Published : 01 Apr 2022 10:30 AM
Last Updated : 01 Apr 2022 10:30 AM

திரை வெளிச்சம் | ‘பான் இந்தியா’ பாதையா, போதையா?

‘பான் இந்தியா பிலிம்’, ‘பான் இந்தியா ஸ்டார்’, ‘பான் இந்தியா டைரக்டர்’ ஆகிய சொற்பதங்கள், தமிழ், தெலுங்குத் திரையுலகில் உரக்கக் கேட்கின்றன. ‘எந்திரன்’, ‘2.0’ படங்களின் மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்தார் ஷங்கர். ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களின் மூலம் எஸ்.எஸ்.ராஜமௌலி அதைச் சாதித்தார். கர்நாடகத்துக்குள் சுருங்கிவிட்ட ஒன்றாக இருந்த கன்னடப் படவுலகை, ‘கே.ஜி.எஃப்’ மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் அதன் இயக்குநர் பிரசாந்த் நீல்.

ஆனால், கலாச்சார ரீதியாக தங்களுடைய அடையாளத்தை வணிகப் படங்களும் இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மலையாளப் படவுலகத்துக்கு இந்த ‘பான் இந்தியா’ பைத்தியம் பிடிக்கவில்லை. “ஒரு மொழியில் அவர்களுக்குரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தை, ‘பான் இந்தியா ரிலீஸ்’ எனச் சொல்வதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அந்த வார்த்தை எனக்கு எரிச்சலூட்டுகிறது” என துல்கர் சல்மானால் துணிந்து கூற முடிகிறது. இத்தனைக்கும் அவர் நேரடித் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருபவர். வட்டாரத் தன்மையை இழந்துவிடாத, அவர் நடித்த பல படங்கள் பிற மொழிகளில் மறு ஆக்கமும் செய்யப்படுகின்றன.

பட்ஜெட்டும் லாபமும்!

கறுப்பு வெள்ளை காலம் தொட்டு, ஒரு மொழியில் வெற்றிபெறும் படத்தின் ரீமேக் உரிமை பெறப்பட்டு, பிற மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படும். மறு ஆக்கம் பெறும் படத்தின் மையக் கதையைச் சிதைக்காமல், பிராந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ப விஷயங்கள் மாற்றப்படும். இந்தியிலிருந்து ஜாவேத் அக்தர் - சலீம் கான் திரைக்கதைகள் அப்படித்தான் தென்னிந்திய மொழிகளுக்கு வந்து சேர்ந்தன. அதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான கதைகள் இங்கிருந்து அங்கே சென்றன. இப்போதும் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. ஒரு பன்மொழிப் படம் என்பது ஒரு மொழிலிருந்து மற்றொரு மொழியின் கலாச்சாரத் தன்மைக்கு ஏற்ப மாற்றங்கள் பெற்றுப் பயணப்பட வேண்டும். அதற்கு, எல்லா நிலப்பரப்புக்கும் பொருந்தக்கூடிய பொதுவான மையக் கதை இருக்க வேண்டும். தற்காலத்தில் இதற்கு, ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம்’ ஒரு சிறந்த உதாரணம். ஆனால் இன்று, ‘பான் இந்தியா படம்’ என்கிற பிரகடனத்துடன் உருவாகும் படங்கள், பார்வையாளர்களுக்கு காட்சிகளின் பிரம்மாண்டத்தால் போதையூட்டி வருகின்றன. நான்கு தென்னிந்திய மொழிகளோடு, இந்தி மொழிப் பார்வையார்களையும் இலக்காக வைத்து, ஒவ்வொரு படவுலகிலும் பிரபலமான நடிகர்களில் தலா இருவரைத் திரைக்கதைக்குள் திணித்து உருவாக்கப்படும் இப்படங்களின் செயற்கைத்தனம், பிராந்திய மொழிகளில் முன்னேற்றம் கண்டு வந்த தரமான வெகுஜன சினிமா ரசனையின் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றன.

மறு ஆக்கம் என்கிற கருத்தாக்கத்தைப் புறந்தள்ளும் ‘பான் இந்தியா’ படங்கள், ஒரே சமயத்தில் இந்தியா முழுவதும் வலையைப் போட்டு வசூலைத் துடைத்து எடுத்துவிடத் துடிக்கின்றன. அதற்கு, அந்தப் படங்களின் பிரம்மாண்டமும் அதற்காகச் செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டும் ‘பான் இந்தியா’ எனும் கட்டாயத்துக்குத் தள்ளுவதாக, அதன் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கூறுகிறார்கள். முதலீட்டுக்கு ஏற்ப பல மடங்கு லாபம் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர, முதன்மை மொழி ஒன்றில் உருவாகும் ‘பான் இந்தியா’ படத்துக்கு வேறு கலை சார்ந்த நோக்கங்கள் இல்லை. ‘பிளாஸ்டிக்’ தன்மையுடன் டப்பிங் செய்யப்படும் இந்தப் படங்கள், மொழித் தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவதற்கு, படத்தின் பட்ஜெட்டில் கணிசமான ஒரு பகுதி விளம்பரத்துக்காக செலவழிக்கப்படுகிறது. ரசிகன் விலகியிருக்க விரும்பினாலும் மண்டையைக் குடையும் விதவிதமான விளம்பரங்கள் அவனுடைய கழுத்தைப் பிடித்து தள்ளி, திரையரங்குக்கு அழைத்துகொண்டு வருகின்றன.

வாசன் காட்டிய முன் மாதிரி!

சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத் தொடங்கி, பல தென்னிந்திய ஆளுமைகள் ‘பான் இந்தியா’ எனும் சவாலை ‘மறு ஆக்கம்’ வழியாகவே நேர்மையான வழியில் சாதித்திருக்கிறார்கள். அரசுரிமைக்கு உரிய இளவரசன், தனது காதலியுடன் சர்க்கஸ் குழு ஒன்றிலும் நாடோடிகளோடும் மறைந்து வாழ்கிறார். தக்க நேரம் வரும்போது, எதிரியாகிய தன்னுடைய தம்பியின் சதிகளை முறியடித்து, முடி சூடி அரசனாகும் கதையைக் கொண்ட படம் 1948-ல் வெளியான ‘சந்திரலேகா’. பல திருப்பங்களைக் கொண்ட கதை. அதில் ஒரு சிறிய தொய்வும் இருந்துவிடக் கூடாது எனத் திரும்பத் திரும்ப மாற்றி எழுதப்பட்ட திரைக்கதையை எஸ்.எஸ்.வாசன் 1943-ல் படமாக்கத் தொடங்கினார். கதையும் காட்சிகளும் கோரிய பிரம்மாண்டத்துக்காக தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து படமாக்கி வந்தார். வருடங்கள் ஓட, பணமும் தீர, கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வீட்டிலிருந்த நகைகள் அனைத்தையும் விற்றார். 5 ஆண்டுகள் படமாக்கப் பட்ட ‘சந்திரலேகா’ வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. ஆனால், போட்ட பணத்தை வாசனால் எடுக்க முடியவில்லை.

அதன்பிறகே ‘சந்திரலேகா’வை இந்தியில் மறு ஆக்கம் செய்ய முடிவெடுத்தார். திரைக்கதை, நடிகர்கள் தேர்வு ஆகியவற்றில் போதிய மாற்றங்கள் செய்ததுடன் பல காட்சிகளை மீண்டும் படம் பிடித்தார். அன்று இந்திப் படவுலகில் புகழ்பெற்ற கதாசிரியராக விளங்கிய அஹா ஜானி காஷ்மீரியை வசனம் எழுத வைத்தார். 1948, டிசம்பர் 24-ம் தேதி வெளியான ‘சந்திரலேகா’வின் இந்திப் பதிப்பு, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. அதன்பிறகே தென்னிந்திய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்தி மறு ஆக்கப் படங்களை உருவாக்க பாலிவுட்டில் துணிந்து அடியெடுத்து வைத்தனர்.

கமலும் மணிரத்னமும்

நேர்மையான ‘பான் இந்தியா’ படங்களை, அவற்றின் கதையும் அதன் பயணமும் தீர்மானிக்க வேண்டும். கமல் இயக்கி, எழுதி, நடித்த ‘ஹே ராம்’ அந்தத் தகுதியுடன் அதேவேளை உலகத் தரத்துடன் இருந்ததை ரசிகர்கள் இன்றைக்கும் நினைவு கூர்கிறார்கள். சாக்கேத் ராமனும் அம்ஜத் கானும் உயிர் நண்பர்களாக இருந்தபோதும் மதத்தால் விளைந்த இருவருக்குமான இழப்புகளையும் கோபங்களையும் தாண்டி, அவர்கள் எப்படி மனிதர்களாக இருந்தார்கள் என்பதைக் கூறும் இப்படத்தின் கதை, வரலாற்றையும் கற்பனையையும் கச்சிதமாக இணைத்தது. திரைக்கதையானது வடக்கையும் தெற்கையும் இயற்கையாக இணைத்தது.

கமலுக்கு முன், ‘ரோஜா’, ‘பம்பாய்’ படங்களின் வழியாக ‘பான் இந்தியா’ மேஜிக்கைத் தரமாகச் செய்து காட்டினார் மணி ரத்னம். ஆனால், ‘வட இந்திய’த் தன்மையுடன் வெளிவந்த அவருடைய பிந்தைய இந்திப் படங்கள், தமிழில் ‘டப்’ செய்யப்பட்டபோது அவை தமிழ் ரசிகர்களைக் கவரத் தவறிவிட்டன. கமல் உருவாக்கிய ‘விஸ்வரூபம்’, ‘பான் இந்தியா’ எனும் எல்லையைத் தாண்டி ‘பான் இண்டர்நேஷனல்’ ஆனபோதும் அதனால் சோபிக்க முடியாமல் போனது. என்றாலும் உலகமயமாதலுக்குப் பிறகான இந்தியாவில். ‘பான் இந்தியா’ படங்களின் சூத்ரதாரிகள் என்று கமலையும் மணி ரத்னத்தையும் குறிப்பிடலாம்.

ஹீரோயிச போதை!

தற்போது தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ‘பான் இந்தியா’ படங்கள், முற்றிலும் மிகை நாயகக் கொண்டாட்டத்தை முதன்மைப்படுத்தும் மாஸ் மசாலா படங்களாக இருக்கின்றன. அவற்றில் வட்டாரக் கலாச்சாரம், வரலாறு போன்றவை ஊறுகாய்போல் தொட்டுக்கொள்ளப்பட்டு, ‘நாயகன் - வில்லன்’ படங்களாக போதையூட்டவே வருகின்றன. இவற்றுக்கு விஷுவல் எபெஃக்ட் காட்சிகள் அவசியமே தவிர, நிலப்பரப்புகளை இணைக்கும் கதை அல்ல. ‘எந்திரன்', ‘2.0’, ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’, ‘புஷ்பா’ என வரிசை கட்டும் படங்கள் வசூலில் சாதனை படைக்கலாம். அதனால் மட்டுமே அவை ‘பான் இந்தியா’ படங்களா என்பதுதான் இப்போதைய கேள்வி.

தொடர்புக்கு:

jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x