Published : 25 Jun 2022 02:44 PM
Last Updated : 25 Jun 2022 02:44 PM
கொடைக்கானல் சராசரியாக 2,133 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. எவரெஸ்ட் சிகரம் சராசரியாக 8,848 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா? இந்த உயரத்தை எதிலிருந்து கணக்கிடுகிறார்கள் தெரியுமா? கடல்மட்டத்திலிருந்து கணக்கிடுகிறார்கள். ஏன் கடல்மட்டத்திலிருந்து கணக்கிடுகிறார்கள்? நீர் எப்போதும் மட்டமாகத்தான் இருக்கும் என்பதால், கடல்மட்டத்தை அளவீடாக வைத்திருக்கிறார்கள். ஆனால், கடல்மட்டமும் எப்போதும் எங்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஆனாலும், மனிதர்கள் சராசரி கடல்மட்டம் என்று ஓர் அளவை நிர்ணயம் செய்து, உயரத்தைக் கணக்கிட்டு வருகிறார்கள்.
ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளைக் கவனித்திருக்கிறீர்களா? ஊர்ப் பெயருக்குக் கீழே above 182 MSL என்று எழுதப்பட்டிருக்கும். அதாவது அந்த ஊர் கடல்மட்டத்திலிருந்து 182 மீட்டர் உயரத்தில் இருக்கிறது அர்த்தம். MSL என்பது Mean Sea Level என்பதன் சுருக்கம்.
சராசரி கடல் மட்டம் என்று கூறுவதற்குக் காரணம் உள்ளது. வாளி நீர், கிணற்று நீர், நீச்சல் குளத்து நீர், குளத்து நீர் போன்றவை சலனமில்லாமல் அமைதியாக இருக்கலாம். ஆனால், கடல் நீர் அமைதியாக இருப்பதில்லை அல்லவா? கடலில் அலைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். சில நேரம் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும். சில நேரம் அலைகளின் வேகம் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் சந்திரன் பூமி மீது செலுத்தும் ஈர்ப்பு சக்தியும் காற்றும். அதனால்தான் கடல்நீர் சில நேரம் நிலத்துக்குள் வெள்ளம்போல் பாயும். சில நேரம் கடலுக்குள் உள்வாங்கும்.
பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதால் வட, தென் துருவப் பகுதிகளில் பனிப் பாளங்கள் மெல்ல உருகிவருகின்றன. அதனால் கடலின் நீர்மட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 3.2 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்து வருகிறது. எனவேதான் கடல்மட்டம் என்பது நிலையானதாக இருக்காது. அதனால்தான் மனிதர்கள் குறிப்பிட்ட அளவை, சராசரி அளவாகப் பயன்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT