Last Updated : 04 May, 2022 03:51 PM

3  

Published : 04 May 2022 03:51 PM
Last Updated : 04 May 2022 03:51 PM

தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள்... மனத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுங்கள்

ஒரு நாளுக்கு ஒரு முறை குளிக்கிறோம், இரு முறை பல் துலக்குகிறோம், பல முறை கை, கால், முகத்தைக் கழுவுகிறோம். அந்த அளவுக்கு உடலைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிக்கொள்ள நாம் அக்கறை எடுக்கிறோம். ஆனால், இதே அளவுக்கு மனத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுக்கிறோமா என்றால், இல்லை என்பதுதான் அதற்கான பதில். சொல்லப் போனால், நம் வாழ்வின் மகிழ்ச்சிக்கும் தரத்துக்கும் உடலின் தூய்மையைவிட மனத்தின் தூய்மையே மிகவும் அவசியம். இருப்பினும், நாம் இன்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அல்லது அதன் முக்கியத்துவம் குறித்த புரிதலில் நாம் கவனம் செலுத்துவது இல்லை.

மனத்தைச் சோர்வுக்கு உள்ளாக்கும் கவலைகளிலிருந்து மீள்வதற்கும், இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றுவதற்கும் மனத்தின் ஆரோக்கியமே அடித்தளம். மனத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குப் பெரிய மெனக்கெடல் எதுவும் தேவையில்லை. தினமும் 15 நிமிடங்கள் அதற்குப் போதும். மனத்துக்கு என நாம் ஒதுக்கும் 15 நிமிடங்கள், மன அழுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்களிக்கும் கார்டிசோலின் எனும் ஹார்மோனின் அளவை நம் உடலில் குறைக்கும். கார்டிசோலின் ஹார்மோனின் அதிகரிப்பு மன நலனோடு சேர்த்து உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

15 நிமிடங்களை ஒதுக்க முடியுதா?

வேலைப் பளு, நேரமின்மை போன்ற காரணங்களே நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே நேரமில்லை.இந்த நிலையில், மன ஆரோக்கியத்துக்கு என்று தனியாக 15 நிமிடங்களை எப்படி ஒதுக்குவது என்று நாம் நினைக்கலாம். உண்மை என்னவென்றால், இந்த 15 நிமிடப் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல்; நம்முடைய உடல்நலனை மேம்படுத்தி, அன்றாட வாழ்வின் தரத்தை உயர்த்துவதற்கும் வெகுவாக உதவுகிறது. மன ஆரோக்கியத்துக்கு என நாம் ஒதுக்கும் 15 நிமிடங்கள், நம்முடைய செயல்திறனை அதிகரிக்கும். அது அந்தச் செயலை முடிக்கத் தேவைப்படும் நேரத்தைக் குறைக்கும். அதாவது, இந்த 15 நிமிடங்கள், நாம் தினமும் எதிர்கொள்ளும் நேரமின்மைப் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும்.

நேரமின்மை என்பது மனத்தோடு தொடர்புடைய ஒரு பிரச்சினை

நேரமின்மை என்பது ஒருவித மாயையே. செயல்திறன் குறைவால்தான் நமக்கு நேரமின்மை ஏற்படுகிறது. நம்முடைய செயல்திறன் குறைவால், நாம் வேலை செய்யும் நேரம் அதிகரிக்கிறது; மனமும் உடலும் அலுப்புக்கு உள்ளாகிறது; குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலை முடியாத காரணத்தால், அது நமக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் நம் அன்றாட வாழ்வின் தரத்தைப் பாதித்து, நம்முள் துளிர்க்கும் நேர்மறை எண்ணங்களை முளையிலேயே பொசுங்கச் செய்துவிடுகிறது. இது ஒருவித முடிவற்ற சுழற்சி சிக்கல். முதலில், நேரமின்மையைக் காலத்துடனோ, பணியின் இயல்பினுடனோ தொடர்புப்படுத்திப் பார்க்கும் பொதுப்புத்தியை முதலில் நாம் களைந்தெறிய வேண்டும். நேரமின்மையை மனத்தின் பிரச்சினையாக, மன ஆரோக்கியத்தின் குறைபாடாக நாம் அணுகத் தொடங்க வேண்டும். பிரச்சினையின் உண்மையான காரணத்தை நோக்கிச் சென்று, களையும் வழிமுறை அது.

மனநலச் சுகாதாரம்

மனத்தை மீட்டமைக்க நாம் தினமும் ஒதுக்கும் நேரம் நமக்கு மன அமைதியைப் பரிசளிக்கும். மன அமைதி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அது நேர்மறை எண்ணங்களை நம்முள் செழிக்கச் செய்யும். இந்த நேர்மறை எண்ணங்கள் நம்மை மன அழுத்தத்திலிருந்து காக்கும். மாறாக, நேரமின்மை என்கிற காரணத்தைச் சொல்லி, மனத்துக்கு என நேரம் ஒதுக்காமல், மன அழுத்தத்தோடு ஒரு நாளை தொடங்கினால், அந்த நாள் முழுவதும் மன அழுத்தத்தோடு கழிந்து முடியும். அந்த மன அழுத்தம் மறுநாளும் தொடரும்.அதற்கு மறுநாளும் தொடரும். தெளிவான, அமைதியான, ஆரோக்கியமான மனநிலையுடன் தொடங்கும் ஒரு நாளே நமக்கு வெற்றியையும்மகிழ்ச்சியையும் அளிக்கும். மனத்தையும் மீட்டமைக்கும்.

மனத்தைக் காட்டும் கண்ணாடி

மனநலச் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது என்பது, கண்ணாடியைச் சுத்தம் செய்து அதில் நம்மைப் பார்ப்பது போன்றது. சுத்தமான கண்ணாடியே, நம்முடைய முழுமையான அழகை நமக்குக் காட்டும். அது போன்றே, தூய்மையான, ஆரோக்கியமான மனநிலையே, நம்முடைய உண்மையான நல்லியல்புகளை நமக்கு உணர்த்தும். மாறாக, ஆரோக்கியமற்ற மனம், நமக்குள் இருக்கும் கோபம், வருத்தம், ஆதங்கம், பயம், பதற்றம் போன்ற இயல்புகளை நமக்குக் காட்டும். அவையே நமது இயல்புகள் என நம்பச் செய்யும். மன மீட்டமைப்புக்கு என நாம் தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கும்போது, நாம் அடிப்படையில் மகிழ்ச்சியாக இருப்பதை உணரப் பழகுகிறோம். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியே நாம் என்பதை நம்பத் தொடங்குகிறோம். இதன் காரணமாக, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, அதிக நம்பிக்கையுடனும், தெளிவுடன் அவற்றை எதிர்கொள்கிறோம்; மகிழ்ச்சியைத் தக்கவைக்கிறோம். இதற்காக நாம் செய்ய வேண்டிய நான்கு எளிய வழிமுறைகள்:

புதிய செயல்பாடுகள்

மனநலச் சுகாதார மீட்டமைப்புக்கு உதவும் முதல் படி இது. புதிய செயல்களில் ஈடுபடுவது, மனத்தின் சலிப்பையும் அலுப்பையும் அகற்றும்.மனத்துக்கு உற்சாகம் அளிக்கும்.இந்த உற்சாகம் கார்டிசோலின் ஹார்மோனின் சுரப்பைக் குறைக்கும்.மனத்தை அமைதிப்படுத்தும். உங்கள் அகத்தைத் தெளிவான புரிதலால் நிரப்பும் நிலை இது.

காலையில் தினமும் 15 நிமிடங்கள், நம்முடைய புறச் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்த்து, மனநல மேம்பாட்டுக்கு என ஒதுக்க வேண்டும். இந்த 15 நிமிடங்களில், மனத்துக்குள் நாம் நிரப்பும் எண்ணங்களே, அன்றைய நாளை எதிர்கொள்வதற்கான அமைதியான மனநிலையை நமக்கு அளிக்கும். மூச்சை ஆழமாக இழுத்து விட்ட படியே காபியை மெதுவாக ரசித்து அருந்துவது அல்லது பயணங்களில் செய்திகளைக் கேட்பதற்குப் பதிலாக இனிமையான இசையைக் கேட்பது அதற்கு உதவும். வீட்டினுள் அமராமல் வெளியே அமர்வது, இயற்கையை ரசித்தபடியே மெதுவாக நடப்பது போன்றவையும் உதவும். முக்கியமாகத்தினமும் புதிய செயல்களை முயன்று, நமக்கு ஏற்ற செயல் எதுவென்று கண்டுபிடித்து, அதைத் தினமும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

முன்னேற்றத்தை எழுதிவைப்பது

முயற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அதனால் ஏற்படும் மாற்றங்களை / முன்னேற்றங்களைக் கவனிப்பதும். தினமும் புதிய செயல்களை 15 நிமிடங்கள் முயன்ற பிறகு, அதை நாம் எப்படி உணர்ந்தோம், அந்நாளில் நமக்கு ஏற்பட்ட ஆரோக்கியமான மாற்றங்கள் போன்றவற்றை எழுதிவைக்கத் தொடங்குவது அதற்கு உதவும். நாள் முழுவதும் மன அமைதி நீடித்திருந்ததா,கூடுதல் செயலாற்றல் கிடைத்ததா,மன அழுத்தத்தை எளிதாகச் சமாளிக்க முடிந்ததா? போன்றவற்றைக் குறித்து நாம் தொடர்ந்து எழுதிவருவது, நமக்குள் நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுக்க உதவும்.

தேவையில் கவனம்

ஒரு செயல் அல்லது வழிமுறை நம் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது. வெவ்வேறு சூழ்நிலைகளை / பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நமக்கு வெவ்வேறு வழிமுறைகள் தேவைப்படும். அவை குறித்து அறிவதற்கு முதலில் நமக்கு நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்த புரிதலும், பின்னர் அந்தச் சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவிய வழிமுறைகள் குறித்த தெளிவும் இருக்க வேண்டும். அதற்கு நாம் எல்லா சூழ்நிலைகளையும் திறந்த மனத்துடன், கூடுதல் விழிப்புடன் அணுக வேண்டும். இது ஒரு தொடரோட்டம். 15 நிமிடங்கள் நாம் மேற்கொள்ளும் முயற்சியின் பலனை வாழ்நாள் முழுவதுமாக நிலைக்க உதவும் ஒட்டம் இது.

கூடுதல் நேரம்

மனத்துக்கு எனத் தினமும் நாம் ஒதுக்கும் 15 நிமிடங்கள் முதலில் சிரமமானதாகத் தோன்றினாலும், நாளடைவில் அது எளிதானதாக மாறிவிடும். சில நாட்களில் நம் மனநிலையின் இயல்புக்கு ஏற்ப, மன மீட்டமைப்புக்குக் கூடுதல் நேரம் தேவை என நாம் உணரலாம். அந்த நிலையில், குறைந்தது வாரத்துக்கு மூன்று நாட்கள் என நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா, நீச்சல் போன்ற லேசான உடல் செயல்பாடுகளில் நாம் ஈடுபடத் தொடங்க வேண்டும். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம், மனத்தை அதன் அழுத்தத்திலிருந்து விடுவித்து, நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நாளின் மத்தியில் அன்றாட வேலையிலிருந்து சற்று விலகி நின்று வேடிக்கை பார்ப்பது, ஸ்மார்ட்போனிலிருந்தும்கணினியிலிருந்தும் சில நிமிடங்கள் விலகியிருப்பது போன்றவை அதற்கு உதவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x