Published : 14 Jun 2022 02:28 PM
Last Updated : 14 Jun 2022 02:28 PM
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒம்பியாட்டின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 95 ஆண்டுகள் வரலாறு உள்ள செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் ஒருமுறை கூட நடைபெற்றதில்லை. 2022ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த பலமான போட்டி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா வென்றது. இதனையடுத்து இந்தியாவின் செஸ் தலைநகரம் என்றழைக்கப்படும் சென்னை அந்த வாய்ப்பைப் பெற்றது. சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பல அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தியாவில் சென்னையில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் திருவிழா நடைபெற உள்ளதால், சென்னை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசின் உதவியுடன் இந்திய செஸ் சங்கம், தமிழக செஸ் சங்கம் ஆகியவை செய்துவருகின்றன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட உள்ளது. இந்தப் பாடலைப் பாட விரும்புவோருக்கு அழைப்பு விடுத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிற 'உலக செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் என்னுடைய பல்குரல் (100 குரல்கள்) சேர்ந்திசைக்குழுவில் இணைந்து 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். எந்த ஊரிலிருப்பவரும் பங்கு பெறலாம். ஆனால், சென்னையில் நடைபெறப்போகும் அந்த நிகழ்ச்சிக்கும் அதற்கு முந்தைய மூன்று நாட்கள் நடைபெறும் ஒத்திக்கைக்கும் வர இயல்பவராய் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உங்கள் குரலில் பாடி பதிவு செய்து அனுப்ப வேண்டிய முகவரி: tamizhosaichoir@gmail.com’
இவ்வாறு ஃபேஸ்புக் பதிவில் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT