பிரெட்டிலே கலைவண்ணம் கண்டார்!
எண்பதுகளின் மத்தியில் வெளியான ‘உதயகீதம்’ படத்தில் வரும் ஒரு வசனம் மிகப் பிரபலம். ‘தேங்காயில் குருமா வைக்கலாம்.. தேங்காயில் பாம் வைக்க முடியுமா?’ என்கிற நகைச்சுவைக் காட்சி அந்தக் காலகட்டத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. அதுபோலவே, ‘பிரெட்டில் ஜாம் தடவிச் சாப்பிடலாம்... பிரெட்டில் ஓவியம் வரைய முடியுமா?’ என்று கேட்க வைத்திருக்கிறது ஜப்பானில் ஓர் இளம் பெண் செய்து வரும் பிரெட் சாகசம்.
கலர்ஃபுல் பிரெட்
ஓர் உணவைப் பார்த்தவுடனே அதைச் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வை அது ஏற்படுத்த வேண்டும். அந்த அளவுக்கு உணவு வகைகள் வாயில் எச்சிலை ஊற வைப்பது மட்டுமல்ல, கண்களுக்கும் விருந்தாக வேண்டும். அந்த வகையில் உணவுகளைப் பார்க்கும்போதே கண்களைக் கவரும் வகையில் தயார் செய்வது இன்று உலகெங்குமே பிரபலமாகி வருகிறது. பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள சமையல் கலைஞர்கள் இப்படி வித்தியாசமான முறையில் உணவு வகைகளைத் தயாரிப்பது வழக்கம். ஆனால், ஜப்பானில் உள்ள சமையல் கலைஞர் மனாமி சசாகி தனிப்பட்ட முறையில் கண்கவர் உணவு வகைகளைச் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
பிரெட்டில் இவர் செய்யும் கலை வடிவமைப்புகள் நம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக இருக்கின்றன. பிரெட்டுகளை வைத்து மனாமி சசாகி (Manami Sasaki) காட்டிய கைவண்ணத்தின் மூலம் தற்போது அவர் இணையத்தில் பிரபலமாகிவருகிறார். ஜப்பானின் அழகிய நிலப்பரப்புகள், கார்ட்டூன்கள், ஜப்பானியப் பெண்கள் எனப் பலவற்றையும் பிரெட்டில் கலைவண்ணமாகப் படைத்து பிரபலமடைந்திருக்கிறார். பிரெட்டுகளைக் கண்கவர் வண்ணத்தில் மாற்றுவதற்குக் காய்கறிகளையும் பழங்களையும் இவர் பயன்படுத்துவது தனிச் சிறப்பு. இதனால், பிரெட்டுகளை வீணாக்காமல் சாப்பிட்டுவிடலாம்.
ஜப்பானில் பிரபலமான பெண்
மேலும் பிரெட்டுகளில் தான் விதவிதமாக செய்துள்ள கலைவண்ணத்தை ஒளிப்படங்களாக எடுத்துத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் மனாமி. இந்த பிரெட் படைப்புகளைப் பார்த்த நெட்டிசன்கள், ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். அவருடைய கண்கவர் பிரெட் ஒளிப்படங்கள் வைரல் ஆகவே, இணையத்தில் மனாமி பிரபலமாகிவிட்டார். இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் குறைந்த எண்ணிக்கையில் பின்தொடர்வோரை வைத்திருந்த மனாமிக்கு அந்த எண்ணிக்கை எகிறத் தொடங்கியிருக்கிறது. மனாமியின் இந்த பிரெட் கலை படைப்புகளுக்காக ஜப்பானில் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
ஆக, பிரெட்டை வைத்து எதுவும் செய்யலாம் என நிரூபித்திருக்கிறார் இந்த இளம் பெண். இப்போது சொல்லுங்கள், பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட மட்டுமா முடியும்?!
