Published : 30 May 2022 03:27 PM
Last Updated : 30 May 2022 03:27 PM
ஒரு முறை எவரெஸ்ட்டில் ஏறுவதே பலராலும் இயலாத காரியம். அமெரிக்க வாழ் நேபாளியான லக்பா, 48ஆவது வயதில் பத்தாவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்துவிட்டார்!
மின்சார வசதியில்லாத, பெண்களைப் படிக்க அனுப்பாத காலத்தில் நேபாள மலைக் கிராமம் ஒன்றில் பிறந்தவர் லக்பா. விவசாய வேலைகள், தம்பிகளை முதுகில் சுமந்து, நீண்ட தூரம் நடந்து சென்று பள்ளியில் விடும் பணி எல்லாவற்றையும் செய்வார். கடினமான வாழ்க்கை. லக்பாவின் வீட்டிலிருந்து பார்த்தாலேயே எவரெஸ்ட் தெரியும். அது ஏனோ இவரை வரச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டேயிருந்தது. என்றாவது ஒருநாள் எவரெஸ்ட்டில் ஏறிவிட வேண்டும் என்று நினைத்துக்கொள்வார்.
1953ஆம் ஆண்டுக்குப் பிறகு மலையேற்றம் பிரபலமாக ஆனது. மலையேற்ற வீரர்களுக்குத் துணையாக ஷெர்பா ஆண்களும் சென்றனர். அதற்கு ஊதியமும் பெற்றுக்கொண்டனர். தானும் மலையேற்ற வீரர்களுடன் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார் லக்பா. ஆனால், மலையேற்றம் ஆபத்து நிறைந்தது என்பதாலும் அது ஆண்கள் வேலை என்பதாலும் பெற்றோர் தடுத்தனர். யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று எச்சரித்தனர். திருமணம் ஆகாவிட்டாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக மலையேறினார், லக்பா.
“முதல் முறை எவரெஸ்ட்டில் ஏறிய நாளை மறக்கவே முடியாது. இனி நான் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு பெண் அல்ல. நான் 'மலையேற்ற வீராங்கனை' என்று கத்தினேன். பெரிய சாதனை செய்துவிட்டதுபோல மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் நினைவுக்கே வரவில்லை. இந்த மகிழ்ச்சியை ஒரே தடவை அனுபவித்தால் மட்டும் போதாது. தொடர்ந்து மலை ஏற வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னைப் பார்த்து இன்னும் பல பெண்கள் தங்கள் லட்சியத்துக்காக வெளியேறி வருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது” என்கிறார் லக்பா.
2000 – 2003 ஆம் ஆண்டுக்குள் மூன்று முறை எவரெஸ்ட்டில் ஏறிவிட்டார் லக்பா. மூன்றாவது முறை அண்ணன், தங்கையுடன் ஏறி, ‘எவரெஸ்ட்டில் ஏறிய உடன்பிறந்தவர்கள்’ என்ற சாதனையையும் உடன்பிறப்புகளுடன் சேர்ந்து படைத்தார்!
அமெரிக்க வாழ் ருமேனியரான ஜார்ஜ் என்ற மலையேற்ற வீரரைத் திருமணம் செய்துகொண்டு, அமெரிக்கா சென்றார் லக்பா. குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் மலையேற்றத்துக்கு இடைவெளி விட்டார். 2015ஆம் ஆண்டு திருமண உறவு முடிவுக்கு வந்தது. குழந்தைகளைக் காப்பாற்றக்கூடிய பொறுப்பு முழுவதும் லக்பாவுக்கு வந்தது. பாத்திரம் தேய்த்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், முதியோரைக் கவனித்தல் போன்ற வேலைகளே அவருக்குக் கிடைத்தன.
தடுமாற்றம் இன்றி வாழ்க்கை நகர ஆரம்பித்தபோது, மீண்டும் மலையேறும் எண்ணம் வந்தது. லக்பாவின் குழந்தைகள் அம்மாவின் லட்சியத்துக்கு உறுதுணையாக நின்றார்கள். மலையேற்றத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கும் பயணத்துக்கும் லக்பாவின் சம்பாத்தியம் போதாது. நண்பர்கள், தெரிந்தவர்கள் நிதியுதவி அளிக்க முன்வந்ததால் லக்பா தொடர்ந்து மலையேற ஆரம்பித்தார். 2018ஆம் ஆண்டு ஒன்பதாவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறினார்!
கோவிட் தொற்றுக் காரணமாக பத்தாவது மலையேற்றம் தள்ளிப் போனது. நிதியைத் திரட்டிக்கொண்டு வந்தவர், வெற்றிகரமாகப் பத்தாவது முறையாக மலையேற்றச் சாதனையை நிகழ்த்திவிட்டார்!
“எல்லோரும் சொல்வது போலவே எவரெஸ்ட்டில் ஏறுவது ஆபத்தானதுதான். இதுவரை மலையேறும் முயற்சியில் முன்னூறு பேர் உயிரை இழந்திருக்கிறார்கள். பத்திரமாகக் கீழே வரும்வரை உயிருக்கு உத்திரவாதம் இருக்காது. நம் பயணத்தை மலைதான் தீர்மானிக்கும். நிமிடத்துக்கு நிமிடம் சூழல் மாறிக்கொண்டேயிருக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு எவரெஸ்ட் உச்சியை அடைந்தாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் இருக்க மாட்டோம். சாதனையைப் பதிவு செய்துவிட்டு, படம் எடுத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்துவிடுவோம். மலையேற்றத்தால் நான் சம்பாதித்துவிடவில்லை. என்னைப் போன்ற சாதாரண ஒரு பெண்ணின் சாதனை கொண்டாடப்படுவதும் இல்லை. ஆனாலும் என் வாழ்க்கை வீட்டோடு முடங்காமல் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்ற மனநிறைவுதான் என்னை மேலும் மேலும் மலையேற வைத்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் லக்பா.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT