Published : 03 May 2016 12:47 PM
Last Updated : 03 May 2016 12:47 PM
எங்காவது அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்திருக்கிறதா? மதுரை மாவட்டம் யா.ஒத்தக் கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அந்த அதிசயம் நடந்திருக்கிறது.
மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப்பள்ளியான இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஏக தள்ளுமுள்ளு ஆகிப் போனதால், வரிசையில் நிற்க வைத்து, டோக்கன் கொடுத்து ஒலி பெருக்கியில் பெயர்களை அறிவித்து அட்மிஷன் நடத்தி இருக்கிறார்கள்.
தனியாரிலிருந்து மாறிய மாணவர்கள்
அப்படி என்ன மோகம் இந்தப் பள்ளியின் மீது? “2010-11-ல் நான் இங்கு வந்தபோது பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு மிக மோசமாக இருந்தது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சரி செய்தோம். மாணவர்கள் வருகை தானாகவே அதிகரித்தது. எங்கள் பள்ளியைச் சுற்றி 8 தனியார் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளிலிருந்து இந்த முறை 78 மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு மாறி இருக்கிறார்கள்” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன்.
குழந்தைகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் 8 ஆயிரம் சதுர அடியில் 10 லட்ச ரூபாய் செலவில் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்திருக்கிறார்கள். கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஆசிரியர்களே பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள். பொதுமக்களில் நூறு பேரைப் புரவலர்களாகச் சேர்த்து அவர்களிடம் தலைக்கு 1,000 ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். இதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு மின் கட்டணம், துப்புரவுப் பணியாளர் சம்பளம் உள்ளிட்டவற்றைச் சமாளித்துக் கொள்கிறார்கள்.
கணினி ஜாலம்
தனியார் பள்ளிகள் பிரம்மாண்டமாக முன்னிறுத்தும் ஸ்மார்ட் கணினி அறையையும் பொதுமக்களின் பங்களிப்போடு எளிமையாக இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள ஆறு கணிப்பொறிகளில் மாணவர்கள் தொழில்நுட்ப ஜாலங்கள் காட்டுகிறார்கள். இதற்கு முன்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, நமக்கு நாமே திட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிதியைக் கொண்டு 30 லட்ச ரூபாய் செலவில் அனைவருக்கும் நாற்காலிகள் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பள்ளி ஆண்டு விழாவை வழக்கமான சம்பிரதாயமாகக் கொண்டாடாமல் திறமைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
கதையின் அருமை
இந்த விழாவில் மாணவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் அத்தனை திறமைகளையும் வெளிக்கொணரக் களம் அமைத்துத் தருகிறார்கள். அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க மார்ச் 22-ம் தேதி கதை சொல்லல் தினமாகக் கொண்டாடினார்கள். அன்று தமிழகத்தின் முக்கியக் கதை சொல்லிகளை வரவழைத்துக் கதை சொல்லும் நிகழ்ச்சி அருமையாக அரங்கேறியது. இப்போது புரிகிறதா அட்மிஷனுக்கு ஏன் அடிதடி என்று?
“சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடுதான் இதை என்னால் சாதிக்க முடிந்தது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 158 பேரைச் சேர்த்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறது எங்கள் பள்ளி. இங்கிருந்து மேல் படிப்பிற்காக மற்றப் பள்ளிகளுக்குப் போன பிள்ளைகள் அங்கேயும் சாதிக்கிறார்கள். எங்கள் பள்ளிக்குக் கூக்கூ அமைப்பு 5 லட்சம் செலவில் நூலகம் அமைத்துத் தர சம்மதித்திருக்கிறது. அதேபோல் டி.வி.எஸ். நிறுவனத்தின் ஆரோக்கிய டிரஸ்ட் 9 லட்சத்தில் நவீனக் கழிப்பறை கட்டித் தருவதாகச் சொல்லி இருக்கிறது. படிப்படியாக இன்னும் கட்டமைப்பை மேம்படுத்தி இதை மாநிலத்திலேயே முதல் தரமான அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே லட்சியம்” என்கிறார் தென்னவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT