Published : 20 Jun 2022 04:11 PM
Last Updated : 20 Jun 2022 04:11 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 22

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 17) அன்று பகுதி - 21இல் ‘கணிதம் - 2’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘தமிழ்நாடு - 5 (பண்டைய தமிழகம் - 1)’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

தமிழ்நாடு - 5 (பண்டைய தமிழகம் - 1)

1. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. குறிஞ்சி - வேட்டையாடுதல்
ஆ. முல்லை - ஆநிரை மேய்த்தல்
இ. மருதம் - மீன் பிடித்தல்
ஈ. நெய்தல் - உப்பு உற்பத்தி

2. பண்டைய தமிழ் மக்கள் முதன்மைக் கடவுளாக யாரை வழிபட்டனர்?
அ. இந்திரன் ஆ. வருணன்
இ. விஷ்ணு ஈ. முருகன்

3. இசையின் ஏழு ஸ்வரங்களிலும் பெரும்புலமை பெற்றிருந்த சோழ மன்னன் யார்?
அ. கரிகாலன்
ஆ. முதலாம் பராந்தகன்
இ. இரண்டாம் ராஜராஜன்
ஈ. இரண்டாம் ராஜேந்திரன்

4. கீழ்க்கண்டவர்களில் கடையேழு வள்ளல்களில் குறிப்பிடப்படாதவர் யார்?
அ. ஓரி ஆ. மணு
இ. காரி ஈ. பேகன்

5. கீழ்க்கண்டவற்றுள் சற்று தூரத்திலிருந்து ஏவுகணை போன்று வீசப்படும் ஆயுதம் எது?
அ. வாள் ஆ. வில்-அம்பு
இ. தோமாரம் ஈட்டி ஈ. கேடயம்

6. துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான பண்டைய தமிழ்ச் சொல் எது?
அ. பட்டினம் ஆ. புகார்
இ. பேரூர் ஈ. மூதூர்

7. சங்க இலக்கிய நூல்கள் மென்மையான துணிகளை எவ்வாறு குறிப்பிடுகின்றன?
அ. கலிங்கம் ஆ. கப்படா
இ. துண்டு ஈ. எதுவுமில்லை

8. தமிழர்கள் எந்த நாளை அறுவடைத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்?
அ. கார்த்திகை ஆ பொங்கல்
இ. தீபாவளி ஈ. மாசிமகம்

9. பண்டைய காலத்தில் மதுரை போன்ற பெருநகரங்களில் மாலை நேரச் சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ. நாளங்காடி ஆ. கடைவீதி
இ. அல்லங்காடி ஈ. எதுவுமில்லை

10. மூத்தபிளினி எனும் ரோமானியர் தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் எந்த நகரை ‘இந்தியாவின் முதல் பேரங்காடி’ எனக் குறிப்பிட்டுள்ளார்?
அ. மதுரை ஆ. பூம்புகார்
இ. உறையூர் ஈ. முசிறி

11. தமிழ்நாட்டில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் நெல்லுடன் கூடிய தாழிகள் எங்கு கிடைத்துள்ளன?
அ. ஆதிச்சநல்லூர்
ஆ. கீழடி
இ. ராஜக்காள்மங்கலம்
ஈ. தலைச்சங்காடு

12. பண்டைய காலத்தில் தமிழ்நாட்டுக்கு கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டுடன் வணிகத் தொடர்பு இல்லை?
அ. கிரேக்கம் ஆ. ரோம்
இ. எகிப்து ஈ. பிரான்ஸ்

13. பண்டைய தமிழர்கள் எந்த நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி நகைகள் செய்து அணிந்தனர்?
அ. சீனா ஆ. ரோம்
இ. எகிப்து ஈ. இலங்கை

14. அகழ்வாராய்ச்சியில் தங்கத்தாலான அணிகலன்கள் கிடைக்கப்பெற்ற அரிக்கமேடு தற்போது எங்கு உள்ளது?
அ. கேரளம் ஆ. பாண்டிச்சேரி
இ. தமிழ்நாடு ஈ. கர்நாடகம்

15. எந்த வகை வணிகர்கள் உமணர்கள் எனப் பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டனர்?
அ. பொன் விற்பவர்
ஆ. துணி வணிகர்
இ. உப்பு விற்பவர்
ஈ. எண்ணெய் வணிகர்

16. தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உறைகல்லான ‘பெரும் பத்தன் கல்’ கிடைக்கப்பெற்றுள்ள குவான் லுக் பாட் என்கிற இடம் எந்த நாட்டில் உள்ளது?
அ. தாய்லாந்து
ஆ. கம்போடியா
இ. வியட்நாம்
ஈ. மியான்மர்

