Published : 17 Oct 2022 06:39 AM
Last Updated : 17 Oct 2022 06:39 AM

நோபல் 2022 | பொருளாதாரம்: வங்கிகள் ஏன் நமக்கு அவசியம்?

2022-ம் ஆண்டுக்கான பொருளாதார பிரிவு நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கிறது. பென் எஸ்.பெர்னன்கி (68), டக்ளஸ் டபிள்யூ. டயமண்ட் (68), பிலிப் எச். டிப்விக் (67). வங்கிகள் ஏன் நமக்கு அவசியம், பொருளாதார இயக்கத்தில் வங்கிகள் எப்படி பங்கு வகிக்கின்றன, வங்கிகள் செயலிழக்கும்போது பொருளாதாரத்தில் என்ன நிகழும் என்பன குறித்த இவர்களது கோட்பாடுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு வழங்கப்படும் அளவுக்கு இவர்களது கோட்பாடுகளின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

முதல் உலகப் போர் முடிந்த சமயம். 1920-களின் முதல் பாதி. அமெரிக்கா உச்சபட்ச வளர்ச்சியில் இருந்தது. மக்களிடம் பணம் தண்ணியாகப் புழங்கியது. எங்கும் கேளிக்கைக் கொண்டாட்டங்கள்தான். முதல் உலகப் போரால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைத்துக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்துகொண்டிருந்தன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியில் பயணித்துக்கொண்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் பங்குச் சந்தைகள் ஏகபோக வளர்ச்சியில் இருந்தன. மக்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்கள். கடைக்குச் சென்று மளிகை சாமன்கள் வங்குவது
போல் பங்குகளை வாங்கிக்கொண்டிருந்தனர். பணம் இருப்பவர்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்களும் வங்கிகளில் கடன் பெற்று பங்குகள் வாங்கிக்கொண்டிருந்தனர். பங்குகள் வழியாக நிறுவனங்களிடம் முதலீடு அதிகரித்த நிலையில், நிறுவனங்கள் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்தன.

சூழல் மெல்ல மாறத் தொடங்கியது. முதல் உலகப் போரின் தாக்கத்திலிருந்து ஐரோப்பிய நாடுகள் மெல்ல விடுபட்ட நிலையில் அந்நாடுகளில் தொழில் உற்பத்தி அதிகரித்தது. இதனால், அந்நாடுகள் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்தன. விளைவாக, தேவைக்குமிக அதிமாக பொருள்களை உற்பத்தி செய்த அமெரிக்க நிறுவனங்கள் தடுமாற்றத்தை சந்திக்கத் தொடங்கின. அந்தத் தடுமாற்றம் மெல்ல மெல்ல இழப்பாக மாறியது. அந்த இழப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பில் பிரதிபலிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலை சமாளிக்க இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்படலானது. பங்குச் சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியதும் ஓட்டுமொத்த அமெரிக்காவிலும் அச்சம் படரத் தொடங்கியது. மக்கள் ஒருவர் முகத்தை ஒருவர் அச்சமும் பதற்றமும் கலந்த தொனியில் பார்த்தனர். 1929 அக்டோபர் மாதம். அமெரிக்காவில் பொருளாதாரப் பேரழிவுக் காலகட்டம் தொடங்கியது. பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்ததையடுத்து வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகின. ஏனென்றால், வங்கிகள் கடன்களை வாரி இறைத்திருந்தன. நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகினால், கொடுத்த கடன் எப்படி திரும்ப வரும்? வங்கிகளில் பணம் போட்டிருந்த மக்கள், பேரலையாக வங்கிகளை நோக்கி படையெடுத்தனர். தங்கள் பணத்தைத் தரும்படி அவர்கள் கேட்டனர். வங்கிகள் கைவிரித்தன.

1920-களின் முற்பாதியில் செல்வச் செழிப்புடனும், கேளிக்கைக் கொண்டாட்டங்கள் நிறைந்த நாடாக இருந்த அமெரிக்கா, 1929-க்குப் பிறகு தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளானது. பூகம்பம், பெரும்புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுத்தும் அழிவுகளை நம் கண்களால் பார்க்க முடியும். கட்டிடங்கள் உருக்குலைந்திருக்கும்; சாலைகள், பாலங்கள் உடைந்து நொறுங்கி இருக்கும்; மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கும்; மின்கம்பங்கள் வளைந்து வீதியில் கிடக்கும். பொருளாதாரப் பேரழிவானது அப்படியானது அல்ல. அதனால், அதன் தீவிரத்தை புரிந்து கொள்வது சிரமம். ஆனால், பெரும் இயற்கைப் பேரழிவுக்கு நிகரான ஒன்றுதான் 1929-1939 வரையில் நீடித்த பொருளாதாரப் பேரழிவு. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் எல்லா துறைகளும் மிகப்பெரும் சரிவுக்கு உள்ளாகின. முதலீடு செய்ய பணம் இல்லாமல் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். வங்கிகள் திவாலாகி படிப்படியாக மூடப்படலாயின. இக்காலகட்டம் குறித்து பிற்பாடு மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள், அமெரிக்க அரசு பணத்தை கூடுதலாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டிருந்தால் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே வங்கிகள் வீழ்ச்சி அடைந்தன என்றும் கூறின. 1983-ல் பெர்னன்கியின், பொருளாதார இயக்கத்துக்கு வங்கிகளின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ஆய்வுக் கட்டுரை வெளிவரும் வரையில் இதுவே பொதுப் பார்வையாக நிலைப்பெற்றிருந்தது.

பெர்னன்கியின் பங்களிப்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகள் வீழவில்லை. வங்கிகள் வீழ்ந்ததன் காரணமாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்று பொருளாதாரப் பேரழிவு காலகட்டம் குறித்த தனது ஆய்வுக் கட்டுரையில் பெர்னன்கி தர்க்கரீதியாக நிரூபித்தார். வங்கிகள் குறித்து அதுவரையிலான பார்வையில் இது மிகப் பெரும் திருப்புமுனையாக இருந்தது. பொருளாதாரப் பேரழிவுக் காலகட்டத்தில், வங்கிகள் திவால் நிலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றன என்ற பயத்தில் மக்கள் வங்கிகளில்குவிந்தனர். இதனால், வங்கிகள் முற்றிலும் செயலிழந்தன. வங்கிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டிருக்கும்பட்சத்தில், பொருளாதார நெருக்கடி தீவிரமடை வதைத் தடுத்திருக்க முடியும் என்பதே அவரது ஆய்வின் சாராம்சம். வங்கிகள் செயல்பாட்டில் இருக்கும்போதுதான் நாட்டின் பொருளாதாரம் தொடர் இயக்கத்தில் இருக்கும். அதாவது, நிறுவனங்கள் தொழில் செயல்பாடுகளுக்கு முதலீடு செய்யும். பொருளாதார இயக்கத்தை நாம் தக்கவைத்திருக்கும் பட்சத்தில், அது பெரும் சரிவைத் தடுக்கக்கூடியதாக அமைந்திருக்கும். நாம் வங்கிகளை வீழ விடும்போது, அது ஒட்டு
மொத்த பொருளாதார இயக்கத்தையும் சரிவுக்கு இட்டுச் செல்கிறது. பொருளாதார நெருக்கடி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், அதன் தீவிரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

அதற்குவங்கிகளின் இருப்பு மிக அவசியம் என்பதை அவர் தன் ஆய்வின் வழியே நிரூபித்தார்.அந்தக் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்திக்காட்டும் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது. 2006 – 2014 வரையில் அவர் அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவராக இருந்தார். இந்த சமயத்தில்தான், உலகில் மீண்டும் ஒரு மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி (2008-2009) ஏற்பட்டது. 1929-ல் ஏற்பட்டது போலவே, பங்குச் சந்தை மிகப்பெரும் சரிவுக்கு உள்ளானது. 1929-ம் ஆண்டுபோல் அல்லாது, 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியின் பாதிப்பு உலக நாடுகளில் உடனடியாகவே பிரதிபலித்தது. பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த சாமானியர்கள் அதில் ஏற்பட்ட இழப்பால் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறின.

இந்தக் காலகட்டத்தில் நம் வீட்டருகே இருக்கும் எவரேனும் ஒருவர் பணத்தை இழந்து பெரும் கடனில் மூழ்கிய கதைகளை நாமே கேட்டிருப்போம். அந்தளவுக்கு உலக அளவில் தீவிரமான தாக்கத்தை 2008 பங்குச் சந்தையின் வீழ்ச்சி ஏற்படுத்தியது. எனினும், 1929-ல் நீடித்ததுபோல், பொருளாதார நெருக்கடி இம்முறை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. இதற்கு, பெடரல் ரிசர்வின் தலைவராக பெர்னன்கி மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என்று கூறப்படுகின்றன. அவர் முதற்கட்டமாக வங்கிகள் வீழ்வதைத் தடுத்தார். பெரும் நிதி வழங்கி வீழ்ச்சியிலிருந்து அவற்றை மீட்டெடுத்தார். அதன் காரணமாகவே, 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர். அதேபோல், 2020-ல் கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் அவரது கோட்பாடு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பங்களிப்புக்காகவே அவருக்கு இவ்வாண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.

டக்ளஸ் டயமண்ட், பிலிப் டிப்விக் பங்களிப்பு: வங்கிகள் ஏன் ஒரு சமூகத்தில் இருக்கின்றன? வங்கிகள் இல்லாவிட்டால் என்ன ஆகும்? இரு தரப்பினரை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு தரப்பினர் தங்கள் கையில் உள்ள பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். மற்றொரு தரப்பினருக்கு தொழில் செய்ய கடன் தேவை இருக்கிறது. பணத்தை சேமிக்க விரும்பும் மக்கள், கடன் தேவைப்படும் நிறுவனங்களைக் கண்டுபிடித்து தங்கள் சேமிப்பை கொடுக்க முடியுமா? அதேபோல், கடன் தேவைப்படும் பெருநிறுவனங்கள், சேமிக்க விரும்பும் மக்களைத் தேடிப்பிடித்துஎங்களுக்கு கடன் தாருங்கள் என்று கேட்க முடியுமா? அப்படி கண்டுபிடித்தாலும், எவ்வளவுதான் அந்நிறுவனங்களால் வாங்கிவிட முடியும்? இந்த இடத்தில்தான் வங்கி என்ற அமைப்பின் முக்கியத்துவம் தொடங்குகிறது. சேமிக்க விரும்புகிறவர்களுக்கும் கடன் பெற விரும்புகிறவர்களுக்கும் இடையில் பாலமாக வங்கிகள் செயல்படுகின்றன.

சேமிக்க விரும்புகிறவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதை கடன் தேவைப்படுபவர்களுக்கு வங்கிகள் வழங்குகின்றன. வங்கி என்ற அமைப்பு இருப்பதனால்தான் சேமிப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில்தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடிகிறது. கடன் பெற விரும்புகிறவர்கள் நீண்டகால அடிப்படையில் கடன்பெற முடிகிறது. அந்த வகையில் வங்கிகள் மக்களின் சேமிப்பை, பொருளாதார இயக்கத்துக்கான ஆற்றலாக மாற்றுகின்றன. வங்கி என்ற அமைப்பு இல்லாவிட்டால், இந்த மடைமாற்றம் சாத்தியமில்லை என்பதே டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் இருவர் இணைந்து 1983-ல் உருவாக்கிய கோட்பாட்டின் சாராம்சம். வங்கி போன்ற அமைப்பினால் மட்டுமே கடன்களை பல்வேறு துறைகளுக்கு பகிர்ந்தளிக்க முடியும்.

அப்படி கடனை பல்வேறு துறைகளுக்கு பகிர்ந்து அளிப்பதனாலேயே, ஏதேனும் ஒரு துறை நெருக்கடிக்கு உள்ளாகும் சமயத்தில், மற்ற துறைகளிலிருந்து திரும்பி வரும் கடன் தொகையைக் கொண்டு வங்கியால் தாக்குப்பிடித்து நிற்க முடிகிறது. அதேபோல், நிறுவனங்கள் வாங்கிய கடனை உறுதியளித்த விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனவா என்பதை வங்கி என்ற அமைப்பால்தான் கண்காணிக்க முடியும் என்று டக்ளஸ் டயமண்ட் 1984-ல் தனியே ஒரு ஆய்வில் முன்வைத்தார். பெர்னன்கி 1983-ல் தனது ஆய்வுக் கட்டுரையில், வங்கிகள் ஏன் பொருளாதார இயக்கத்துக்கு இன்றிமையாதது என்பதை நிரூபித்தார் என்றால், டக்ளஸ் மற்றும் டிப்விக் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் வங்கிகள் வழியே எப்படி பொருளாதாரம் இயங்குகிறது என்பதை நிரூபித்தனர். மேலும், வங்கிகள் திவாலாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் முன்வைத்தனர்.

வங்கி திவால் ஆகிக்கொண்டிருக்கிறது என்று மக்களிடம் வதந்தி பரவும் சமயத்தில் என்ன நடக்கும்? வங்கியில் போட்டிருந்த தங்கள் பணத்தை எடுக்க மக்கள் ஒரே நேரத்தில் வங்கியை நோக்கிப் படையெடுப்பார்கள். அப்படி அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டால் என்ன ஆகும்? வங்கியால் திருப்பிச் செலுத்த முடியாது. ஏனென்றால், நம்முடைய பணத்தை வங்கிகள் கடனாக வெளியே கொடுத்திருக்கின்றன. ஒரு பங்கு மட்டுமே வங்கியில் இருப்பாக இருக்கும். இந்த மாதிரியான சூழல்தான் 1929-ல் ஏற்பட்டது. இத்தகையச் சூழல் ஏற்படுவதைத் தடுக்க மக்களின் சேமிப்புத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அரசு காப்பீடு வழங்குவது தீர்வாக அமையும் என்று அவர்கள் தங்கள் ஆய்வில் முன்வைத்தனர்.

நெருக்கடியை எதிர்கொள்ள உதவியவர்கள்: 1980-களில் இந்த மூன்று பொருளாதார அறிஞர்கள் முன்வைத்த கோட்பாடுகள், இப்போது எளிமையானவையாக தோன்றலாம். ஆனால், அவர்கள் தங்கள் கோட்பாடுகளை உருவாக்குவதற்கு முன்பு வரையில், நாட்டின் பொருளாதார இயக்கத்தில் வங்கிகளின் முக்கியத்துவம் குறித்த புரிதல் தெளிவாக முன்வைக்கப்படவில்லை. இம்மூவர்தான் பொருளாதார இயக்கத்துக்கும் வங்கியின் இருப்புக்கும் இடையிலான தொடர்பை கோட்பாட்டாக்கம் செய்தனர். அதன் அடிப்படையிலேயே, இம்மூவரின் ஆய்வுகள் உலக நாடுகள் தங்கள் வங்கிகள் சார்ந்து மேம்பட்ட கொள்கைகளை உருவாக்குவதற்கும், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கும் உதவியாக அமைந்தன என்று நோபல் தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது. பெர்னன்கி தற்போது வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனத்திலும், டக்ளஸ் டயமண்ட் சிகாகோ பல்கலைக்கழகத்திலும், பிலிப் டிப்விக் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிகின்றனர். இம்மூவருக்கும் நம் வாழ்த்துகள்! - riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x