Published : 16 Oct 2022 12:05 PM
Last Updated : 16 Oct 2022 12:05 PM
இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் வெளிவந்துள்ள டாடா ஏஐஏ இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஆய்வு பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தைக் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. அந்த ஆய்வு முடிவின்படி வேலைக்குச் செல்லும் பெண்களில் 65சதவீதத்தினர் பொருளாதாரரீதியான முடிவைச் சுயமாக எடுப்பதில்லை என்கிறது. திருமணமான பெண்களில் 89 சதவீதத்தினர் இம்மாதிரி முடிவு எடுக்கத் தங்கள் கணவரையே சார்ந்திருக்கிறார்கள். இந்த ஆய்வு ‘இந்தியாவில் பெண்களின் பொருளாதார விழிப்புணர்வு’ என்கிற தலைப்பில் 18 நகரங்களில் நடத்தப்பட்டது. 22லிருந்து 55 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேலை தரும் பிங்க் ஆட்டோ
பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பெண்கள் ஓட்டும் வகையிலான ‘பிங்க் ரிக்ஷா’ ஆட்டோ திட்டத்தை கோவா மாநில அரசு தொடங்கியுள்ளது. கோவா மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இதன் மூலம் பெண்களின் பொருளாதார அதிகாரம் வலுப்பெறும் என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இப்போது இந்தத் திட்டத்தின்கீழ் 17 பெண்கள் தேர்வுசெய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. முதல் கட்டமாகப் பயிற்சி முடித்த பெண்களில் 14 பேர் இந்த பிங்க் ஆட்டோவை ஓட்டத் தயாராகியுள்ளனர். இந்தத் திட்டம் இந்தியாவில் முதன் முதலாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கப்பட்டது. அசாம், ஒடிசா, ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சில நகரங்களில் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT