Published : 20 Dec 2016 11:16 AM
Last Updated : 20 Dec 2016 11:16 AM
வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்காக வடகிழக்கு கவுன்சில் உருவாக்கப்பட்ட பிறகு, அப்பகுதியின் ஓர் அங்கமாக இணைந்தது சிக்கிம். அதற்கு முன்புவரை அது பிரிட்டிஷாரின் பொறுப்பில் தனித்துச் செயல்பட்டு வந்த அரசாட்சியாக இருந்தது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இப் பகுதியை ஆண்டவர்கள் சோக்யால் குடும்பத்தினரே. அப்போது ஒரு புறம் நேபாளம், மறுபுறம் பூட்டானால் தொடர்ந்த தாக்கப்பட்டுவந்தது சிக்கிம்.
இணைவதா, பிரிவதா?
பெளத்த மதத்தினர் பெரும்பான்மை யாக இருந்த இந்த நாட்டை திபெத் அரசுதான் பல ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வந்தது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சிக்கிமை அவர்கள் கைப்பற்றினார்கள். அப்போது அதற்கு விலையாக இன்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் டார்ஜிலிங் மாவட்டத்தைப் பிரிட்டிஷ் வங்காளத்துடன் இணைத்தனர்.
விடுதலை அடைந்தபோது மற்ற பிரிட்டிஷ் கால சமஸ்தானங்களைப் போலவே இங்கும் இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. அதில் பெரும்பான்மையினர் இந்தியாவுடன் சேரக் கூடாது என வாக்களித்தனர். அதனால் இந்தியாவின் பாதுகாப்பின்கீழ் இருந்த அரசாட்சி 1973 வரை நீடித்தது. சோக்யாலுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து இந்திய ராணுவம் தலையிட்டது. 1975-ல் சிக்கிம் பிரதமர் இந்தியாவுடன் நாட்டை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார். அப்போது ராணுவம் தலையிட்டு சோக்யாலின் படைகளை முறியடித்துத் தலைநகர் கேங்டாக்கை தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் சோக்யால் அரசை மீண்டும் பதவியில் அமர்த்த விரும்பவில்லை. மறைமுகமான வகையில் இவ்வாறு மக்கள் இந்தியாவுடன் சேர ஆதரவு தெரிவித்த நிலையில், 1975 மே 16 அன்று சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது. அரசாட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
கை குலுக்க வைத்தது வணிகம்
எனினும் திபெத் பகுதியின்மீது உரிமை கொண்டாடி வரும் சீனா, சிக்கிம் பகுதி இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு என்றே கூறியது. 2000-ல் பெளத்த மதத்தின் 17வது கரம்பா எனத் தலாய் லாமாவால் அறிவிக்கப்பட்டு, சீன அரசாலும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப் பட்ட டோர்ஜே திபெத்திலிருந்து தப்பித்துச் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ரும்டெக் மடாலயத்துக்கு வந்தபோது சீனா கொந்தளித்தது. பின்னர் 2003-ல் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலம் என சீனா அங்கீகரித்தது.
இதைத் தொடர்ந்து சீனா-இந்தியா வுக்கு இடையேயான முதல் தொடர்பாக 2006-ல் சிக்கிம்-சீன எல்லையில் உள்ள நாது லா பகுதி இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. இதே நாது லா வழியாகக் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குத் தரைவழியாக எளிதாகச் செல்வதற்கான ஏற்பாடுகளுக்கும் தற்போது சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
தூய்மையான மாநிலம்
நேபாளி இனத்தவர் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலம் மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்டதாக, கோவாவுக்கு அடுத்துச் சிறிய மாநிலமாக விளங்குகிறது. மேற்கில் நேபாளம், கிழக்கில் பூட்டான், வடக்கில் திபெத் சுயாட்சிப் பகுதி, தெற்கில் மேற்கு வங்கம் ஆகிய எல்லைகளைக் கொண்டது. இந்திய எல்லைக்குள் மிக உயர்ந்த இமயமலைச் சிகரமான கஞ்சன்சுங்கா இந்த மாநிலத்தின் நேபாள எல்லையை ஒட்டியே அமைந்துள்ளது.
பொது இடங்களில் காலைக்கடன் களைக் கழிக்கும் வழக்கத்தை ஒழிப்பதற்காக இன்று நாடு முழுவதும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 2008-லேயே மாநிலம் முழுவதும் முழுமையான கழிப் பறை வசதிகளை நிலைநாட்டித் தூய்மையான (நிர்மல்) மாநிலமாகச் சிக்கிம் தகுதி பெற்றிருந்தது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்துள்ள மாநிலமாகவும் திகழ்கிறது. மாநிலத்தில் 82.2% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
வடகிழக்குப் பகுதிக்கே உரிய பிரச்சினைகள் ஏதுமற்ற இந்த மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் சார்பில் 1994 தேர்தலில் பவன் குமார் சாம்லிங் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து முதல்வராக நீடிக்கிறார் என்பதே இந்த மாநிலத்தின் நிலைத்தன்மையைக் குறிப்பிடுவதாக அமைகிறது.
தனிச் சிறப்பு
14-ம் நூற்றாண்டில் திபெத் பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறிய பூட்டியா என்பவர்களே இப்பகுதியின் பூர்வக் குடிமக்கள். லெப்சா என்ற பழங்குடிப் பிரிவினர் தொலைதூரக் கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு குடியேறியவர்கள் ஆவர். நேபாளிகள் பெரும்பான்மையினராக உள்ளனர்.
நேபாளி மொழி அலுவல் மொழியாக இருந்தபோதிலும் பூட்டியா, லெப்சா ஆகிய மொழிகளும் மாநிலத்தின் பல பகுதிகளில் புழங்கிவருகின்றன. சுற்றுலாவுக்குப் பெயர்போன இந்த மாநிலத்தில் சங்கு லேக், நாது லா, ரும்டெக் பவுத்த மடாலயம் ஆகியவை புகழ்பெற்றவையாகும். நாது லா வழியாகக் கைலாஷ் மானசரோவர் யாத்திரையும் பரவலான ஆதரவைப் பெற்று வருகிறது. வண்ண மயமான பூச்செடிகள், பனி மூடிய மலைப்பகுதிகள் என இப்பகுதி சுற்றுலாப் பயணிகளைத் தொடர்ந்து கவர்ந்துவரும் மாநிலமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT