Published : 16 Jun 2022 05:53 PM
Last Updated : 16 Jun 2022 05:53 PM
வாலன்டீனா தெரஷ்கோவா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். இன்று விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணம் இவர்தான். விண்வெளிக்குச் சென்று, தங்கி, பூமிக்குத் திரும்பிய முதல் பெண் வாலன்டீனா.
1937 மார்ச் 6 அன்று மத்திய ரஷ்யாவில் பிறந்தார். அப்பா டிரைவர். அம்மாவுக்கு நூற்பாலையில் வேலை. இரண்டு வயதில் அப்பாவை இழந்தார். வருமானம் போதவில்லை. அதனால் 8 வயது வரை வாலன்டீனாவுக்குப் பள்ளி செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு படித்தார். ஓர் ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார்.
வாலன்டீனாவுக்குச் சிறு வயதில் இருந்தே பாராசூட்டில் பறக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. உள்ளூரிலிருந்த ஏரோக்ளப்பில் சேர்ந்து பயிற்சிபெற்றார். 1959ஆம் ஆண்டு பாராசூட்டிலிருந்து முதல் முறையாகக் குதித்தார்!
சோவியத் ஒன்றியமும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் விண்வெளிக்கு ஆள் அனுப்புவதற்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஆர்வத்தோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த காலகட்டம். 1961ஆம் ஆண்டு, யூரிககாரினை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம், விண்வெளிக்கு மனிதனை முதலில் அனுப்பிய சாதனை சோவியத் ஒன்றியத்துக்குக் கிடைத்தது. அடுத்த சாதனையையும் தாங்களே நிகழ்த்த வேண்டும் என்று எண்ணிய சோவியத் ஒன்றியம், பெண்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டது. அறிவிப்பு வெளியானவுடன் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெண்களிடமிருந்து வந்தன. அதில் வாலன்டீனாவின் விண்ணப்பமும் ஒன்று.
பல கட்ட தேர்வுகள், உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு 5பேர் தேர்வு செய்யப்பட்டனர். திடீரென்று ஒரே ஒரு பெண் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
போனோமார்யோவா வாலன்டீனாவைவிடப் படிப்பிலும் உடல் தகுதியிலும் முன்னால் இருந்தார். ஆனால், வாலன்டீனாவுக்கு நாட்டுக்காக உயிர் துறந்த தியாகியின் மகள் என்கிற தகுதி இருந்தது. இருவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். விண்வெளிப் பயணத்துக்குப் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு, போனோமார்யோவாவிடம் சரியான பதில் இல்லை. அதே கேள்விக்கு வாலன்டீனா, “நாட்டுக்காகத் தொடர்ந்து வேலை செய்வேன். பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவேன்” என்றார்.
இந்தப் பதில் அவருக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கியது!
1963. ஜூன் 16. 26 வயதான வாலன்டீனா விண்வெளிக்குச் சென்றார். ‘எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது’ என்று ரேடியோ சமிக்ஞை மூலம் தகவல் கொடுத்தார். படங்கள் எடுத்தார். தன் உடல்நிலை மாற்றத்தைப் பதிவு செய்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசோதனைகளைச் செய்து பார்த்தார். 70 மணி, 50 நிமிடங்களில் 12 லட்சம் மைல்களைக் கடந்து, 48 முறை பூமியை வலம் வந்தார். விண்கலம் பூமியை அடையும் முன்பே, பாராசூட்டிலிருந்து குதித்து, பத்திரமாகத் தரை இறங்கினார்!
இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்கிற மகத்தான சாதனையுடன், விண்வெளியில் அதிகமான நேரத்தைச் செலவழித்தவர் என்கிற பெருமையும் வாலன்டீனாவுக்குக் கிடைத்தது!
வாலன்டீனாவின் இந்தப் பயணத்தின் மூலம் விண்வெளியில் ஆணுக்கு இணையாகப் பெண்ணின் உடலும் அந்தச் சூழலைச் சமாளிக்கும் விதத்தில் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது.
மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் வாலன்டீனாவுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜூன் 22, கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ‘சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ’ என்று அவர் போற்றப்பட்டார். இது வாலன்டீனா விண்வெளிக்குச் சென்ற அறுபதாவது ஆண்டு.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment