Last Updated : 08 Nov, 2016 11:11 AM

 

Published : 08 Nov 2016 11:11 AM
Last Updated : 08 Nov 2016 11:11 AM

அக்டோபர் புரட்சியா, நவம்பர் புரட்சியா?

ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி மக்கள் புரட்சியால் 1917-ல் வீழ்த்தப்பட்டது. இந்தப் புரட்சியின் நூற்றாண்டு இந்த மாதம் தொடங்குகிறது. இது தொடர்பான செய்திகளைப் படிக்கும்போது, ‘நவம்பர் புரட்சி' என்று பெரும்பாலான இடங்களில் குறிப்பிடப்பட்டாலும், ‘அக்டோபர் புரட்சி' என்றும் அழைக்கப்படுகிறதே. அது ஏன்?

ரஷ்யாவில் 1917-ம் ஆண்டில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு மக்கள் புரட்சிகளால் ஜார் மன்னரின் சர்வாதிகார முடியாட்சி வீழ்த்தப்பட்டது. 1917-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் புரட்சி, முதலாளித்துவப் புரட்சி எனப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் வம்சத்தின் கடைசி மன்னரான இரண்டாம் நிக்கொலாய், தன் பதவியைத் துறந்தார். புதிய இடைக்கால அரசு அமைந்தது.

சோவியத்துகளின் எழுச்சி

இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, சோவியத்துகள் எனப்பட்ட தொழிலாளர் சங்கங்களில் நகர்ப்புறத் தொழிலாளர்கள் பெருமளவில் சேர்ந்தனர். இந்தத் தொழிலாளர் சங்கங்கள், இன்றைக்குள்ள யூனியனைப் போன்றவை. இடைக்கால ஆட்சியில் தங்களுக்குச் சிறப்பு உரிமைகள் தேவை என்று சோவியத்துகள் வலியுறுத்திவந்தனர். நாடு முழுவதும் அவர்களுக்கு வலுவான கட்டமைப்பு இருந்தது. போல்ஷ்விக் எனப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகளை சோவியத்துகள் ஆதரித்தனர். புரட்சியாளர்களான இடதுசாரிகள், இடைக்கால அரசைக் கடுமையாக விமர்சித்துவந்தனர்.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் விளாடிமிர் லெனின், லியோன் ட்ராட்ஸ்கி உள்ளிட்டோரின் வழிநடத்தலில், ரஷ்யாவின் தலைநகராக இருந்த பெட்ரோகிராட்டில் 1917 அக்டோபர் 25-ம் தேதி புரட்சி நடைபெற்றது. இதன் காரணமாக ரஷ்யாவின் இடைக்கால அரசு வீழ்ந்தது.

பிறகு நடைபெற்ற சோவியத்துகளின் மாநாட்டில், போல்ஷ்விக்குகளும் (கம்யூனிஸ்ட்) சோஷலிசப் புரட்சியாளர்களும் ஆட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு 1922-ல் சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியக் குடியரசு அமைக்கப்பட்டது. உலகின் முதல் சோஷலிச அரசு இதுவே!

முதல் புரட்சி

கார்ல் மார்க்ஸினுடைய பொதுவுடைமைக் கொள்கைகளின் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முதல் புரட்சி இது. மக்கள் பங்கேற்புடன் பொதுவுடைமை ஆட்சி அமைய முதல் பொறியாகத் திகந்த இந்தப் புரட்சி, உலக அரசியலில் மிக முக்கியப் திருப்புமுனை.

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்கள் போல்ஷ்விக் என்று அழைக்கப்படுவதால் ‘போல்ஷ்விக் புரட்சி’ என்றும், அக்டோபர் மாதம் நடைபெற்றதால் ‘மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சி’ என்றும், 25-ம் தேதி நடைபெற்றதால் ‘25-ம் நாள் எழுச்சி’ என்றும், கம்யூனிஸ்ட்களின் நிறம் சிவப்பு என்பதால் ‘சிவப்பு அக்டோபர்’ என்றும் பல்வேறு பெயர்களால் இந்தப் புரட்சி குறிப்பிடப்பட்டுவந்தது.

ரஷ்ய நாட்காட்டியின்படி 1917 அக்டோபர் 25-ம் நாள் இந்தப் புரட்சி நடைபெற்றது. அந்தக் காலத்தில் ரஷ்யா பின்பற்றிவந்தது பழைய ஜூலியன் நாட்காட்டி. இப்போது நாம் பின்பற்றுவது நவீன கிரிகோரிய நாட்காட்டி. புதிய நாட்காட்டியின்படி புரட்சி நடைபெற்ற நாள் நவம்பர் 7. எனவே தற்போது இந்தப் புரட்சி, நவம்பர் புரட்சி என்றே அழைக்கப்படுகிறது. நேற்றுடன் புரட்சி நடைபெற்று 99 ஆண்டுகள் நிறைவடைந்து, நூற்றாண்டு தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x