Published : 06 Jun 2022 05:54 PM
Last Updated : 06 Jun 2022 05:54 PM
உலகின் மிகப் பெரிய கடல்புல் (sea grass) ஒன்றை விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடல் பகுதியில் கண்டறிந்துள்ளனர். கடலில் வாழும் இந்தப் புல், 180 சதுர கி.மீ. தொலைவுக்குப் பரவி இருக்கிறது. சுமார் 4,500 ஆண்டுகளாக இந்தப் புல் கடலில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
பொதுவாகக் கடலில் வாழும் புற்கள் இரண்டு வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து புதிய மரபணு சேர்க்கை மூலம் விதைகளை உருவாக்கி, புதிய செடிகளை உருவாக்குகின்றன. மற்றொன்று புற்களின் வேர்கள், தண்டுகள் மூலம் புதிய செடிகளை உருவாக்குகின்றன.
நீண்ட காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் கடல் புல்வெளி ஒரே செடி அல்ல. கோடிக்கணக்கான செடிகள் கொண்ட மிகப் பெரிய கடல் புல்வெளி. ஆனால், இவை ஒரே ஒரு விதையிலிருந்து உருவானவை. இந்தச் செடி தன்னைத்தானே படியாக்கம் (குளோனிங்) செய்துகொண்டு, சுமார் 4,500 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறது. ஆண்டுக்கு 35 செ.மீ. தொலைவுக்குப் பரவுகிறது.
விஞ்ஞானிகள் கடல் புல்வெளியின் பல பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, மரபணு பரிசோதனை மேற்கொண்டனர். அதன் மூலம் இந்தப் புல்வெளி ஒரே விதையிலிருந்து உருவானது என்கிற உண்மை தெரியவந்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக இந்தக் கடல் புல்வெளியின் பரப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது குறைந்து வருகிறது. கடலில் ஏற்படும் சூறாவளி, கடல் நீரின் வெப்பம் அதிகரித்தல் ஆகிய காரணங்களால் பத்தில் ஒரு பகுதி கடல் புல்வெளிப் படுகை அழிந்துவிட்டது. புல்வெளி மட்டுமன்றி, பெரும்பாலான தாவரங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக, பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT