Published : 09 Mar 2022 05:58 AM
Last Updated : 09 Mar 2022 05:58 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கொரில்லா மார்பில் அடித்துக்கொள்வது ஏன்?

கொரிலாக்கள் ஏன் மார்பில் அடித்துக்கொள்கின்றன, டிங்கு?

- ரா. கீர்த்தனா, 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கூத்தூர், திருச்சி.

இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆண் கொரில்லாக்கள் தங்களின் பலத்தைக் காட்டவும் பெண் கொரில்லாக்களின் கவனத்தை ஈர்க்கவும் மார்பில் அடித்துக்கொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளில், ‘நான் பலமானவன். என்னிடம் சண்டையிட்டுக் காயப்பட வேண்டாம்’ என்று சண்டையைத் தவிர்ப்பதற்காகவே பெரிய ஆண் கொரில்லாக்கள் மார்பில் அடித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். மார்பில் அடிக்கும்போது ஏற்படும் அதிர்வு ஒலி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அளவில் சிறிய ஆண் கொரில்லாக்கள் மார்பில் அடித்துக்கொள்வதன் மூலம், ‘நான் சிறியவன். உன்னிடம் மோதினால் தோற்கும் வாய்ப்புள்ளது. அதனால் சண்டைக்கு வர மாட்டேன்’ என்ற தகவலைத் தெரிவிப்பதாகவும் சொல்கிறார்கள். இன்னும்கூட கொரில்லாக்கள் மார்பில் அடித்துக்கொள்வது ஏன் என்பதற்கு உறுதியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் துல்லியமான விடை கிடைக்கலாம், கீர்த்தனா.

வாழை இலையில் உண்பது உடலுக்கு நல்லதா, டிங்கு?

- ரா. விமலேஷ், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நெடுங்காலமாகவே வாழை இலையில் சாப்பிடும் வழக்கம் நம் நாட்டில் இருந்துகொண்டிருக்கிறது. தற்போதும் விழாக்கள், விருந்தினர் உபசரிப்பு, பண்டிகைக் காலங்களில் வாழை இலையில்தான் உணவு பரிமாறப்படுகிறது. வாழை இலையைத் தேவையான அளவில் வெட்டிப் பயன்படுத்த முடியும். உணவைப் பொட்டலமாகக் கட்டவும் முடியும். வாழை இலையில் சூடான உணவைப் பரிமாறும்போது நல்ல மணமும் கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. பச்சைத் தேயிலை, வாழை இலைகளில் antioxidants அதிகமாக இருக்கிறது. அதனால் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது, விமலேஷ்.

புதிய வாகனங்களுக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவது ஏன், டிங்கு?

- ரா.ஈ. சிவனேஷ், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

எதிர்காலத்தில் விபத்துகளிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கையில் எலுமிச்சம் பழங்களை நசுக்குகிறார்கள். எத்தனையோ நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. மற்றபடி அறிவியல் ரீதியாக இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை, சிவனேஷ்.

கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வாய் புண்ணாவது ஏன், டிங்கு?

- சி. முத்துப் பாண்டி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்.

கரும்புக்கும் தண்ணீருக்கும் தொடர்பில்லை. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா, கரும்புச் சாறு குடித்த பிறகு தண்ணீர் குடித்தால் வாய் புண்ணாகாது. அப்படியென்றால் கரும்பு சாப்பிட்ட பிறகு மட்டும் ஏன் வாய் புண்ணாகிறது? ஏன் என்றால் கரும்பில் உள்ள நார்ப்பொருள் வாயைக் கிழித்துவிடுகிறது. இதனால் வாய் புண்ணாகிவிடுகிறது. சூடான, காரமான உணவைச் சாப்பிடும்போது புண்களில் பட்டு எரிச்சல் உண்டாகிறது, முத்துப் பாண்டி. இந்தப் புண் சில நாட்களில் சரியாகிவிடும்.

உயிரற்ற உடல் ஏன் அழுகிவிடுகிறது, டிங்கு?

- ஆர். மணிமாலா, 6-ம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, நாமக்கல்.

நாம் உயிரோடு இருக்கும் வரை சிதையும் செல்கள் புதிய செல்களை உருவாக்கி, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கின்றன. ஆனால், உயிரற்ற உடலில் புதிய செல்களை உருவாக்க இயலாது. எனவே காற்றுடன் வேதிவினைபுரிந்தும் நுண்ணுயிரிகளின் சிதைவுகளாலும் உடல் அழுக ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் உடல் மட்கிப் போகும். மனித உடல் மட்டுமல்ல காய்கறி, பழங்கள்கூட அழுகும், மணிமாலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x