Last Updated : 25 May, 2022 11:52 AM

 

Published : 25 May 2022 11:52 AM
Last Updated : 25 May 2022 11:52 AM

ரஹ்மானின் இசை அவதாரங்களை நினைவூட்டி கிறங்கடிக்கும் ‘மாயவா, தூயவா...’!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் ஸ்ரேயா கோஷல் குரலும் இணையும்போது எல்லாம் ஒரு மாயாஜாலம் நிகழும். அந்த மாயாஜாலம் சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'மாயவா தூயவா' பாடலிலும் நிகழ்ந்திருக்கிறது. பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் ‘இரவின் நிழல்’ படத்தில் அங்கமாக இருக்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். செவியைக் கிழிக்கும் ஓசையே இசை என்று மாறியிருக்கும் இன்றைய சூழலில், அந்தப் போக்குக்கு முற்றிலும் மாறாக இந்தப் பாடலில் அழகும் இனிமையும் நிறைந்த ஆர்ப்பாட்டமில்லாத ரஹ்மானின் மெல்லிசை நம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

ரோஜா திரைப்பட பாடல்கள் வெளியானபோது அந்த இசை நமக்குப் புதிதாக இருந்தது. அதன் புதுமை அன்றைய காலத்தின் திரைப்பட இசையமைப்பில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இசையின் போக்கையே மாற்றியமைத்தது என்று கூடச் சொல்லலாம். இன்று ரோஜா வெளியாகி 30 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. இருப்பினும், ரஹ்மானின் இன்றைய பாடல்களும், ரோஜாவின் பாடல்களைப் போன்றே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

ரஹ்மானின் இசை அவதாரங்கள்

காதலன், திருடா திருடா, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் கொண்டிருக்கும் அதிரடி இசையும் துள்ளல் வடிவமும் ரஹ்மானின் தனித்துவ அடையாளங்கள். அந்த வகையிலான இசையை இன்றும் அவரால் எளிதில் படைத்துவிட முடியும் என்பதற்கு ’பரம சுந்தரி’ போன்ற பாடல்கள் சாட்சியாக உள்ளன. ஆனால், தெரிந்தே ரஹ்மான் அந்தப் பாணியிலான பாடல்களைத் தவிர்த்தார். முற்றிலும் வேறான இசை வடிவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய இசையின் எல்லையை விரிவாக்கினார்.

தமிழுக்கு ஒரு வகை இசை, தெலுங்குக்கு ஒரு வகை இசை, மலையாளத்துக்கு ஒரு வகை இசை, இந்திக்கு ஒரு வகை இசை, ஆங்கிலத்துக்கு ஒரு வகை இசை, ஈரானிய படங்களுக்கு ஒரு வகை இசை என இசையில் அவர் எடுத்த அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இசையில் அவர் எடுத்திருக்கும் பன்முக அவதாரங்கள் அவருக்கு மட்டுமே சாத்தியம்.

மொழியின் எல்லையைத் தாண்டிய வெற்றி

இசைக்கு மொழி இல்லை என்றாலும், அதற்கு ஜீவன் உண்டு. மக்களின் வாழ்வும், உணர்வும் புரிந்தால் மட்டுமே ஒரு இசையமைப்பாளரால் ஜீவனுள்ள பாடல்களைப் படைக்க முடியும். இசையமைப்பாளர்கள் படைக்கும் பாடல்கள், எப்போதும் அவர்களின் மொழியுடனும், அதன் மண்ணுடனும் மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். அவர்களின் புரிதலும் அவர்களின் மொழியைச் சுற்றியே இருக்கும்.

ஆனால், ரஹ்மானோ ஒட்டுமொத்த மானிடர்களின் வாழ்வைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவராக இருக்கிறார். எந்த மொழிக்குச் சென்றாலும், அந்த மொழியின் அடிப்படை சரடை, அந்த மொழி பேசும் மக்களின் அடிப்படை இயல்பைப் பற்றிக்கொள்ளும் சூட்சுமத்தை அவர் கைவரப் பெற்றிருக்கிறார். எல்லா மொழிகளிலும் அவர் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெறுவதற்கான காரணமும் இதுவே.

தனித்துவ இயல்பு

திறமையும் அதனால் கிடைக்கும் வெற்றியும் ஒரு கட்டத்தில் கலைஞர்களைத் தேங்கச் செய்துவிடும். அந்தத் தேக்கம் அவர்கள் திறமையைச் சிறைப்படுத்திவிடும்; அவர்களின் கற்பனை ஆற்றலை அது களவாடிவிடும். ரஹ்மான் மட்டும் இதற்கு விதிவிலக்கு. தன்னுடைய தேடல்களின் மூலம் தேக்கநிலையை உடைத்து முன்னேறுவது அவருடைய இயல்பாக இருந்துவருகிறது.

இந்த இயல்பின் காரணமாகவே ரஹ்மானின் இசை காலத்தை விஞ்சி நிற்கிறது. மூன்று தலைமுறைகளைக் கடந்தும் நம்மை ஈர்த்துவருகிறது. இன்னும் சொல்லப்போனால், இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையை விட ரஹ்மானின் இசையே இன்றும் புதுமையாக இருக்கிறது. ரஹ்மானின் இசையைப் பிரதியெடுப்பதையே பெரும் வெற்றியாக இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய பிரதிகளின் மூலம் அவர்கள் ரஹ்மானின் உயரத்தை எட்டும்போது, முற்றிலும் வேறான ஓர் உயர்ந்த தளத்துக்கு அவர் சென்றுவிடுகிறார். தளம் விட்டு தளம் தாவும் ரஹ்மானின் இந்த இசை விளையாட்டு இனியும் தொடரும் என்பதை மாயவா, தூயவா பாடல் மீண்டும் அழுத்தமாக உணர்த்துகிறது.

பரவச நிலை

மாயவா, தூயவா எனும் பல்லவிக்கு ஏற்ப இந்த பாடலின் தூய்மையான இசை வடிவம், அதைக் கேட்கும்போதே நம் மனத்தை மாயமாக்கிவிடுகிறது. நம் மனத்தைக் கவர்வதற்கு எளிய மெட்டில் அமைந்த இந்தப் பாடலுக்கு அர்த்தமுள்ள வார்த்தைகளும் செவிக்கு இனிய இசையும் மட்டும் போதும். ஆனால், இந்தப் பாடலில் ஸ்ரேயா கோஷலின் தெய்வீக குரலும் இணைந்துள்ளது. இந்த இணைவு நமக்கு அளிக்கும் அனுபவம் வார்த்தைகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது. நம் செவியில் நுழையும் இந்தப் பாடல் நம்மை அமைதியில் ஆழ்த்தி, பரவசமளிக்கும் ஒரு மோன நிலைக்கு இட்டு செல்கிறது. சமீப காலத்தில் வந்த ஆகச் சிறந்த தமிழ்ப் பாடல் இது. இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஒன்றும் கூட. இரவின் நிழலில் கண்களை மூடி, இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அது ஏன் என்பது உங்களுக்கும் புரியும்.

இந்தப் பாடலைக் காண:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x