Last Updated : 15 Oct, 2022 02:38 PM

1  

Published : 15 Oct 2022 02:38 PM
Last Updated : 15 Oct 2022 02:38 PM

பெருகும் மக்கள்தொகை, அருகும் காட்டுயிர்கள் - லிவிங் பிளானட் அறிக்கை எச்சரிக்கை

லிவிங் பிளானட் அறிக்கை 2022

மனிதக்குலத்தின் வளர்ந்துவரும் தேவைகள் நம்மைத் தாங்கும் பூமியின் ஒட்டுமொத்த திறனைவிட அதிகமாக உள்ளன. இந்தச் சூழலில்தான், நாம் வாழும் பூமியின் ஆரோக்கியம், மனித நடவடிக்கைகளின் தாக்கம் ஆகியவற்றை உலக இயற்கை நிதியம் (WWF) அறிவியலின் அடிப்படையில் தொடர்ந்து பகுப்பாய்ந்து வருகிறது. அந்தப் பகுப்பாய்வின் அடிப்பையில், ’லிவிங் பிளானட் ரிப்போர்ட்’(LPF) எனும் அறிக்கையை அது 1998முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடுகிறது. அதன் சமீபத்திய அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கை, எத்தகைய பேரழிவின் நடுவில் இப்புவி உள்ளது என்பதை அது நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

’லிவிங் பிளானட் ரிப்போர்ட் – 2022இன் படி, ஒரு மனிதரின் சராசரி வாழ்நாளுக்குள் காட்டுயிர்களின் மொத்த எண்ணிக்கை 69 சதவீதம் குறைந்துள்ளது. நன்னீர் உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை 83 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நமது வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே நாம் எப்படி அழித்து வருகிறோம் என்பதை இந்த அறிக்கை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. முக்கியமாக, இந்த நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டியிருக்கிறது என்பதை அது உணர்த்துகிறது. இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை இனியும் நாம் தாமதிக்க முடியாது என்பதே அந்த அறிக்கை உணர்த்தும் சேதி.

பல்லுயிர் அழிவு

1970 முதல் கண்காணிக்கப்பட்டு வரும் காட்டுயிர்கள், பாலூட்டிகள், பறவைகள், நீர்வாழ்விகள், ஊர்வன, மீன் போன்றவற்றின் எண்ணிக்கை சராசரியாக 69 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நம்மால் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. இது இயற்கை அமைப்பின் இன்றைய அவல நிலையை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பல்லுயிர் அழிவைத் தடுத்து, அவற்றை மீட்டெடுப்பதற்குத் தேவைப்படும் அவசர நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கை அரசாங்கங்களையும், தொழில் நிறுவனங்களையும், பொதுமக்களையும் எச்சரிக்கிறது.

நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல்

WWF-ன் சர்வதேச இயக்குநர் மார்கோ லம்பெர்டினி, அறிக்கையின் சாராம்சத்தைப் பற்றிக் கூறுகையில், "மனிதர்களின் செயல்களால் ஏற்பட்டு இருக்கும் காலநிலை மாற்றமும் பல்லுயிர் இழப்பும் நமது இன்றைய நல்வாழ்வுக்கு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் அச்சுறுத்தும் விதமாக வளர்ந்துநிற்கிறது. காட்டுயிர்களின் எண்ணிக்கையில் அழிவுக்கு உள்ளாகும் வீழ்ச்சியைக் காட்டும் இந்த அறிக்கையின் தரவுகள் எங்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளன. குறிப்பாக, உலகில் உள்ள பல பல்லுயிர்களின் முக்கிய வாழிடமாகத் திகழும் வெப்பமண்டலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.

வெப்பமண்டலப் பகுதிகளின் நிலை

லிவிங் பிளானட் அறிக்கையின் அங்கமாக இருக்கும் ZSL (லண்டன் விலங்கியல் சங்கம்) அறிக்கை, 5,230 பேரினங்களின் 32,000 இனங்கள் குறித்த தரவு தொகுப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின்படி, வெப்பமண்டலப் பகுதிகளில் கணக்கெடுக்கப்பட்ட முதுகெலும்புள்ள காட்டுயிர்களின் எண்ணிக்கை மிக மோசமான சரிவை சந்தித்திருக்கிறது. மிகுந்த அதிர்ச்சியூட்டு வீழ்ச்சி விகிதம் இது. குறிப்பாக, 1970 - 2018க்கு இடையிலான காலகட்டத்தில், லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிராந்தியம் ஆகியவற்றில் கண்காணிக்கப்பட்ட காட்டுயிர்களின் எண்ணிக்கை சராசரியாக 94% குறைந்துள்ளது.

முக்கிய காரணிகள்

வாழ்விட சீ ரழிவு, வாழ்விட இழப்பு, வெளிநாட்டு உயிரினங்களின் அறிமுகம், மாசுபாடு, காலநிலை மாற்றம், நோய்கள் ஆகியவையே உலகெங்கிலும், காட்டுயிர்களின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணிகள் என அந்த அறிக்கை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. இவற்றின் காரணமாக, காட்டுயிர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஆப்பிரிக்காவின் ஒரு சில பகுதிகளில் 66 சதவீதமும், ஆசியா பசிபிக்கில் 55 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு சராசரி மனித ஆயுளுக்கும் குறைவான காலத்தில் கண்காணிக்கப்பட்ட நன்னீர் உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 83 சதவீதம் குறைந்திருப்பது என்பது, மற்ற உயிரினங்களின் இழப்பைக் காட்டிலும் மிகப்பெரியது.

கூட்டு அணுகுமுறை

WWF – இந்தியாவின் பொதுச் செயலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. ரவி சிங் இது குறித்துக் கூறுகையில் "காலநிலை மாற்றமும் பல்லுயிர் இழப்பும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மட்டும் இல்லை. அவை பொருளாதாரம், மேம்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சமூகப் பிரச்சினை. உடனடியாக அவை கவனிக்கப்பட வேண்டும். நமது செயல்களால் ஏற்படும் விளைவுகளும், நன்மைகளும் சமூக ரீதியாக நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கூட்டு அணுகுமுறையும், நிலையான அணுகுமுறையும் மிகவும் அவசியம்” என்று தெரிவித்தார்.

முதன்மையான இலக்கு

உலகின் பாதிப் பொருளாதாரமும், கோடிக்கணக்கான மக்களும் இயற்கையையே நேரடியாக நம்பியுள்ளனர். இந்தச் சூழலில் காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு ஆகிய இரட்டை அவசரநிலைகள் இன்று பூமியின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றன. பேரழிவுக்கு வித்திடும் இந்த இரண்டு நெருக்கடிகளுக்கு நமது செயல்பாடுகளே முக்கிய காரணம். காலநிலை மாற்றத்தையும் பல்லுயிர் இழப்பையும் நாம் இனியும் இரண்டு தனித்தனி பிரச்சினைகளாகக் கருத முடியாது. தனித்தனியாக அணுகினால் நம்மால் எந்த பிரச்சினையையும் சரிவரத் தீர்க்க இயலாது.

அதிகரித்து வரும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல், பொதுச் சுகாதார நெருக்கடி ஆகியவற்றைச் சமாளிக்க, பல்லுயிர் இழப்புகளைத் தடுப்பதும், முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதும் உலகளாவிய இலக்குகளில் முதன்மையானதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்கள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள், நிர்வாகம், பாதுகாப்பு தலைமைத்துவத்தை அங்கீகரிக்காமல், மதிக்காமல், இயற்கைக்குச் சாதகமான எதிர்காலத்தை வழங்க முடியாது என்பதை இந்த அறிக்கை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. இதை நாமும் அரசாங்கங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x