Last Updated : 12 Apr, 2022 02:10 PM

 

Published : 12 Apr 2022 02:10 PM
Last Updated : 12 Apr 2022 02:10 PM

கட்டுப்பாடுகள் இல்லாத சூழலில், கரோனாவிலிருந்து நம்மைக் காக்கும் 6 எளிய வழிமுறைகள்

கரோனா அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது ஆபத்தில் முடியும்

ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 796 பேர் கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; பதிவான இறப்புகள் 19 மட்டுமே.

குறைந்துவரும் கரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு, கடந்த மார்ச் 31 முதல் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஒன்றிய அரசு விலக்கிக்கொண்டது. முகக்கவசம் அணிவதையும், தனி மனித இடைவெளியையும் மட்டும் தொடர வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தச் சூழலில், தற்போது சில ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இந்தியாவில் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.

எனவே, இந்தியாவில் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கும் சூழலில், மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. உங்களுக்கு ஜலதோஷமோ, வேறு லேசான அறிகுறிகளோ ஏற்பட்டால், உங்களையும் சுற்றத்தையும் பாதுகாக்க இந்த 6 எளிய நடவடிக்கைகள் உதவும்.

அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

லேசான பாதிப்புகளைச் சமாளிப்பது எளிது என்றாலும், கரோனாவின் லேசான அறிகுறிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்த வரையில், அது பொதுவாக ஜலதோஷம் போன்ற அறிகுறிகளையே ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பருவகால பாதிப்புகளுடன் அந்த அறிகுறிகளை இணைத்து மக்கள் குழப்பமடைகின்றனர்.

காய்ச்சல், தொடர் இருமல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் வலி, இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்றின் லேசான பாதிப்பு கூட, ’நீடித்த கோவிட் ’ போன்ற கரோனாவுக்குப் பிந்தைய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்

கோவிட் பாதிப்புகள், குறிப்பாக ஒமைக்ரான் பாதிப்பு, நம்மை மிகவும் குழப்பமடையச் செய்யும். அதன் லேசான அறிகுறிகள், உங்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படவில்லை என்று நம்பச் செய்யும். இருப்பினும், அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது வரவிருக்கும் ஆபத்துகளைத் தவிர்க்க உதவும்.

சாதாரண சளி என்றாலும்கூட, அது நிற்கும்வரை, நம்மை நாமே தனிமைப்படுத்தி, பிறரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படாமல், வேறு சுவாசத் தொற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அது உங்கள் அருகாமையில் இருக்கும் பலவீனமான, எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையிலிருக்கும் மனிதர்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பரிசோதனை செய்துகொள்ளுங்கள்

நீங்கள் எதனால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் கண்டறிவதற்கான சிறந்த வழி, உடனடியாகப் பரிசோதித்துக்கொள்வதே. உடனடியாக முடிவுகளை அறிந்துகொள்ள ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை நாடலாம்.

துல்லியமான முடிவுகளுக்கு RT PCR பரிசோதனை உதவும். ஆனால், அதில் முடிவுகள் கிடைக்கச் சிறிது நேரம் ஆகும்.

குடும்ப விழாக்களைத் தவிருங்கள்

அறிகுறிகள் மறையும் வரை அல்லது முழு ஆரோக்கியத்தை நீங்கள் உணரும் வரை, விருந்துகள் அல்லது கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம். வீட்டிலேயே தனிமையில் இருங்கள்; உடல் நலனை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கு கோவிட் பாதிப்போ, காய்ச்சலோ, ஜலதோஷமோ எதுவாக இருந்தாலும், அது உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மற்றவர்களுக்கும் பரவும் என்பதைப் புரிந்து பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்.

பலவீனமானவர்களிடமிருந்து முற்றிலும் விலகி இருங்கள்

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நுரையீரல், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற ஏதேனும் இணை நோய்களைக் கொண்டவர்களுக்கும், நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் கோவிட் 19 பாதிப்பு மிகவும் கடுமையானதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.

எனவே, உங்களுக்கு லேசான தொற்று இருந்தால்கூட, அதிக ஆபத்துள்ள பிரிவின் கீழ் வரும் இந்த நபர்களிடமிருந்து முற்றிலும் விலகி இருப்பது முக்கியம். நாவல் கரோனா வைரஸ், வெவ்வேறு நபர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பால் கழுவிக்கொள்வது, கூட்டத்தைத் தவிர்ப்பது போன்ற கரோனா தடுப்பு வழிமுறைகள் இன்று கட்டாயம் இல்லையென்றாலும்கூட, அவற்றை நீங்கள் கட்டாயம் பின்பற்றுங்கள்.

கரோனா நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்குத் தடுப்பூசி மிகவும் அவசியம். எனவே, பூஸ்டர் டோஸ்களுக்குத் தகுதியானவர்கள் அதை உடனடியாகப் போட்டுக்கொள்வது உங்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x