Published : 12 Apr 2016 11:54 AM
Last Updated : 12 Apr 2016 11:54 AM
நாங்களே பொம்மைகளைக் கைப்பட உருவாக்கி விளையாடிய அந்தக் காலம் அற்புதமானது… கடையில் வாங்கிய பொம்மை எவ்வளவோ நேர்த்தியாக இருந்தாலும் அது நாங்கள் செய்ததுபோல அழகில்லை.
-ரவீந்திரநாத் தாகூர் (பால்ய காலங்கள்)
குழந்தைகளைவிட அதிகக் கற்பனைத் திறன் யாருக்கு இருக்க முடியும்! மூன்று வயதுக் குழந்தையைக் கவனித்திருக்கிறீர்களா? தனக்குத் தானே பேசிக்கொள்ளும். சுவரில் தொங்கும் நாட்காட்டி அசைவுக்குத் தக்கவாறு அதனோடு பேசும். குட்டி பென்சில், கரித்துண்டு என எது கிடைத்தாலும் தரையில், சுவரில் விதவிதமாகப் படம் வரைந்து தானும் ஒரு படைப்பாளி எனப் பெருமையாகச் சுற்றித் திரியும். இப்படி அபாரமான கற்பனைத் திறனோடும் படைப்பாற்றலோடும் குதூகலிக்கும் குழந்தையை நமது கல்வி முறை என்ன செய்கிறது? அனைத்தையும் சிதைத்து எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி வரிசையாகப் பிடித்து வைத்த மண் உருண்டையாக்கி, பாடமே பிரதானம் எனப் பிடிவாதம் பிடிக்கிறது.
சரி, அப்படியே பாடத்திட்டத்தைப் படித்துப் புரிந்துகொண்டு சொந்த அறிவை விடைத்தாளில், நோட்டுப் புத்தகத்தில் காட்ட முடியுமா? முடியாதே! ‘உன் சொந்தச் சரக்குக்கெல்லாம் மதிப்பெண் தர முடியாது’ என கேலி பேசியே முடக்கிவிடுவார்கள். இந்தச் சூழலை மீறிப் படைப்பாற்றலைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று எனக்குக் காட்டியவர் மாணவி காவேரி.
படைப்பாற்றலை வென்றெடுக்கும் கல்விமுறை
பள்ளிக்கல்வியில் குழந்தைகளின் சொந்தத் திறன்களை, படைப்பாற்றலை வென்றெடுக்கும் கல்விமுறையைத் தற்போது அற்புதமாக எடுத்துச்சொல்கிறார் சர் கென் ராபின்சன்(Sir Ken Robinson). இவரது கட்டுரைகளும், வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும், கல்வி எனும் கொலைக்களத்திலிருந்து தப்புவது எப்படி (How to escape Educations death valley) போன்ற தலைப்புகளே நம்மை அதிரவைக்கின்றன.
கென் ராபின்சனின் படைப்பாற்றல் கல்வி மூன்று உட்கூறுகளைக் கொண்டது. முதலாவது, தனித்திறனைத் தானே கண்டறியும் வகையில் செயல்படும் வகுப்பறையும் பரந்த பாடத்திட்டமும். இரண்டாவது, ஆர்வத்தைத் தூண்டிக் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும் கற்பித்தல் முறை. அடுத்தது, மிக முக்கியமானது. தான் விரும்பும் வடிவத்தில் பாட்டாக, ஓவியமாக, நாடகமாகக் கதையாகக்கூட மாணவர் விடையளிக்கலாம். தேவையான நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரே மாதிரியான கேள்வி, ஒரே மாதிரி விடைகளைத் தரச் சொல்லும் உயிரற்ற தேர்வு முறைக்கு மாற்று இது. பள்ளி என்பது உயிரோட்டமான இடம். கலை அரங்க மேடை, கலை இலக்கியப் பட்டறை போன்ற கல்வியை ராபின்சன் முன்மொழிகிறார். ஆனால், அத்தனை கலை அம்சங்களையும் சவக்குழியில் புதைத்துவிட்டுத் தேர்வை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது நமது கல்விமுறை. இத்தகைய சூழலில் குழந்தைகளின் கற்பனை வளத்தைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எனக்குக் காட்டியவர் காவேரி.
நூலகத்தில் காத்திருந்த ஆச்சரியம்
நான் முன்பு பணிபுரிந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவியாக எனக்கு அறிமுகமானார் காவேரி. இளம்பிள்ளைவாத நோயின் லேசான தாக்கத்தால் ஒரு காலை விந்தி நடப்பார். எந்தச் சங்கடமும் இல்லாமல் அவருடைய உடல் குறையை அடைமொழியாக வைத்து அவரை அழைக்கும் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்தார்கள். ஆனால், இதற்கெல்லாம் காவேரி சோர்ந்துபோனதில்லை. இலக்கிய மன்ற விழாக்களில் தானாக முன்வந்து உரை நிகழ்த்துவது, காலை இறை வணக்கக் கூட்டங்களில் பங்கெடுத்துப் பேசுவது என அவரது திறமைகள் பளிச்சிடுவதைக் கவனித்திருந்தேன். ஆனால், அவர் ஒரு படைப்பாக்கச் சக்கரவர்த்தினி என்பதை நாங்கள் அறிந்துகொண்ட அந்தச் சம்பவம் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது.
குழந்தைகள் சவுகரியமாக வாசிப்பதற்கு ஏற்றாற்போல பள்ளி நூலகத்தை மேம்படுத்தத் தலைமை ஆசிரியராகச் சில நடவடிக்கைகள் எடுத்தேன். விரைவில் பள்ளித் தணிக்கைக்கு அதிகாரிகள் வர இருந்ததும் ஒரு காரணம். குழந்தைகளுக்குச் சில பத்திரிகைகள் வாங்கிப்போடலாம் என்பதிலிருந்து அடுக்கடுக்காகச் சில வேலைகள் அவசரமாக நடந்தேறின. அதிகாரிகள் வருகை புரிந்த அன்று மிடுக்காக நூலகத்துக்கு அவர்களுடன் நடந்தேன். அங்கே எல்லாம் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒரு நிமிடம் அதைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட எத்தனித்தபோது நூலக வாசலில் காவேரி தயங்கியபடி நின்றார்.
எனக்கு ஒரு நொடியில் வியர்த்தது. ‘இங்கே ஏன் வந்தாய்?’ என்பது மாதிரி முறைத்த என்னை அவர் கண்டுகொள்ளவே இல்லை. ‘இது எங்கள் வகுப்பு மாணவர்களுக்காக நாங்களே நடத்தும் மாதப் பத்திரிகை’ என கையில் ஏழெட்டு தைத்த நோட்டுகளைத் திணித்தார். ஒரு கையெழுத்து இதழ். அதிகாரிகள் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ‘கவிதை, கதை , ஓவியம் , ஜோக்கு எல்லாம் எங்கள் வகுப்பு மாணவர்களே உருவாக்கியது. இதுவரை ஏழு இதழ் வந்திருக்கு. நாங்க எங்க வகுப்புப் பத்திரிகைக்கு ‘குறிஞ்சி’னு பேரு வெச்சிருக்கோம் இதையும் நூலகத்துல வைங்க சார்’என்றார்.
அதிகாரிகள் ஆச்சரியத்தோடு வாங்கிப் புரட்டியபோது அவர் அங்கு இல்லை. வகுப்புக்குப் போய்விட்டிருந்தார். அவர்களின் பாராட்டுகளுக்கிடையே நான் விழி பிதுங்கி நின்றேன். படைப்பாக்கக் கல்வியைக் குழந்தைகளிடம் கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டும் என எனக்குப் புரிய வைத்த காவேரி இன்று இணைய வலைப்பூவில் அவ்வப்போது தன் படைப்புகளையும் வெளியிடும் ஒரு இல்லத்தரசி.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT