Last Updated : 10 May, 2022 12:48 PM

 

Published : 10 May 2022 12:48 PM
Last Updated : 10 May 2022 12:48 PM

விண்வெளியில் எப்படி நடக்கிறார்கள்?

• விண்வெளியில் நடப்பது என்பது மிகவும் வித்தியாசமானது. விண்வெளி வீரர் ஆபத்துகளை எதிர்நோக்கிதான் இந்த நடையில் இறங்குகிறார்.
• விண்கலத்திலிருந்து வெளியே வந்துதான் விண்வெளி வீரர் நடையை மேற்கொள்கிறார். இது Extravehicular Activity (EVA) செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது.
• விண்வெளி நிலையத்தில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்வதற்கோ, புதிய கருவிகளைப் பொருத்துவதற்கோ, பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதற்கோ விண்வெளி நடையை மேற்கொள்கிறார்கள் விண்வெளி வீரர்கள்.
• வேலையின் தன்மையைப் பொறுத்து, விண்வெளி நடை பொதுவாக 5 முதல் 8 மணி நேரம்வரை மேற்கொள்ளப்படுகிறது. பூமியில் இருந்து கொண்டுவந்த கருவிகளைப் பொருத்துவதுதான் இந்த விண்வெளி நடையின் பிரதான நோக்கம்.

விண்வெளி உடை

• விண்வெளி உடை என்பது கிட்டத்தட்ட, சிறிய விண்கலம் போலிருக்கும். விண்வெளியில் நிலவும் கடினமான சூழலைச் சமாளிக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
• இந்த விண்வெளி உடைக்குள் சுவாசிக்க ஆக்சிஜன் இருக்கும். குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும்.
• விண்வெளி நடை மேற்கொள்வதற்குப் பல மணி நேரத்துக்கு முன்பே இந்த ஆடையை விண்வெளி வீரர்கள் அணிந்துவிடுவார்கள்.
• நாசா விண்வெளி வீரர்களின் உடை EMU (extravehicular mobility unit) என்று அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை உடையின் பின்பக்கம் ஆக்சிஜன் சிலிண்டரும் உயிர் காக்கும் பொருட்களும் இணைக்கப்பட்டிருக்கும்.
• இந்த உடையில் 14 அடுக்குகள் இருக்கும். இதில் 3 விதமான பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்கும். 1. விண்வெளி வீரரை அதிகமான வெப்பம் தாக்காத விதத்தில் குளிர்ச்சியான திரவம் வைக்கப்பட்டிருக்கும். 2. அழுத்தம் ஒரே விதத்தில் இருக்கும் வண்ணம், காற்று அடைக்கப்பட்டிருக்கும். 3. சூரியக் கதிர்வீச்சிலிருந்தும் விண்வெளிப் பொருட்களில் இருந்தும் காக்கும் விதத்தில் துணி வைக்கப்பட்டிருக்கும்.

விண்வெளியில் எப்படி நடக்கிறார்கள்?

• விண்வெளி நடையை மேற்கொள்வதற்கு முன்பு, விண்வெளி வீரர்கள் பல மணி நேரம் பயிற்சியை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்திலிருந்து எந்த வழியே செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பர்.
• விண்வெளி நடையின்போது விண்வெளி வீரர்களின் உடல் கயிறு மூலம் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கயிறு இணைக்காமலும் விண்வெளி நடை மேற்கொள்ளப்படும். இதுவரை 3 முறை கயிற்றால் இணைக்காமல் விண்வெளி நடை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
• விண்வெளி நடையின்போது கருவிகள் கைதவறி விழுந்தால், விண்வெளி வீரர்கள் மிதந்து சென்று கருவிகளை எடுத்துவிட முடியும். கயிறு கட்டியிருப்பதால் மிதப்பது எளிது.
• கயிறு கட்டாமல் விண்வெளி நடையில் இலக்கை விட்டுத் தவறினால், அவர்களது உடையில் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய ஜெட் பேக், அவர்களை விண்வெளி நிலையத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிடும்.

விண்வெளி நடையில் இருக்கும் சவால்கள்

• விண்வெளி நடை மிகவும் சவாலானது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தண்ணீருக்கு அடியில் இருப்பதுபோல் விண்வெளி உடை வடிவமைக்கப்பட்டிருக்கும். விண்வெளிக்குச் செல்வதற்கு முன் விண்வெளி வீரர்கள் தண்ணீருக்கு அடியில் நடந்து பயிற்சி எடுப்பார்கள். நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் இதற்காகவே மிகப் பெரிய நீச்சல் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.
• நீருக்கு அடியில் பயிற்சி எடுத்திருந்தாலும் விண்வெளியில் நடப்பது எளிதல்ல. விண்வெளி வீரர்கள் தங்கள் பாதங்களில் ஒரு தட்டை இணைத்து, சிரமத்தைக் குறைத்துக்கொள்கிறார்கள்.
• விண்வெளி உடையில் இணைக்கப்பட்டிருக்கும் குளிர்ச்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் திரவம், மிக வெப்பமாகவோ, குளிராகவோ மாறிவிடும். விண்வெளி நிலையத்தில் சூரியக் கதிர்கள் நேரடியாக விழும். இதனைச் சமாளிக்க வேண்டும்.
• விண்வெளியில் சுற்றி வரும் பொருட்கள், எரிகற்கள் போன்றவைத் தாக்காதவாறு விண்வெளி வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
• நாம் பூமியில் ஆக்சிஜனை மட்டும் சுவாசிப்பதில்லை. நைட்ரஜனையும் சேர்த்து உள்ளே இழுக்கிறோம். ஆக்சிஜனைத் தவிர பிற வாயுக்கள் கழிவாக வெளியேறிவிடுகின்றன. ஆனால், விண்வெளியில் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்க வேண்டிய சூழல். அதனால் உடலில் உள்ள நைட்ரஜன் விண்வெளி நடையின்போது குமிழ்களாக உடலில் தோன்றும். இதனால் தோள்பட்டை, முட்டி போன்ற இடங்களில் அதிக வலி உண்டாகும்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x