Published : 11 Jun 2022 01:30 PM
Last Updated : 11 Jun 2022 01:30 PM
கார்த்திகை மாதம் முதல் நாளில் வைகறைப் பொழுதில் வீசும் காற்றில் அய்யப்பப் பக்தர்களின் சரண கோஷம் கலந்திருக்கும். அன்றிலிருந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்குப் பக்தர்கள் சென்றுவருவதே மறுபிறவிக்குச் சமம் என்னும் ஐதீகம் நிலவுகிறது. அய்யப்பனின் பெருமையைப் பாடும் எத்தனையோ பாடல்களை பெரிய மேதைகளின் இசையமைப்பில் பலரும் பாடியிருந்தாலும் யேசுதாஸின் குரலில் ஒலிக்கும் `ஹரிவராசனம்’ பாடலுக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.
1923இல் கொன்னகத்து ஜானகி அம்மாள் என்பவரால் இயற்றப்பட்ட இந்தப் பாடல், 1952ஆம் ஆண்டு முதல் சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடை சாத்தும்போது ஒலிக்கும் பாடலாக இருக்கின்றது. இந்தப் பாடலுக்கு பலரும் இசையமைத்து இருந்தாலும் ஜி.தேவராஜன் இசையில் யேசுதாஸ் பாடிய பாடலே சபரிமலையில் நடை சாத்தும் வேளையில் ஒலிக்கிறது.
கானக வாசன்; கான விலாசன்
வட இந்தியாவில் பக்த மீரா, பக்த துக்காராம், ராமதாசர் போன்றவர்களால் செழுமையாக வளர்க்கப்பட்ட இசை வடிவம் பஜனை பத்ததி. தென்னகத்தில் பஜனை பத்ததி பாணியைப் பல ஆண்டுகளுக்கும் முன்பாகவே இயல்பாக வளர்த்தெடுத்ததில் பெரும் பங்காற்றியிருக்கிறது அய்யப்பப் பக்தர்களின் பக்தி இசை.
சரண கோஷப் பிரியரான அய்யப்பனுக்கு சபரிமலையில் அதிகாலையில் நடை திறக்கும்போது, ‘வந்தே விக்னேஸ்வரம்...’ என்ற அய்யப்பச் சுப்ரபாதம் திருப்பள்ளி எழுச்சியாக யேசுதாஸின் குரலில் ஒலிக்கும். மாலையில் நடை திறக்கும்போது, ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ என்ற மலையாளப் பாடல் ஜெயனின் (ஜெய-விஜயன்) குரலில் ஒலிக்கும்.
தொடக்கத்தில் ஹரிவராசனம் பாடலை அத்தாழ பூஜையின்போதே பாடிவந்திருக்கின்றனர். ‘ஹரிவராசனம்’ பாடல் ஒலித்து முடிக்கும் நேரத்தில், கதவை மெதுவாகச் சாத்திவிட்டு அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள். சுவாமியைத் தூங்கவைக்கிற தாலாட்டுப் பாடல் போல இருப்பதால் மலையாளத்தில் இதை ‘உறக்குப் பாட்டு’ என்கிறார்கள்.
பக்தியில் ஒன்றிப்போய் யேசுதாஸ் இந்தப் பாடலை அய்யப்பன் சன்னிதானத்தில் பாடும் காணொளியைப் பாருங்கள்:
https://www.youtube.com/watch?v=bRWVCTzLIv4
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT