Published : 28 May 2022 02:44 PM
Last Updated : 28 May 2022 02:44 PM
சனிக் கோளைப் பார்க்க ஆசையாக இருக்கிறதா? நீங்கள் கிழக்கு நோக்கி நின்றால் வானில் சற்றே இடது புறமாகப் பளிச்சென்று இரு ஒளிப்புள்ளிகள் தெரியும். இவற்றில் உங்களுக்கு இடது புறமாக உள்ள ஓர் ஒளிப்புள்ளி நட்சத்திரம். அதன் பெயர் சித்திரை (Spica). வலது புறம் இருப்பது தான் சனிக் கோள்.
நட்சத்திரங்கள் இடம் மாறாதவை. ஆனால், கோள்கள் இடம் மாறும். எல்லாக் கோள்களும் பூமி மாதிரியே சூரியனைச் சுற்றி வருகின்றன. கோள்கள் நகர்ந்து வருவதை ஆராய்ந்த போது சனிக் கோள் தான் சூரியனைச் சுற்றிவர அதிக காலத்தை எடுத்துக்கொள்கிறது.
நம் பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு ஆகும் காலம் ஓர் ஆண்டு. சனிக் கோள் சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன!
சனிக் கோள் ஏன் சூரியனை இப்படி மெதுவாகச் சுற்றுகிறது? சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பூமி உள்ளது. வியாழன் கோள் சூரியனிலிருந்து சுமார் 80 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் சனிக் கோள் சுமார் 150 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன.
விஞ்ஞானி கெப்ளர் விதியின்படி, ஒரு கோள் சூரியனிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அது சூரியனை மெதுவாகச் சுற்றும்.
சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள பூமி, தனது சுற்றுப் பாதையில் மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. ஐந்தாவது வட்டத்தில் உள்ள வியாழன் மணிக்கு 47 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது. ஆறாவது வட்டத்தில் உள்ள சனிக் கோள் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே தான் சனிக் கோள் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன.
சனிக் கோளை டெலஸ்கோப் மூலம் பார்த்தால், ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாகத் தெரியும். சனிக் கோளைச் சுற்றி வளையங்கள் இருப்பதே அதற்குக் காரணம். பூமியும் சனிக் கோளும் வெவ்வேறு வேகத்தில் சூரியனைச் சுற்றி வருவதால் நாம் சனிக் கோளை வெவ்வேறு இடத்திலிருந்து வெவ்வேறு நிலையில் காண்பவர்களாக இருக்கிறோம். ஆகவே தான் அது ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாகக் காட்சி அளிக்கிறது.
சனிக் கோளில் உள்ள வளையங்களில் சிறிய கற்கள், சிறிய ஐஸ் கட்டிகள் இருக்கின்றன. இப்படிச் சுற்றும் லட்சக்கணக்கான கற்கள் நமக்கு வளையங்கள் போலத் தோற்றத்தை அளிக்கின்றன.
வியாழன் போன்றே சனிக் கோளும் பனிக்கட்டி உருண்டை. ஆகவே அந்தக் கோளில் போய் இறங்க இயலாது. அமெரிக்கா 1997 ஆம் ஆண்டில் அனுப்பிய காசினி-ஹுய்ஜன்ஸ் என்னும் ஆளில்லா விண்கலம் 2004ஆம் ஆண்டு சனிக் கோளுக்குப் போய்ச் சேர்ந்தது. அப்போதிலிருந்து அது பல ஆண்டுக்காலம் சனிக் கோளை ஆராய்ந்து எண்ணற்ற தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது.
பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது. ஆனால், சனிக் கோளுக்கு 62 சந்திரன்கள் இருக்கின்றன.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT