Published : 11 Apr 2022 11:23 AM
Last Updated : 11 Apr 2022 11:23 AM
"தாத்தா... தாத்தா..."
தோளைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தான் பிரவின்.
உறக்கத்தில் இருந்து எழுந்தார் தாத்தா.
"என்ன கண்ணு?”
“நான் கதை சொல்லும்போதே தூங்கிட்டீங்க...”
”அசந்து தூங்கிட்டேன், கதையைத் திரும்பச் சொல்றீயா?"
"போங்க தாத்தா, நான் எப்ப கதை சொல்ல வந்தாலும் தூங்கிட வேண்டியது. உங்ககூட பேச மாட்டேன்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரவின்.
"உங்க தாத்தாவைப் பத்தி உனக்குத் தெரியாதா கண்ணு? அவரு எப்பவும் அப்படித்தான். எதையும் காதுல வாங்க மாட்டாரு” என்றார் பாட்டி.
"நீங்க ரெண்டு பேருமே ஒண்ணுதான். நான் எவ்வளவு கதை யோசிச்சி வச்சிருக்கேன் தெரியுமா? உங்களுக்குச் சொல்லலாம்னு வந்தா, ரொம்பச் சலிச்சிக்கிறீங்க!" என்று சொல்லிக்கொண்டே மாடிக்குக் கிளம்பினான் பிரவின்.
"என் கண்ணுல்ல, இங்க வாடா கோவிச்சிக்காத..."
"பாட்டி, உங்க கூடவும் நான் பேசமாட்டேன்."
"சரி, இப்ப நீ கதை சொல்லணும், நாங்க கேட்கணும் அதானே? சொல்லு” என்று பிரவினின் கையைப் பிடித்து மடியில் உட்கார வைத்தார் பாட்டி.
"நான் மாடியில கிளிக்குத் தண்ணி வைக்கப் போனேனா, அப்போ வானத்துல ஒரு சின்ன ஏரோபிளேன் போச்சா..."
"ம்..."
"அதுல இருந்து ஒரு பெரிய டைனோசர் குட்டி கீழ விழுந்துடுச்சி பாட்டி!”
"ஐயோ... டைனோசரா... அப்பறம்..."
"பாவம் மயக்கமா இருந்துச்சு... கிளிக்கு வச்சிருந்த தண்ணிய எடுத்து அந்த டைனோசர் குட்டிக்குக் குடுத்தேன். அதுக்குள்ள அந்தக் குட்டியோட அப்பா டைனோசர் வந்துடுச்சி. நான் பயந்துட்டேன். உடனே என் பின்னாடி ஒளிஞ்சிருந்த குட்டி டைனோசரைக் காட்டினதும்..."
"போதும்... போதும்... அளந்துவிட்டது... மீதிய உங்கம்மா கிட்ட சொல்லு" என்று பிரவினை அனுப்பி வைத்தார் பாட்டி.
சமையலறைக்குப் போனான் பிரவின். அம்மா வேலையில் இருந்ததால் தான் சொல்வதைக் கேட்க மாட்டார் என்று நினைத்து, மீண்டும் பாட்டியிடம் வந்தான்.
"என்னாச்சு செல்லத்துக்கு?"
பதில் சொல்லாமல் பாட்டியின் மடியில் படுத்து உறங்கிவிட்டான் பிரவின்.
தூங்கிக்கொண்டிருந்த பிரவினை எழுப்பி பால் கொடுத்தார் அம்மா.
"பாட்டி, நம்ம வீட்டுக்கு ஒரு பெரிய யானை வந்துச்சு..."
"யானையா? எப்போ வந்துச்சு? கனவுலயா?"
"சொல்றதைக் கேளுங்க பாட்டி. அந்தப் பெரிய யானைகூட ஒரு குட்டி யானையும் வந்துச்சு. அந்தக் குட்டி யானைக்குத் தாகமா இருக்குனு எங்கிட்ட தண்ணி கேட்டுச்சு. காட்டுல தண்ணி இல்லையானு கேட்டேன். காட்டைத்தான் மனுஷங்க அழிச்சிட்டு வர்றாங்களே, அதான் நாங்க ஊருக்குள்ள வந்து உங்ககிட்ட கேக்கறோம். எல்லாரும் எங்களைப் பார்த்து பயந்து அடிக்கறாங்க... வெடி வைக்கிறாங்க... நீ மட்டும் தான் பயப்படாம எங்கிட்ட பேசற. அதான் உன்கிட்ட கேக்கறேன்னு சொன்னுச்சு பாட்டி."
"ம்.... அப்புறம்?"
"நான் கையில வச்சிருந்த பாலைக் குடுத்தேன். குட்டி யானை பாலைக் குடிச்சிடுச்சு!"
அப்போது, "சார் போஸ்ட்... " என்ற குரல் கேட்டது.
"தபால்காரரா?"
பிரவினின் அப்பா தபாலை வாங்கிப் பிரித்தார். “அட, நம்ம பிரவினோட கதை குழந்தைகள் பத்திரிகையில முதல் பரிசு வாங்கியிருக்காம்! என்னால நம்பவே முடியல! வாழ்த்துகள் பிரவின்” என்று சிரித்தார்.
"என்ன சொல்றீங்கப்பா? நான் எதுவும் எழுதவும் இல்ல, அனுப்பவும் இல்லப்பா" என்றான் பிரவின்.
"என்னப்பா சொல்றே? இவன் எப்படி கதையெல்லாம் எழுதி அனுப்பியிருப்பான்?” என்று குழப்பத்துடன் கேட்டார் பாட்டி.
”நான் தான் இவன் சொன்ன கதையை எழுதி, பத்திரிகைக்கு அனுப்பி வச்சேன். இப்போ ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைச்சிருக்கு!” என்றார் அங்கு வந்த பிரவினின் அம்மா.
"இவனோட கற்பனைக்குப் பெரிய எழுத்தாளராதான் வருவான்னு நினைச்சேன். இப்பவே அது உண்மையாயிருச்சே!” என்று பாட்டி பிரவினைக் கட்டிக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT