Published : 31 May 2016 12:21 PM
Last Updated : 31 May 2016 12:21 PM
புதிய வருஷம் பிறக்கும்போது மதுப்பழக்கத்தைக் கைவிடுதல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கைவிடுதல் என ஆக்கப்பூர்வமாக ஏதேனும் சபதம் எடுப்போம் இல்லையா, அதேபோன்று மே 31-ம் தேதி புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கைவிடத் தீர்க்கமான முடிவு எடுக்கலாம். சுமார் எட்டாண்டுகளுக்கு முன்புவரை மிகத் தீவிரமாகப் புகைபிடித்துக்கொண்டிருந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். தினசரி கணக்கில்லாமல் புகைப்பார். ஆனால், ஒருநாள் திடீரென அவர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டார்.
“சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பொறுத்தவரை ஒருவர் பயன்படுத்த முயலாமல் இருப்பதுதான் மிகச் சிறந்தது. ஒருமுறை தொட்டுத்தான் பார்ப்போமே என்று தொட்டுவிட்டால், பின்பு தினமும் போராட்டம்தான். நான் புகைபிடிக்கும் பழக்கத்தைவிட்டு எட்டு ஆண்டுகள் ஆயிற்று.
அதற்கு முன் தினசரி ஏராளமாகப் புகைப்பேன். அடிக்கடி இந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்று எண்ணுவேன். தினமும் போராட்டம், மன உளைச்சல். அதை விடுவதற்கு கடும் சிரமங்கள் பட்டேன். ஒருநாள் திடீரென்று முடிவு எடுத்து விட்டுவிட்டேன்.
ஆனால், இப்போதும்கூட அவ்வப்போது புகைபிடிக்க வேண்டும் என்கிற தூண்டுதல் ஏற்படுகிறது. ஏதேனும் ஒரு வகையில் அதனைக் கடந்துவிட வேண்டும். நான் என் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்துவதன் மூலம் அதனைக் கடந்துவிடுகிறேன்.
ஆனால், அந்த எண்ணத்தை எப்படிக் கடக்க வேண்டும் என்பதெல்லாம் அவரவர் சார்ந்திருக்கும் விஷயங்களைப் பொறுத்தது. நான் வெற்றி அடைந்த முறைகளால் இன்னொருவர் வெற்றியடைய முடியும் என்று சொல்ல இயலாது. அவர்களே போராடி வழி கண்டு பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களாகத் தொட்டதுதானே அது.
அதே நேரத்தில், உறுதியோடும் கவனத்தோடும் நிறுத்த வேண்டும். நிறுத்திய பின்புதான் அதனால் கிடைக்கும் ஆரோக்கியம், உண்மையான நிம்மதி என்ன என்பது புரியும்” என்கிறார் வெற்றிமாறன்.
என் அனுபவத்திலிருந்து…
- இயக்குநர் வெற்றி மாறன்
புகை பிடிப்பதைக் கைவிட்ட ஆரம்ப நாட்களில் சிரமமாக இருக்கும்.
புகைபிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறபோது உடனே வயிறு நிரம்ப குளிர்ச்சியான தண்ணீரைக் குடித்துவிடுங்கள். நிறைய தண்ணீரைக் குடிப்பது புகைபிடிக்கும் எண்ணத்தைத் தடுக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
புகையைக் கைவிட்ட நேரத்தில் பசி அதிகமாக எடுக்கும். பழங்கள் நிறைய சாப்பிடலாம். நன்றாகத் தூக்கம் வரும். தூங்கிவிடுங்கள்.
அதேசமயம் தேவையில்லாத எரிச்சல், கோபம் வரும். உடன் இருப்பவர்களிடம் கத்துவோம். ஆனால், அவர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மனிதர்களைக் கொல்லும் பழக்கம்
- அன்புமணி ராமதாஸ்
உலகிலேயே மனிதர்களை அதிகம் கொல்லும் போதைப் பழக்கத்தில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது இரண்டாம் இடத்தில் இருப்பதாக மத்திய முன்னாள் சுகாதார துறை அமைச்சரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
“புகையிலையால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கிறார்கள். அதனால் புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% பரப்பளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டுமென 2015-லேயே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆய்வு நடத்திய சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழு, இந்தியாவில் புகையிலையைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா என்பது குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இத்திட்டத்தை ஒத்திவைக்கச் சொன்னது.
அதன்படி 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்துவிட்டது. இன்றுவரை இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. உண்மையில் இது தொடர்பாக இந்தியாவில் 65-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படம் வெளியிடும் முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் பொது இடங்களில் புகைபிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இம்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட புகையிலை லாபியும், அவர்களுக்கு ஆதரவாகப் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அழுத்தம் கொடுத்தனர். நீதிமன்றங்களிலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றையெல்லாம் போராடி முறியடித்துத்தான் புகையிலை தொடர்பான சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டியிருந்தது.
85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. ஆனால் இன்று சர்வ சாதாரணமாகப் பொது இடங்களில் புகைபிடிக்கிறார்கள். வங்கதேசம், பூட்டான், இலங்கை, நேபாளம் ஆகிய சிறிய நாடுகள்கூட இந்த விஷயத்தில் கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கின்றன. ஆனால். இந்திய அரசுக்கு இது குறித்து எந்தக் கவலையும் இல்லை.
எனவே, முதல் கட்டமாக புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட ஒவ்வொருவரும் அதைக் கைவிட தாங்களாக உறுதிமொழி ஏற்க வேண்டும்” என்றார் அன்புமணி ராமதாஸ்.
மனஉறுதியோடு நிறுத்தினேன்
இன்றைய இளைஞர்கள் மத்தியில் புகைபிடிப்பதும் குடிப்பழக்கமும் சகஜமாகி விட்டதாகத் தோன்றுகிறது. அதேநேரத்தில் பல இளைஞர்கள் உத்வேகத்துடன் தீய பழக்கங்களை எதிர்க்கிறார்கள். அவர்களில் சிலர் இதோ:
யுகேஷ்
என்னுடைய 26-ம் வயதில் புகைபிடித்தேன். நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டுத் தனமாக ஓரிரு முறை மட்டுமே பிடித்தேன். அதன்பின் மனது லேசாகுவதற்கு சிகரெட்டைத் தேடியது. எந்தக் காரணத்தைக் கொண்டு அப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது எனத் தெளிவாக இருந்ததால், அதன்பின் பிடிக்கவில்லை. என்னைக் கேட்டால் ஒரு ஆர்வத்தில்கூடப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என்றுதான் சொல்வேன்.
சிவசங்கர முரளி
என்னுடைய 18 வயதில் முதன்முதலில் நண்பர்கள் புகைபிடிக்க அழைத்தார்கள். ஆரம்பத்தில் வேண்டாமென மறுத்தபோது, தனித்து விடப்பட்டேன். அதனால் நண்பர்களோடு சேர்ந்து புகைபிடித்துப் பார்த்தேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது அந்தப் பழக்கம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் இமயமலை ஏறும் வாய்ப்பு கிடைத்தபோது மன உறுதியோடு இப்பழக்கத்தை நிறுத்தினேன். அதன்பின் தொடவில்லை.
ந.சகுந்தலா
புகை பிடிக்கும் ஆண்களையோ பெண்களையோ பார்த்தாலே கோபம் வரும். அவர்கள் பிடிப்பது மட்டுமல்லாமல் புகைபிடித்து விடும் புகையைச் சுவாசிக்கும்போது எனக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கிறது. இன்று புகைப்பிடிப்பதும் மது அருந்துவதும் ஃபேஷனாக மாறச் சினிமா முக்கியக் காரணம். அதை சினிமா தவிர்த்தாலே இளைஞர்களில் சிலராவது அப்பழக்கத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.
கௌரி சங்கர்
நானோ என் தம்பியோ புகைபிடிப் பதில்லை. அந்தப் பெருமை எங்கள் அப்பாவையே சேரும். அவரிடம் எந்தத் தீய பழக்கமும் இல்லாததால், அவரைப் பார்த்து நாங்களும் அப்படியே வளர்ந்தோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT