்துப் பயணிக்கிறோம்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் கியூபா முதன்மையான இடத்தில் உள்ளது. கியூபா நாடாளுமன்றத்தில் 52 சதவீதம் பேர் பெண்கள். இந்த சமூக மாற்றத்துக்கான தொடக்கப்புள்ளி எது?
கியூபாவில் கடந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் அனைத்து மாற்றத்துக்கும் 1950களில் நடந்த புரட்சிதான் அடிப்படைக் காரணம். அப்புரட்சிதான் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டியது. அப்புரட்சி வழியே பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகரித்தது. 1960-ல் கியூபப் பெண்களின் நிலையை மேம்படுத்த ‘கியூபப் பெண்கள் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டது. கியூபாவின் 90 சதவீத பெண்கள் இதன் உறுப்பினர்களானார்கள்.
இந்த அமைப்பு வழியாக கியூபாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம், அவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை கியூபா உறுதி செய்தது. பாலின பாகுபாடின்றி, சுயமரியாதையுடன் வாழுவதற்கான சூழல் கியூபாவில் உள்ளது. கல்வியை சமூக மாற்றத்துக்கான முக்கியமான கருவியாக பார்க்கிறோம். கல்வி வழியாக எங்கள் நாட்டை முன்னகர்த்திச் செல்கிறோம்.
மருத்துவக் கட்டமைப்பில் உலகின் மிகச் சிறந்த நாடாக கியூபா திகழ்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு மத்தியிலும் இது எப்படி சாத்தியமானது?
1950-களில் நடந்த கியூபப் புரட்சிக்குப் பிறகு நாங்கள் மிகப் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அமெரிக்கா மற்ற நாடுகளுடனான எங்களது வர்த்தக உறவைத் துண்டித்து எங்களை தனிமைப்படுத்தியது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எவ்வளவு மோசமானது என்பதை ஒரு உதாரணத்துடன் உங்களுக்குக் கூறுகிறேன். உலகில் அறிமுகம் செய்யப்படும் புதிய மருந்துகளில் பெரும்பாலானவைஅமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்படுபவை. அமெரிக்கா அந்த மருந்தை எங்களுக்கு விநியோகிக்காது. அதுமட்டுமல்ல,வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதேனும் எங்களுக்கு மருந்து விநியோகம் செய்தால் அந்த நிறுவனம் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிடும். அந்த அளவுக்கு அமெரிக்கா எங்களைத் தனிமைப்படுத்தியது.
ஒருநாள் என் மருத்துவமனையில் 8 மாதகுழந்தை உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டது. அமெரிக்க மருந்தால்தான் அந்தக் குழந்தையை காப்பாற்ற முடியும். ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் எங்களால் அந்த மருந்தை வாங்க முடியவில்லை. இதனால் அந்தக் குழந்தை இறந்துபோனது. இதுபோல பல துயர உதாரணங்கள் உள்ளன.இந்தச் சூழலில்தான் மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதில் மேலும் உறுதி கொண்டோம்.
மருத்துவம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை.மருத்துவத்தையும் கல்வியையும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பது எங்களது அடிப்படைக் கொள்கையாக இருந்தது.
நாங்கள் மருத்துவத் துறையில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டோம். அலோபதி மட்டுமல்லாது ஓமியோபதி, அக்குபஞ்சர் என பல மருத்துவ முறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். எங்கள் குழந்தைகளிடம் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி வளர்த்தோம்.
இன்று கியூபா 5 கரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்து உருவாக்கியுள்ளோம். பல்வேறு பெருநோய்களுக்கான மருத்துவ கண்டுபிடிப்புகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. வெளிநாடுகளுக்கு மருத்துவ உதவி வழங்க எங்கள் மருத்துவர்களை அனுப்பி வருகிறோம்.
அமெரிக்காவின் தடையால் இன்றுவரை நாங்கள் மிகப் பெரும் துயரை அனுபவித்து வருகிறோம். ஆனால், நாங்கள் அதற்கு அஞ்சி எங்கள் கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. நாங்கள் தற்போது பொருளாதாரரீதியாக பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்ளலாம். ஆனால், ஒருபோதும் எங்கள் மனிதநேயத்திலிருந்து விலகிவிட மாட்டோம்.
- riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT