Last Updated : 06 Jun, 2022 02:56 PM

2  

Published : 06 Jun 2022 02:56 PM
Last Updated : 06 Jun 2022 02:56 PM

கடிதத்தில் வந்த மண்! - கொ.மா.கோ. இளங்கோ

சிறு வயதில் அப்பாவுக்கு வரும் எல்லாக் கடிதங்களையும் அவர் வாசிப்பதற்கு முன்பே நான் பிரித்துப் படித்துவிடுவது வழக்கம். இது தவறு என்று சிறு கண்டிப்புடன் விட்டுவிட்டார். நான் ஏன் அப்படிச் செய்தேன் என்கிற கேள்விக்கு இதுவரை சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பாவின் நண்பர்கள் எழுதும் தமிழை வாசிப்பதில் எழுந்த ஆர்வமா? இளங்கோ நலமா என்பது போன்ற விசாரிப்புகளா? எல்லாமும் கலந்த ஆசைதான். கடிதங்களை முழுவதுமாக வாசித்துவிட்டு அப்பாவிடம் சேர்ப்பதில் அவ்வளவு ஆனந்தம்.

அன்று பிற்பகல் நேரம். சுட்டெரிக்கும் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்கார மாமா. அவரைத் தெருமுனையிலேயே நிறுத்தி, அப்பாவுக்கு வந்த கடிதத்தை வாங்கினேன். அப்பா பெயரில் தினம் மூன்று, நான்கு கடிதங்களாவது வந்துவிடும்.

அன்று வந்த கடித உறை சற்றுத் தடிமனாக இருந்தது. கடிதத்தை நண்பர்களுக்கு வாசித்துக்காட்ட வேண்டும் என்கிற ஆவலில், எதிரில் இருந்தவர்களுக்கு முன்னால் சிறிது கர்வத்தோடு கடிதத்தைப் பிரித்தேன். பிடி அளவு மணல் கீழே கொட்டியது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நண்பர்கள் சிரித்தனர். ஒரு கடிதத்தில் மணல் எப்படி வந்திருக்கும் என்று ஆச்சரியமாக இருந்தது. மணலை அனுப்பியவர் யாராக இருக்கும்? என்ன காரணம்? புரியாமல் தவித்தேன். அப்பாவுக்குத் தெரிந்தால் அடிப்பார் என்று கடிதம் பற்றிய உண்மையை மறைத்துவிட்டேன்.

இரண்டு நாட்கள் சென்றன. அன்று மறுபடியும் ஒரு கடிதத்தில் ஆற்று மணல் வந்தது. பதறிவிட்டேன். “நம்மைப் பிடிக்காதவங்க செய்வினை செய்யப் பார்க்கிறாங்க. அந்தப் பொட்டலத்தைச் சாக்கடையில் வீசிட்டு வந்து கையைக் கழுவு” என்றார் பாட்டி. நான் ஒரு வாரம் நிம்மதியாகத் தூங்கவில்லை.

விடுமுறை நாள் அன்று ஓய்வாக உட்கார்ந்திருந்த அப்பாவிடம் கடிதம் பற்றிய உண்மையைச் சொன்னேன். அவர், அதற்கான காரணத்தைச் சொன்னார். அப்போது நாங்கள் வீடு கட்டி முடித்திருந்தோம். வீட்டு முகப்பில், புதுமையாக ஓர் இந்திய வரைபடத்தை உருவாக்கத் திட்டமிட்டார் அப்பா.

இளங்கோ - வித்தாலி பூர்னிகா

இந்திய வரைபடத்தை உருவாக்க, அனைத்து மாநிலத் தலைநகரங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மண், முக்கிய நதிகளிலிருந்து பெற்ற நீர், இமயமலையில் இருந்து வந்த கற்கள் என இரு மாதங்களில் நண்பர்களின் உதவியால் சேகரித்து வைத்திருந்தார். முருகன் மாமா சிமெண்ட் சேர்த்துக் கலவை தயாரித்தபோது, “கொஞ்சம் பொறுங்க மாமா” என்றபடி உள்ளே ஓடினேன். கால்சட்டைப் பையில் ஒட்டியிருந்த மணலை ஒரு துண்டுக் காகிதத்தில் கொண்டுவந்து சேர்க்கச் சொன்னேன்.

“இது எங்கிருந்து வந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அப்பா.
“எங்க பள்ளிக்கூடத்தில் இருந்து” என்றேன்.

கண்மாய் ஓரத்தில் இருந்த ‘ஆவுடையம்மாள் ஆரம்பப் பள்ளி’யில் அப்போது கட்டிட விரிவாக்கம் நடந்துகொண்டிருந்தது. ஆற்று மணலைக் கொட்டி வைத்திருந்தார்கள். பள்ளி முடிந்து ஆசிரியர்கள் எல்லோரும் சென்ற பிறகு, நண்பர்களுடன் சேர்ந்து மணல் கோட்டை கட்டி விளையாடினேன். தங்க நிறத்தில் ஜொலிக்கும் மணல், கால் சட்டைப் பையில் தங்கிவிட்டது என்று விளக்கினேன். அப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்திய வரைபடத்தைத் திறந்து வைக்க, சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த வித்தாலி பூர்னிகாவிடம் (ராதுகா பதிப்பகத்தில் பதிப்பாளராகப் பணியாற்றியவர்), “இந்த இந்தியாவில் இளங்கோ படிக்கும் பள்ளியும் உள்ளது” என்ற அப்பா, நடந்ததை அவரிடம் விளக்கினார். பூர்னிகா எனக்குக் கை நிறைய புத்தகங்களைக் கொடுத்தார்!

உலகில் மண்ணுக்குத்தான் முதல் மரியாதை. ஆதியில் மனிதர்கள் மண்ணை வழிபட்டார்கள். மண்ணை உழுது விவசாயம் செய்தார்கள். மண்ணைப் போற்றும் விதத்தில் தமிழர்கள் அறுவடைத் திருநாள் கொண்டாடுகிறார்கள்.

இளங்கோ

மணிமேகலை மன்ற வெள்ளிவிழாவுக்கு வந்திருந்த அறிஞர்களில் உவமைக் கவிஞர் சுரதாவும் ஒருவர். அவர் ‘காவடிச் சிந்து’ பாடிய அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஊரான சென்னிக்குளத்துக்குச் செல்ல விரும்பினார். ஓவியக் கவிஞர் அமுதபாரதி, ஆண்டாள் பிறந்த திருவில்லிபுத்தூருக்குச் செல்ல விரும்பினார். இருவருக்கும் துணையாக என்னை அனுப்பி வைத்தனர்.

அண்ணாமலை ரெட்டியார் வாழ்ந்த வீட்டு வாசலிலும் ஆண்டாள் விளையாடிய நந்தவனத்திலும் சுரதா கைப்பிடி மண்ணை எடுத்துப் பொட்டலம் கட்டிக்கொண்டார். நான் அதைப் பார்த்து வியந்தேன். தன் காலத்துக்கு முன்னால் வாழ்ந்த கவிஞர்களின் நினைவாக, காலடி மண் சேகரிப்பதாகச் சொன்னார். கவிஞர்கள் மண்ணை நேசிக்கும் அழகே தனி.

குழந்தைகளுக்காக நான் எழுதும் கதைகளின் உயிர் சக்தி இதே மண்ணில் இருந்துதான் கிடைக்கிறது.

கட்டுரையாளர், எழுத்தாளர்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x