17. பொருத்துக:
திணை கடவுள்
A. முல்லை 1. இந்திரன்
B. மருதம் 2. திருமால்
C. நெய்தல் 3. கொற்றவை
D. பாலை 4. வருணன்
அ. A-1, B-2, C-3, D-4 ஆ. A-2, B-1, C-4, D-3
இ. A-1, B-2, C-4, D-3 ஈ. A-2, B-1, C-3, D-4

18. யவனர் என்ற சொல் எந்த நாட்டுப் பகுதியிலிருந்து வந்தது?
அ. ரோம் ஆ. இலங்கை
இ. கிரேக்கம் ஈ. எகிப்து

19. ஐந்திணைகளுக்கும் உரிய வழிபாட்டுக் கடவுள்கள் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
அ. தொல்காப்பியம்
ஆ. மணிமேகலை
இ. சிலப்பதிகாரம்
ஈ. குண்டலகேசி

20. பண்டைய காலத்தில் கண்ணாடி மணி அணிகலன்கள் செய்யும் தொழிலகங்கள் எங்கு இருந்ததாகக் கருதப்படுகிறது?
அ. காவிரிபூம்பட்டிணம்
ஆ. கொற்கை
இ. முசிறி
ஈ. குடிக்காடு

பகுதி 21இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள் (உரிய விளக்கங்களுடன்)

1. அ) 420
2+4+6+8......+2n = n(n+1)
இங்கு n = 20
ஆகவே 20 × 21 = 420

2. ஆ) 7
பெருக்குத்தொடரில் n-வது உறுப்பு
a(r^(n - 1)) = 729
மேலும் முதல் உறுப்பு a = 1 ;
பொதுவிகிதம் r = 3
ஆனால் 729 = 3^(6)
எனவே n - 1 = 6 ; n = 7
^ அடுக்கை குறிக்கும்.

3. இ) 60
மொத்த தூரம்/ மொத்த நேரம்
(50 + 250)/(1 + 4)= 300/5 = 60

4. ஈ) 987
ஒரிலக்க எண்கள் 1 முதல் 9 வரை
= 9 இலக்கங்கள்
ஈரிலக்க எண்கள் 10 முதல் 99 வரை= 90 × 2 = 180 இலக்கங்கள்
மூவிலக்க எண்கள் 100 முதல் 365 வரை= 266 ×3 = 798 இலக்கங்கள்
எனவே, 9 + 180 + 798 = 987

5. ஆ) 435
a, a+d, a+2d, ..........[a+(n-1)d] என்பது ஒரு கூட்டுத்தொடர்.
a - முதல்உறுப்பு; d - பொது வித்தியாசம்; n - மொத்த உறுப்புகள்.
முதல் n உறுப்புகளின் கூடுதல்
= (n/2) [2a + (n - 1)d]
இங்கு a = 1 ; d = 4
[a+(n-1)d] = 57 -> n = 15
எனவே கூடுதல் = (15/2) [2 + (15 - 1)4] = 15 × 29 = 435

6. இ) 23400
a × y - y × b + c × y = y × (a - b + c)
இங்கு y = 234; a =123; b = 75 ;
c = 52 . மேலும்
(a - b + c) = 123 -75 + 52 = 100
எனவே 234 × 100 = 23400

7. ஈ) 102
முதல் எண் 3 பங்கு
இரண்டாம் எண் 4 பங்கு
வித்தியாசம் 1 பங்கு
இங்கு 1 பங்கு = 34
சிறிய எண் = 3 பங்கு = 3 × 34
= 102

8. அ) 735648
ஒரு எண் 24 ஆல் வகுபட வேண்டுமெனில் 3ஆலும் 8 ஆலும்
வகுபட வேண்டும்.
3ஆல் வகுபட எண்ணின் கூட்டிலக்கம் 3 அல்லது 6 அல்லது 9 ஆக இருக்க வேண்டும்.
8ஆல் வகுபட அவ்வெண்ணின் கடைசி மூன்றிலக்கம் 8ஆல் மீதியின்றி வகுபட வேண்டும்.
735648 இன் கூட்டிலக்கம்
-> 7+3+5+6+4+8 -> 33 -> 3+3-> 6
எனவே 735648 நிச்சயமாக 3ஆல் வகுபடும்.
இங்கு கடைசி மூன்றிலக்கம் 648, 8ஆல் மீதியின்றி வகுபடுவதால்
735648 - நிச்சயமாக 24 ஆல் வகுபடும்.

9. இ) 192
பெரிய எண் =
(கூடுதல் + வித்தியாசம்)/2
= (28+4)/2 = 16
சிறிய எண் =
(கூடுதல் - வித்தியாசம்)/2
= (28-4)/2 = 12
பெருக்கற்பலன் = 16 × 12 = 192

10. ஈ) 30
இரு எண்களின் பெருக்கற்பலன்
= (மீ.சி.ம) × (மீ.பெ.வ)
எனவே மற்றொரு எண்
= 630 × 6 /126 = 30

11. அ) 75
முதன்முதலில் அமர்த்திய ஆட்களின் எண்ணிக்கை y என்க.
கணக்கின்படி 40×y = 25× (y+45)
சமன்பாட்டைத் தீர்க்க y = 75

12. ஆ) 528 ச.செ.மீ
வட்டத்தின் பரப்பளவு = (22/7)×(r^2)
இரு பொது மைய வட்டங்களுக்கு இடையேயான பரப்பளவு
= (22/7)×(17^2 - 11^2)
= (22/7)×168 = 528

13. ஈ) 16மீ
6மீ நிழலுக்கு 8 மீ உயரம்
12மீ நிழலுக்கு (8/6)×12 = 16

14. அ) 12
கூட்டிய 14 ஐ 170 லிருந்து கழிக்க 156 கிடைக்கிறது. 156 - 12 இன் வர்க்கத்திற்கும் 13 இன் வர்க்கத்திற்கும் இடையில் உள்ளதால் அவ்வெண் 12 ஆகத்தான் இருக்க வேண்டும்.
சரிபார்க்க:
12^2 + 12 = 144 +12 = 156

15. ஆ) 3 : 5
Alligation முறை
பையன்கள் பெண்கள்
15.4 14.6

14.9 (மொத்த சராசரி)

14.9 - 14.6 : 15.4 - 14.9
= 0.3 = 0.5
பையன்கள : பெண்கள் = 0.3 : 0.5
= 3 : 5
16. இ) 19%
வட்டத்தின் ஆரத்தின் மாற்றம் y% எனில் பரப்பளவில் மாற்றம்
(2y + y^2/100)%
இங்கு y = - 10
எனவே - 20 + (100/100) = -20 +1
= - 19
‘- ’ என்பதால் பரப்பளவு 19% குறையும்.
குறிப்பு : ஆரத்தின் அளவைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

17. அ) ரூ 60
20% என்பது 3 புத்தகங்கள்
100% என்பது (3/20)×100 = 15.
ஆகவே முதலில் ரூ720க்கு வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை = 15 - 3 = 12
எனவே ஒரே புத்தகத்தின் பழைய விலை 720/12 = ரூ60
குறிப்பு : புதிய விலைக்கு 720 ஐ 15 ஆல் வகுத்தறிய வேண்டும்

18. ஆ) 3080 க.செ.மீ
உருளையின் கன அளவு
= π(r^2)h
இங்கு r = 14/2 = 7 ; h = 20
கன அளவு = (22/7)×7×7×20
= 3080 க.செ.மீ

19. இ) 2 லிட்டர்
18 லிட்டர் உள்ள திரவத்தில் பாலும் நீரும் 8 + 1 = 9 பங்குகள் எனக் கொள்ளலாம். ஆகவே 1 பங்கு = 18/9 = 2 லிட்டர்
புதிய விகிதம் 9 : 1 -> 9+1 = 10 பங்குகள். நீரின் அளவில் மாற்றமில்லை. விகிதத்திலும் நீரின் விகிதம் அதே 1 என உள்ளதால் பாலில் 1 பங்கு சேர்க்கப்படுகிறது. அதாவது 2லிட்டர்.

20. ஈ) 360
24 = 2×2×2×3 ; 36 = 2×2×3×3
30 = 2×3×5
2, 3 - பொதுக்காரணிகள். அவற்றை விடுத்தால் மீதமுள்ளவை முறையே
2×2 ; 2×3 ; 5
தற்போது முதல் இரு பகுதிகளில் பொதுக்காரணி 2.
மீதமுள்ளவை
2 ; 3 ; 5 -> இவ்வெண்களுக்கு பொதுக்காரணி இல்லை.
மேற்கூறியவைகளைத் தொகுக்க
(2×3) × (2) × (2×3×5) = 360
எனவே மீச்சிறு மடங்கு = 360

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x