Published : 10 May 2016 12:33 PM
Last Updated : 10 May 2016 12:33 PM
என்னதான் புதிய புதிய துறைகளும் வேலைகளும் நாள்தோறும் உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றும் பலர் மனதில் ஐஏஎஸ் ஆகும் கனவு சிறகடித்துப் பறந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு வேலைகளில் உச்சபட்ச பதவி அடைய சிவில் சர்வீஸஸ் என்றழைக்கப்படும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதுவது சிறந்த வழி எனலாம். வரும் ஆகஸ்ட் 7-ல் நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸஸ் பிரிலிம்ஸ் எனப்படும் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு இதோ வந்துவிட்டது. இந்தத் தேர்வு தொடர்பான தகுதி, பாடத் திட்டம், தேர்வு விவரங்கள், தேர்வு நடத்தப்படும் முறை ஆகியவை குறித்த அத்தனை தகவல்களையும் ஆண்டுதோறும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடுகிறது. அதே போல இந்தாண்டும் வந்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் முதன்மை தேர்வில் இடம்பெறும் விறுப்ப தேர்வு தாளில் தற்போது அமல்படுத்தவில்லை. சென்ற ஆண்டு நடத்தப்பட்ட அதே முறையில்தான் இம்முறையும் நடக்கவிருக்கிறது.
பிரிலிம்ஸ் எழுவது எப்படி?
யுபிஎஸ்சி தேர்வில் உள்ள மூன்று அடுக்கு தேர்வுகளில் முதலாவது பிரிலிம்ஸ். முதல் கட்டத் தேர்வான பிரிலிம்ஸ்-ஐ எதிர்கொள்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
முதலில் ஆன்லைன் விண்ணப்பத்தை யூபிஎஸ்சி இணையதளமான >www.upsconline.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 27 மே 2016. 1076 காலி இடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிலிம்ஸ் தேர்வில் வெல்லத் தொடர்ந்து சொல்லப்படும் மந்திரம், கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஜிஎஸ் (General Studies) பொது ஆய்வுகள் தேர்வுத் தாள்களை வைத்துத் தயாராவதுதான். யுபிஎஸ்சி அமைப்பானது சிவில் சர்வீஸ் மட்டுமல்லாமல் எஸ்எஸ்சி, சிஏபிஎஃப் போன்ற பல தேர்வுகளை நடத்துகிறது. அவற்றிலும் பொது ஆய்வுகள் கேள்வித்தாள் உண்டு. சொல்லப்போனால் யுபிஎஸ்சி இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் மீண்டும் மீண்டும் கேள்வித் தாளை வடிவமைக்கிறது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகையால் இந்தத் தேர்வுகளின் ஜிஎஸ்- களை வைத்துப் பயிற்சி மேற்கொள்வது உச்சிதம். இந்தக் கேள்வித் தாள்கள் அனைத்தும் யுபிஎஸ்சி இணையதளத்தில் உள்ளன. இதைவிட்டுவிட்டு வியாபார நோக்கத்துக்காகப் பயிற்சி மையங்கள் சொல்லும் அத்தனையும் படித்துக்கொண்டே இருப்பதில் பிரயோஜனம் இல்லை.
மனதில் நிறுத்த வேண்டியவை
தற்போது ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் (இந்திய வனப் பணி) ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் பொதுவான பிரிலிம்ஸ் தேர்வுதான். ஆகையால் சுற்றுச்சூழல், சூழலியல், அடிப்படை அறிவியல் தொடர்பாகப் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்து, அறிவியல் பின்புலத்திலிருந்து வந்து பரீட்சை எழுதுபவர்களுக்கு வரலாறு, அரசியல், பொருளாதாரம் குறித்துக் கடினமான நுணுக்கமான கேள்விகளை எதிர்கொள்வது சவாலாக இருப்பதால் அவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பொது நிகழ்வுகள், சமகாலச் செய்திகள் தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.
எப்படித் தயாராகலாம்?
பொது அறிவு குறித்துக் கேட்கப்படுபவை பெரும்பாலும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த தேச, சர்வதேசச் சம்பவங்கள்தான். அதே நேரத்தில் வெறும் புள்ளிவிவரங்களாகவும் தகவல்களாவும் மட்டும் படித்தால் போதாது. ஒரு செய்தியின் வெவ்வேறு கோணங்களைக் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொண்டு படிப்பது நல்லது.
பண்டைய, மத்தியக் கால இந்திய வரலாற்றைச் சமூக, கலாசார, சமய அடிப்படையில் ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
நவீன இந்திய வரலாற்றில் விடுதலைப் போராட்டம், அரசியலமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும், சமூக மத இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு ஆகியவை குறித்த தெளிவான புரிதல் தேவை.
புவியியலில் அத்துப்படியாக பொதுத் தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) 6-ம் வகுப்பு முதல் +2 வரையிலான புவியியல் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மை, தொழிற்துறை, சேவைத் துறைகளின் அத்தனை செயல்பாடுகளையும் ஊன்றிக் கவனிப்பது முக்கியம். இதைக் காட்டிலும் பட்ஜெட், பொருளாதாரக் கணக்கெடுப்பு குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
பொது அறிவியலில் என்சிஇஆர்டி பள்ளி பாடப் புத்தகங்களிலிருந்து தூய அறிவியல் (Pure Science) குறித்துக் கேள்விகள் கேட்கப்படும். அதேபோல உயிரித்தொழில்நுட்பம், மரபணு பொறியியல், மருத்துவத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட செயல்முறை அறிவியலிலிருந்தும் (Applied Science) கேள்விகள் கேட்கப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கஷ்டப்பட்டு படிப்பதைவிடவும் திட்டமிட்டுப் படிப்பதுதான் வெற்றிக்கானத் தாரக மந்திரமாகச் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT