Published : 24 May 2016 01:37 PM
Last Updated : 24 May 2016 01:37 PM
ஆங்கிலம் மட்டுமே பேசும் அந்த இளைஞரும் பிரெஞ்சு மட்டுமே தெரிந்த அந்தப் இளம் பெண்ணும் சந்திக்கிறார்கள். குட்டி ஹெட்செட் போன்ற ஒரு கருவியை அந்தப் பெண்ணிடம் அவர் தருகிறார். அதைக் காதுக்குள் திணித்ததும் அவர் பேசும் ஆங்கிலம் இந்தப் பெண்ணுக்கு பிரெஞ்சில் கேட்கிறது. ‘பைலட்’ என்னும் தொழில்நுட்பக் கருவி நிகழ்த்தும் மாயாஜாலம் இது!
காதலால் உதித்தது
காதில் பொறுத்தக்கூடிய இக்கருவி உடனுக்குடன் வெவ்வேறு மொழிகளை மொழிபெயர்த்துப் பேசுகிறது. நியூயார்க் நகரைச் சேர்ந்த வேவர்லி லாப்ஸ் (Waverly Labs) நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இது. வெவ்வேறு மொழி பேசுபவர்களின் உரையாடலை மொழிபெயர்க்கும் உலகின் முதல் ‘காதணி’ இது என இந்நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரூ ஓச்சோவா அறிவித்திருக்கிறார். ஒரு பிரெஞ்சுப் பெண்ணின் மீது காதல் வயப்பட்டபோது உதித்த சிந்தனை இது.
அதைத் தொடர்ந்து இடைவிடாது இரண்டாண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்ததாகவும் சொல்கிறார். ஸ்மார்ட் போனின் ஆப் மூலமாகச் செயல்படும் தொழில்நுட்பம் இது. இந்தக் கருவியைக் காதில் பொருத்தியிருக்கும் இருவரும் அவர்களுடைய ஸ்மார்ட்ஃபோனில் இதை இயக்கும் பைலட் ஆப்-பை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என இந்நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. தற்போது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு மற்றும் இத்தாலி மொழிகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழிபெயர்க்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக இந்தி, அராபிக், ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஆசிய மொழிகளை மொழிபெயர்க்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்துவருகிறது. ஆனால், தற்போது இது சோதனை முயற்சி மட்டுமே. கிரவுட் ஃபண்டிங் முறையில், அதாவது பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி இதைத் தயாரிக்கவிருப்பதாகவும், அதற்கான பிரச்சாரத்தை மே 25-ல் தொடங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
வரமா சாபமா?
வேற்று மொழி பேசுபவர்களை நாம் காணும் விதத்தை இந்தக் கருவி புரட்டிப்போடப்போகிறது. இனி யாரும் எந்த நாட்டுக்கும் அதன் மொழி தெரியாமல்கூட தைரியமாகச் செல்லலாம். குறிப்பாக மருத்துவ உதவி போன்ற அவசரத் தேவையின்போது மொழி தெரியாத சிக்கலைத் தீர்க்க இது பெரிதும் கைகொடுக்கும். மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவை தீர்ந்துபோகும்.
ஆனால் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அற்புதமான அனுபவம். மொழி என்பது தகவல் தொடர்புக்கான ஊடகம் மட்டும் இல்லையே. அது மீக நீண்ட பண்பாட்டை, வரலாற்றைக் கடத்திச் செல்லும் பாலம். அத்தகைய மொழியைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சுருக்கிவிடுவது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கெனவே கணினியும் ஸ்மார்ட்ஃபோனும் உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவந்தாலும் பல அறிவுத்திறன்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டன. நமது நினைவாற்றல் நீர்த்துப்போய்க்கொண்டே இருக்கிறது.
இன்று 2-ம் வாய்ப்பாடுகூட நம்மால் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. இரண்டு சிம் வைத்திருந்தாலே ரெண்டு மொபைல் எண்களையும் சட்டென நினைவுகூர முடிவதில்லை. பள்ளி கல்லூரி குழந்தைகள் எஸ்எம்எஸ் லிங்கோ (SMS lingo) எனப்படும் இலக்கணம் அற்ற மொழி நடையில் தேர்வுகள்கூட எழுதத் தொடங்கிவிட்டதாகக் கல்வி நிறுவனங்கள் கவலை கொள்கின்றன.
இப்படியான சூழலில் மனிதனின் மொழி ஆற்றலுக்கு முற்றிலுமாக முழுக்குப் போடும் தொழில்நுட்பமாக இது இருந்துவிடுமோ என்கிற அச்சம் எழத்தான் செய்கிறது. அதே நேரத்தில் எந்த ஆயுதமும் தன்னளவில் அபாயகரமானது அல்ல. அதை பயன்படுத்துபவரைப் பொருத்ததே என்பதையும் நினைவில் கொள்வோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT