Published : 05 Apr 2022 03:27 PM
Last Updated : 05 Apr 2022 03:27 PM
கடலை விரும்பாதவர்கள் உண்டா? கடற்கரைக்குச் செல்வதென்றால் சிறுவரிலிருந்து பெரியவர் வரை எல்லோருக்கும் கொண்டாட்டமாகத்தானே இருக்கும்! தமிழ்நாட்டில் கிழக்குக் கரை ஓரமாக உள்ள ஊர்களில் நாம் பார்க்கும் கடல் வங்காள விரிகுடா. இந்தியாவின் மேற்குக் கரையோரமாக நாம் பார்ப்பது அரபிக் கடல். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது இந்துமாக் கடல். பூமியின் மேற்பரப்பில் இந்துமாக் கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், ஆர்டிக் கடல், தென் கடல் ஆகிய ஐந்து பெரிய கடல்கள் அமைந்துள்ளன.
இவற்றைத் தவிர, வங்கக் கடல், அரபிக் கடல், செங்கடல், பால்டிக் கடல், மத்திய தரைக் கடல், பாரசீக வளைகுடா என நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கடல்கள் உள்ளன. நாம் பெரிய கடல்கள், சிறிய கடல்கள் என்று பிரித்துக்கொண்டாலும் உலகம் முழுவதும் ஒரே கடல்தான் இருக்கிறது! நம்ப முடியவில்லையா? ஒரு கப்பலில் ஏதாவது ஓரிடத்திலிருந்து கிளம்பினால், பூமியைச் சுற்றிவந்துவிட முடியும்! பெரிய கடல்களும் சிறிய கடல்களும் ஒன்றாக இணைந்திருக்கும்.
நிலத்தை நம் வசதிக்காக மாநிலம், மாவட்டம் என்று பிரித்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோலதான் கடலையும் நம் வசதிக்காகப் பிரித்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். நிலப் பகுதியில் மேடு பள்ளம் இருக்கின்றன. ஆனால், கடலின் மேற்பரப்பில் மேடு, பள்ளம் எதுவும் இல்லை. அதனால்தான் ‘கடல் மட்டம்’ என்ற அளவைப் பயன்படுத்துகிறோம்.
கடல்களில் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் எப்போதும் ஒரே அளவில் இருக்காது. காரணம் காற்று காரணமாக அலைகள் வீசுகின்றன. புயல்கள் காரணமாக ராட்சச அலைகள் தோன்றுகின்றன. இவை அல்லாமல் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஓரளவு ஈர்ப்பு காரணமாகக் கடல் நீர் பொங்கும். பின்னர் உள்வாங்கும். பூமி தனது அச்சில் சுழல்வதால் எல்லாக் கடல்களிலும் இது நிகழும். இதை ஓத ஏற்றம் என்றும் ஓத இறக்கம் என்றும் அழைப்பார்கள்.
ஓத ஏற்றத்தின் போது கடல் நீர் கரையைத் தாண்டி வெளியே வரும். ஓத இறக்கத்தின் போது கடல் நீர் உள்ளே சென்றுவிடும்.
பசிபிக் கடல் தான் பரப்பளவில் மிகப் பெரியது. அட்லாண்டிக் இரண்டாவது இடத்திலும் இந்துமாக் கடல் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT