Published : 23 Dec 2022 06:34 AM
Last Updated : 23 Dec 2022 06:34 AM
மிஷ்கினுக்காக ஆண்ட்ரியா! - மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘பிசாசு 2’. கையில் ஆயுதமேந்தித் தவறான ஆண்களை வேட்டையாடும் பெருங்கோபம் கொண்ட பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்திருந்தார். ஆனால், மிஷ்கின் ரசிகர்களும் ஆண்ட்ரியா ரசிகர்களும் ‘பிசாசு 2’ படத்தை குழந்தைகளுடன் பார்க்க விரும்புகிறோம்.
எனவே அந்தக் காட்சியை நீக்கிவிட்டு, வன்முறைக் காட்சிகளையும் மட்டுப்படுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டதால், தற்போது படத்திலிருந்து அக்காட்சியைத் தூக்கிவிட்டார் மிஷ்கின். இதற்கிடையில் இப்படத்தை பிப்ரவரியில் வெளியிடத் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம், பூர்ணா நடிப்பில் ஆதித்யா இயக்கியுள்ள ‘டெவில்’ படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் மிஷ்கின். அவருக்காக அப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார் ஆண்ட்ரியா!
இருப்பைக் காட்டிய சங்கம்! - படத் தயாரிப்பாளர்களால் ‘புரொடியூசர் கவுன்சில்’ என்று அழைக்கப்படுவது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக இருக்கும் தாய்ச் சங்கமான இதன் செயல்பாடுகள் குறித்து கடந்த சில வருடங்களாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இரண்டு புதிய தயாரிப்பாளர் சங்கங்களும் கிளைத்தன. இவற்றையெல்லாம் தாண்டி, கரோனா காலத்தின் நெருக்கடிகளையும் சமாளித்து, செயல்பாடுகளில் உறுதியாக நின்றதில் தனது வலிமையை மீட்டெடுத்திருக்கிறது இச்சங்கம்.
25 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஆயுள்கால உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கும் விழாவை, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் சமீபத்தில் நடத்தியது. அதில் சங்கத்தின் தலைவர் முரளி, செயலாளர் ஆர். இராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் உறுப்பினர்கள் பெரும்பான்மையாகக் கலந்துகொண்டனர். இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ் தாணு, ராதாரவி ஆகியோரும் கலந்துகொண்டனர். அரசுக்கு சங்கத்தின் சார்பில் பல கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார்கள்.
அச்சத்தை விதைக்கும் சினிமா! - மூன்றாம் உலகப் போர் மூளுமானால் அது தண்ணீருக்கான யுத்தமாகத்தான் இருக்கும் என்று சொல்வதிலிருந்து வேறுபடுகிறார் ‘கலியுகம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரமோத் சுந்தர். “மூன்றாம் உலகப் போருக்கு பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ‘கலியுகம்' விவரிக்கிறது. போரின் பின் விளைவுகள், அதனால் உலக மக்கள் சந்திக்கவிருக்கும் இழப்புகள், நெருக்கடிகளுக்கு மத்தியில் பயணிக்கும் முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைக்கதை இது.
இது தண்ணீருக்காக மூளும் போர் அல்ல. இதுவொரு ‘போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லர்’” என்கிறார். ‘விக்ரம் வேதா', ‘நேர்கொண்ட பார்வை', ‘விட்னஸ்' ஆகிய படங்களில் நடித்து கலக்கிய ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரித்திருக்கும் இப்படத்துக்கு கே. ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment