Last Updated : 06 May, 2022 08:15 PM

 

Published : 06 May 2022 08:15 PM
Last Updated : 06 May 2022 08:15 PM

செல்லப்பிராணிகளுக்காகச் சிறந்த நகரங்களை வடிவமைப்போம்

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவான ஒன்று. இயற்கை, விலங்குகள், மனிதர்களுக்கு இடையே சமநிலை ஏற்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை / கனவு. இதற்காகப் பல விழிப்புணர்வு முன்னெடுப்புகளை இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றே இன்று சென்னையில் நடந்த செல்லப்பிராணிகளின் நலனுக்கான கருத்தரங்கு.

இந்தக் கருத்தரங்கை MARS பெட்கேர் நிறுவனமும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து நடத்தின. அரசு, கல்வியாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்கு நல ஆர்வலர்கள் அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். செல்லப்பிராணிகளுக்காகச் சிறந்த நகரங்களை வடிவமைத்தலே இந்தக் கருத்தரங்கின் முக்கிய பேசு பொருளாக இருந்தது.

தெருவில் திரியும் பிராணிகளுக்கும், சொந்த செல்லப்பிராணிகளுக்கும் தேவைப்படும் முறையான பராமரிப்பு சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த கருத்தரங்கு அழுத்தமாக வலியுறுத்தியது. இந்தக் கருத்தரங்குக்குச் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர் மணீஷ் நர்னாவரே தலைமை வகித்தார். அவர் ஆற்றிய உரையில் “விலங்குகளின் பிரச்சனைகள் பெரும்பாலான நேரங்களில் கேட்கப்படுவதில்லை. இது போன்ற முயற்சிகள் சென்னையில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவற்றின் நிலையைக் குறித்த விழிப்புணர்வையும் உரையாடல்களையும் உருவாக்கும்” எனத்தெரிவித்தார்.

செல்லப்பிராணிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, தத்தெடுப்பு இயக்கங்கள், செல்லப்பிராணிகள் நல முகாம்கள், தெருவில் திரியும் பிராணிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பல முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டதாக MARS பெட்கேர் இந்தியாவின் விற்பனை இயக்குநர் நிதின் ஜெயின் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜூன் 2021 இல் ஹைதராபாத்தில் நடந்த முதல் குழு விவாதம், அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தவறான வழிமுறைகளையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மையமாகக் கொண்டு இருந்தது. பெங்களூரூவில் அக்டோபர் 2021 இல் நடைபெற்ற இரண்டாவது கருத்தரங்கு, செல்லப்பிராணிகளுக்கான சிறந்த நகரங்களை உருவாக்குவதில் உள்ள சவால்களை மையமாகக் கொண்டு இருந்தது. இதன் நீட்சியாகவே இன்று சென்னையில் நடந்த கருத்தரங்கு திகழ்ந்தது. செல்லப்பிராணிகளின் நலன் குறித்த தொடர் உரையாடலை ஏற்படுத்தும் விதமாகவும், குரலற்ற செல்லப்பிராணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் இந்தக் கருத்தரங்கில் நிகழ்ந்த விவாதங்கள் அமைந்திருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x