Last Updated : 17 May, 2022 12:28 PM

 

Published : 17 May 2022 12:28 PM
Last Updated : 17 May 2022 12:28 PM

17 மே: எட்வர்ட் ஜென்னர் பிறந்தநாள்: ‘நோய் எதிர்ப்பியலின் தந்தை!’

விஞ்ஞானியும் மருத்துவருமான எட்வர்ட் ஜென்னருக்கு மனித குலம் நன்றி சொல்ல வேண்டும். நச்சு வைரஸ்களால் பெரியம்மை என்ற தொற்றுநோய் மனிதர்களை மட்டும் தாக்கிக்கொண்டிருந்தது. இதனால் 10 சதவிகிதம் பேர் உயிரிழந்துகொண்டிருந்தனர். இந்தக் கொடிய நோய்க்குத் தடுப்பு மருத்தைக் கண்டுபிடித்து, மனித உயிர்களைக் காப்பாற்றியவர் எட்வர்ட் ஜென்னர்!


18-ம் நூற்றாண்டில் பெரியம்மை மிகக் கொடிய நோயாக, அச்சுறுத்திக்கொண்டிருந்தது. 1721-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இருந்து லேடி மேரி வோர்ட்லே மான்டகு என்பவர் நோய்த் தடுப்பு மருந்தை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார். இந்த மருந்தால் பெரியம்மையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. நோய் தாக்கிய 60 சதவிகிதம் பேரில் 20 சதவிகிதத்தினர் இறந்து போனார்கள்.

அந்தக் காலத்து மக்கள் மாட்டின் மடிக்காம்புப் புண்களில் (அம்மை) இருக்கும் பால், பெரியம்மை நோயைத் தடுக்கும் என்றும் ஒருமுறை அதைப் பயன்படுத்தினால் மீண்டும் பெரியம்மை வராது என்றும் நம்பினர். மக்களின் இந்த நம்பிக்கையை வைத்து 1768-ம் ஆண்டு மருத்துவர் ஜான் ஃப்யூஸ்டர், பெரியம்மையைத் தடுக்கும் வல்லமை மாட்டின் அம்மைப் பாலுக்கு இருப்பதாகக் கட்டுரை வெளியிட்டார்.

ஆனால், அவரால் அதை அறிவியல் பூர்வமாக விளக்க முடியவில்லை. இவரைத் தொடர்ந்து இன்னும் 5 பேர் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இறங்கினர். அவர்களாலும் அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலவில்லை. 1774-ம் ஆண்டு பெஞ்சமின் ஜெஸ்டி, மாட்டின் அம்மைப் பாலிலிருந்து நோய்த் தடுப்பு மருத்தை உருவாக்கி, தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்குச் செலுத்தி வெற்றி கண்டார். ஆனால், அந்த முறையைப் பரவலாகப் பயன்படுத்த முடியவில்லை.

ஜென்னரிடம் பெரியம்மைக்கான மருந்து கண்டுபிடிக்கும்படி இங்கிலாந்து மன்னர் கேட்டுக்கொண்டார். 20 ஆண்டுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஜென்னர், சாதாரண மக்களின் நம்பிக்கையில் உண்மை இருப்பதை அறிந்தார்.

மாடுகளைப் பராமரிக்கும் பணியாளர்களுக்குப் பெரியம்மை வரவில்லை என்பதும் அவர்களுக்கு வரும் மாட்டு அம்மை உயிர் இழப்பு ஏற்படுத்தக் கூடிய அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் தெரிந்துகொண்டார். தன்னுடைய தோட்டக்காரரின் மகன் 8 வயது ஜேம்ஸ் பிப்ஸைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

மாட்டு அம்மை வந்த ஒரு பெண்ணின் புண்ணிலிருந்து பாலை எடுத்து, ஜேம்ஸுக்குச் செலுத்தினார். குழந்தையின் உயிருடன் விளையாடுகிறார் என்று எல்லோரும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், மாட்டு அம்மை வந்த ஜேம்ஸ், விரைவில் குணமானார். மீண்டும் அவர் உடலில் பெரியம்மை கிருமியைச் செலுத்தினார் ஜென்னர்.

ஜேம்ஸுக்குப் பெரியம்மை ஏற்படவில்லை. பெரியம்மை நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்த ஜென்னர், 1798ஆம் ஆண்டு தடுப்பு மருந்து (Vaccine) என்ற நூலையும் வெளியிட்டார்.

பெரியம்மை தடுப்பு மருந்து ஐரோப்பா முழுவதும் பரவியது. ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் என்ற மருத்துவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து, தடுப்பு மருத்தைச் செலுத்தி, பெரியம்மை நோய் ஒழிப்பில் ஈடுபட்டார்.

மனித குலத்துக்கு மிகப் பெரிய கண்டுபிடிப்பை வழங்கிய ஜென்னர், தன்னுடைய கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற மறுத்துவிட்டார். உலகம் முழுவதும் இலவசமாகவே தடுப்பு மருந்தின் உரிமையை வழங்கினார். இதனால் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இன்று ‘நோய் எதிர்ப்பியலின் தந்தை’ என்று ஜென்னர் கொண்டாடப்படுகிறார்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x