Published : 04 Jul 2022 01:13 PM
Last Updated : 04 Jul 2022 01:13 PM
‘நான் ஸ்கேட்டிங் கத்துக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு வசதியில்ல. இப்ப என்னோட பையனை ஸ்கேட்டிங் கிளாஸ் சேர்த்திருக்கேன்.’
முதல் வரியை மட்டும் அப்படியே போட்டுக்கொண்டு, ஸ்கேட்டிங்கிற்குப் பதில், நீச்சல், கராத்தே, சிலம்பம், செஸ் இப்படி வகை வகையாய்ப் பெற்றோர்கள் கற்றுக்கொள்ள நினைத்து முடியாமல் போனதை எல்லாம் தங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதைப் பெற்றோர்களின் பேராசை என்று சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வது?
குழந்தைகளின் ஆர்வம் எதில் சுடர்விடுகிறதோ அந்தத் துறையில் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது, குழந்தைகளின் திறமையை வளர்க்க உதவும். சில குழந்தைகள் பல துறைகளிலும் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்துவர். அப்படிப்பட்ட ஒரு குழந்தைதான் ஸ்ருதி எஸ்.எம். பாடலைப் பாடுவதற்கு ஆதாரமாக இருப்பது ஸ்ருதி. ஆனால், இந்த ஸ்ருதிக்கு ஆதாரமாக இருப்பவர்கள், அவருடைய பெற்றோர் சுரேஷ், மைதிலி.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆறாம் நிலைக்கான இசைத் தேர்வை ஸ்ருதி வெற்றிகரமாக முடித்திருப்பதோடு, ஓவியத் துறையிலும் தேசிய அளவில் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஸ்ருதியிடம் இருக்கும் இன்னொரு திறமையும் அண்மையில் மயிலாப்பூர், ரசிக ரஞ்சனி சபாவில் வெளிப்பட்டது. அது, அவரின் பரதநாட்டியம். அந்தக் கலையை ஸ்ருதிக்குக் கற்றுக்கொடுத்த நாட்டிய குரு மீனாட்சி சித்தரஞ்சன். புகழ் பெற்ற பந்தநல்லூர் பள்ளியில் நாட்டியம் பயின்றவர் மீனாட்சி. அவரின் நடனப் பள்ளியான கலாதிக் ஷாவில் நடனம் பயின்ற ஸ்ருதியின் அரங்கேற்றம் அண்மையில் நடந்தது. ஸ்ருதியின் சலங்கை ஒலியிலிருந்து சில தெறிப்புகள்!
ஒருவர் பந்தநல்லூர் பள்ளியின் தயாரிப்பு என்றால் அவருக்கு நடனத்தோடு சாகித்யமும் அதன் பொருளும் பாடாந்தரம் ஆகியிருக்கும். ஸ்ருதியின் கைகள் முத்திரையைப் பிடிக்க, உதடுகள் சில பாடல்களின் வரிகளையும் உச்சரிப்பதைக் காணமுடிந்தது. ஸ்ருதி எந்த அளவுக்குப் பயிற்சியில் ஈடுபாட்டோடு இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம்.
குழந்தையின் அரங்கேற்றத்துக்கேற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே குரு மீனாட்சி சித்தரஞ்சனின் பழுத்த அனுபவம் புரிந்தது. பரதநாட்டியமே ‘ஆடியோ விஷுவல்’ விருந்து. அன்றைய நிகழ்ச்சியில் நட்டுவாங்கம் செய்த குரு மீனாட்சி சித்தரஞ்சன், பாடிய ஆர்த்தி கோவிந்தராஜன், மிருதங்கம் வாசித்த நாகை நாராயணன், வயலின் வாசித்த கலையரசன், குழல் வாசித்த ஸ்ருதி சாகர் ஆகியோரின் கூட்டணி ஸ்ருதியின் நாட்டியத்துக்குப் பக்கபலமாக விளங்கின.
சிவ பாலன் பெருமை
இசை மேதை லால்குடி ஜெயராமனின் நீலாம்பரி ராகத்தில் அமைந்த செந்தில் மேவும் தேவா, தேவா சிவ பாலா சாகித்யத்தை வர்ணத்துக்கு ஆடினார் ஸ்ருதி. சிவ பாலனின் அருமை பெருமைகளை ஒன்றுவிடாமல் நம் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக்கின ஸ்ருதியின் ந்ருத்தமும் அபிநயங்களும். ஜதிகளின்போது துரிதமான கால் அசைவுகளும், சில நொடிகள் ஒரே காலில் நிற்கும் அசாத்தியமான ‘பேலன்ஸு’ம் அவரது பயிற்சியின் பயன்.
விஷமக்கார கண்ணனையும் அன்னை சிவகாமியையும் தன் கண்ணசைவுகளின் (குறும்பையும் கருணையையும்) மூலமே காட்டி அசரடித்தார். அதிலும் ஸ்ருதி, ஒவ்வொரு முறையும் தலையைப் பின்பக்கம் சாய்த்துக் கண்களை அசைப்பதில் துல்லியமான ‘ஸ்கொயர்-கட்’ அடிக்கும் நேர்த்தி வெளிப்பட்டது.
மேடையின் நீள அகலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் லாகவமும் தாளக்கணக்குகளில் கடைப்பிடித்த சமயோசிதமும் ஸ்ருதியை இந்த அரங்கேற்றத்தையும் தாண்டி, கலை உலகத்துக்கு இன்னொரு நல்ல கலைஞர் கிடைப்பார் என்னும் நம்பிக்கைக்கு உரியவராகக் காட்டின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT