Published : 20 Jan 2023 05:53 PM
Last Updated : 20 Jan 2023 05:53 PM
முன்பெல்லாம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் ஒரு சிலரே கண்ணாடி அணிந்திருப்பார்கள். ஆனால், இன்றோ பலர் கண்ணாடி அணிந்திருக்கும் சூழல் நிலவுகிறது. இத்தகைய அதிகரிப்புக்குக் கல்வியின் தற்போதைய சூழலே முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இன்றைய போட்டி சூழலில், குழந்தைகள் எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒருபுறம் அதிகமான வீட்டுப்பாடம். இன்னொருபுறம் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிவகுப்பு. அத்துடன் ஓவியம் போன்றவற்றிற்குச் சிறப்புப் பயிற்சி. எல்லாவற்றையும் முடித்துவிட்டு இரவு 9 மணிக்குமேல் வீட்டுக்குத் திரும்பியவுடன் மறுநாள் வீட்டுப்பாடம்; படித்துவிட்டுத் தூங்கப்போவதற்கு 11 அல்லது 12 மணியாகிவிடுகிறது. தூக்கம் பாதிக்கப்படும்போது நம் உடலின் சர்க்காடியன் இசைவு ( circadian rhythm) பாதிக்கப்படும்; விழித்திரையைப் பாதிக்கும்; கிட்டப்பார்வையையும் ஏற்படுத்தலாம்.
கிட்டப்பார்வை எப்படி ஏற்படுகிறது?
குழந்தைகள் வளரும்போது விழிக்கோளம் நீட்சி ( eyeball elongation) அடைவதால் கிட்டப்பார்வை ஏற்படுகிறது. இதனால் நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பம் கண்ணின் விழித்திரையில் விழாமல் விழித்திரைக்குச் சற்று முன்னதாகவே விழுகிறது. இதனால் பார்வை தெளிவில்லாமல் போகிறது.
குழந்தைக்குச் சிறுவயதில் ஏற்படும் கிட்டப்பார்வை, உயர் கிட்டப்பார்வைக்கு வழிவகுத்துவிடும். எனவே, குழந்தைப்பருவத்தில் கிட்டப்பார்வை ஏற்படுவதை தடுப்பதன்மூலமோ தள்ளிப்போடுவதன் மூலமோ உயர் கிட்டப்பார்வையினால் ஏற்படும் மோசமான பக்கவிளைவுகளிலிருந்து குழந்தைகளைக் காக்க முடியும்.
கரோனா தொற்றுக்குப் பின் கிட்டப்பார்வை அதிகரிப்பா?
கரோனா உலகளாவிய தொற்றின்போது, பொதுமுடக்கத்தினாலும், பள்ளிகள் மூடப்பட்டிருந்ததாலும் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கரோனா தொற்றிலிருந்து இது குழந்தைகளைப் பாதுகாத்திருந்தாலும் மறைமுகமாகக் கிட்டப்பார்வை பிரச்சினையை அதிகப்படுத்திவிட்டதாக உலகின் பல பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கரோனா பொதுமுடக்கத்தின்போது, குழந்தைகளிடையே திறன்பேசியின் பயன்பாடு அதிகரித்ததே இதற்கான முக்கிய காரணம் என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சூரியஒளியினால் ஏற்படும் பலன்கள்
வெளிப்புற சூழலில் இருக்கும்போது சூரிய ஒளியின் மூலம் டோபமைன் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் விழிக்கோளம் நீட்சி அடைவதைத் தடுக்கும்.
வெளிப்புற சூழலின் வெளிச்சம் வீட்டுக்குள் இருக்கும் செயற்கை ஒளியைவிட 100 மடங்கு அதிகமானது என்பதால், வெளிப்புற சூரிய ஒளியில் பார்வை மிகத்தெளிவாக இருக்கும்; வெவ்வேறு நிறங்களையும் நம்மால் சமமாகப் பிரித்துக் காணமுடியும். இதன் காரணமாக, வெளிப்புற சூழலில் நாம் கண்ணுக்கு அருகில் வைத்து வேலை செய்யும் தேவை மிகவும் குறைவாகவே இருக்கும்
விழிப்புணர்வு அவசியம்
கண்ணாடி மூலம் கிட்டப்பார்வைக்குத் தெளிவான பார்வை கிடைக்கும். விழிக்கோளம் நீட்சி அடைவதைக் கண்ணாடியால் தடுக்கவோ குறைக்கவோ முடியாது. கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுக்கவும், தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தமிழ்நாட்டில் 'கண்ணொளி காப்போம் திட்டம்' சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இத்துடன், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் வெளிப்புற சூழலில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், கண்பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கட்டுரையாளர், அரசு கண் மருத்துவ உதவியாளர் (வி.ஓய்வு)
தொடர்புக்கு: veera.opt@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT