Published : 07 Jun 2022 02:28 PM
Last Updated : 07 Jun 2022 02:28 PM
நாளை வெளியாக இருக்கும் மிஸ் மார்வெல் வலைத் தொடரில் 'கமலா கான்' என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இமான் வெல்லானி. சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இஸ்லாமியப் பெண் இவர்தான்!
இமான் வெல்லானி கராச்சியில் பிறந்தவர். இவருக்கு ஒரு வயதானபோது அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். குழந்தையாக இருந்தபோதே இமான் வெல்லானிக்கு சூப்பர் ஹீரோக்கள் மீது ஆர்வம் வந்துவிட்டது. 13 வயதில் பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஹாலோவீன் நிகழ்ச்சியின்போது ஒருமுறை மிஸ் மார்வெல் போன்று உடை அணிந்து சென்றிருக்கிறார். ஆனால், அவர் எந்தக் கதாபாத்திரத்தில் வந்திருக்கிறார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. அதனால் மார்வல் புத்தகம் ஒன்றை, கையில் பிடித்திருக்க வேண்டியதாகிவிட்டது என்கிறார் இமான் வெல்லானி.
மார்வெல் அறிமுகம் செய்த ஹீரோக்களில் கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன் ஆகிய கதாபாத்திரங்களை ஒப்பிடும்போது கமலா கான் மிகவும் இளையவர். இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிப் பத்து ஆண்டுகளே ஆகின்றன. கமலா கானை உருவாக்கியவர் சனா அமானத். பாகிஸ்தானிய அமெரிக்கர். காமிக் புத்தகங்களின் ஆசிரியர். ஸ்பைடர் மேன், கேப்டன் மார்வெல் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். குறிப்பாக கமலா கான் கதாபாத்திரதைத் தன்னைப் போன்றே, புலம்பெயர்ந்த ஒரு பெண்ணாக உருவாக்கினார். இதன் மூலம் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பதாகவும், அடுத்த தலைமுறை தான் அனுபவித்த அடையாள நிராகரிப்பை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே கமலா கான் கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும் சொல்கிறார்.
இமான் வெல்லானி இந்த வலைத் தொடரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மிஸ் மார்வெல் 2 திரைப்படத்திலும் நடிக்கிறார்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT