Published : 19 Dec 2021 02:02 PM
Last Updated : 19 Dec 2021 02:02 PM

விடைபெறும் 2021: பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும்!

ஆண்டு முழுவதையும் கரோனா வைரஸ் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால் முழுமையான இயல்புநிலைக்கு மக்கள் திரும்ப முடியவில்லை. பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பெண்களுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் சில நிகழ்வுகள் நடந்து பொதுவெளியில் பேசுபொருளாகின. அந்த வகையில் கடந்த ஆண்டு பெண்ணுலகம் கடந்துவந்த தருணங்கள் சிலவற்றின் தொகுப்பு இது:

ஆணாதிக்கக் கேள்வி

அண்மையில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கட்டுரைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. முற்காலத்தில் ஆண்கள் குடும்பத் தலைவர்களாகவும் மனைவியர் அவர்களுக்கு அடங்கி நடந்ததால் குழந்தைகள் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டில் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போவதால், ஆண்கள் குடும்பத் தலைவர்களாக இருக்க முடிவதில்லை; பெண்களின் போக்கால் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்கிறார்கள் என்பதுபோல் எழுதப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, அந்தக் கேள்வியை ரத்துசெய்துவிட்டதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான இழப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இளம் தலைமுறையினருக்கு நல்லவற்றைப் போதிக்க வேண்டிய இடத்திலேயே இப்படிப்பட்ட ஆணாதிக்க, பிற்போக்குக் கருத்துகள் இடம்பெறுவது அவமானகர மானது.

இல்லத்தரசியும் உழைப்பாளியே

வீட்டுவேலை செய்து முதுகொடிந்துபோகும் பெண்களின் உழைப்பு புறக்கணிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் புதிய செய்தியல்ல என்ற போதும் பெண்களின் உழைப்பை அங்கீ கரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நம்பிக்கை அளிக்கும்விதத்தில் அமைந்தது.

டெல்லியில் 2014இல் நடந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து ஜனவரி 5 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீட்டை ரூ.11.2 லட்சத்திலிருந்து ரூ. 33.2 லட்சமாக உயர்த்தியதுடன் அதை 2014ஆம் ஆண்டிலிருந்து 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டுத் தர வேண்டும் என்று நீதிபதிகள் எம்.வி.ரமணா, சூர்யகாந்த் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. ஊதியமோ வேறு எந்தவிதமான அங்கீகாரமோ இல்லாத இல்லத்தரசிகளின் உழைப்பையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்கிற இந்தத் தீர்ப்பு, மாற்றத்துக்கான தடம்.

நம்பிக்கை ஒளி

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட மாற்றுப்பாலினத்தவர்கள் 13 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். செவிலியர், வழக்கறிஞர், மருத்துவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், காவலர் என்று பல்வேறு துறைகளில் மாற்றுப்பாலினத்தவர் தடம்பதித்துவருகிற நிலையில் பொது மக்களுடன் உரையாடும் வகையிலான பணியில் இவர்கள் அமர்த்தப்பட்டது வரவேற்பைப் பெற்றது.

மகள்களுக்கும் உரிமை உண்டு

இந்தியச் சமூகத்தில் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை ஆண் வாரிசுகளுக்கே இருந்துவருகிறது. ஆண் வாரிசு இல்லாதவர்கள் இறந்தால்கூட வேறொரு ஆணே இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கப்படுவாரே அன்றி, மகள்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. இதையும் மீறி அரிதினும் அரிதான நிகழ்வுகளாக அவ்வப்போது பெண் வாரிசுகள் தம் பெற்றொரின் இறுதிச் சடங்குகளைச் செய்கின்றனர். மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கை அவருடைய இளைய மகள் தேஜஸ்வினி நிறைவேற்றினார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கும் அவருடைய மனைவிக்கும் அவர்களுடைய மகள்கள் கிருத்திகாவும் தாரிணியும் இறுதிச் சடங்கு செய்தனர். அதே விபத்தில் உயிரிழந்த மற்றொரு ராணுவ உயரதிகாரியான ஹர்ஜிந்தர் சிங்குக்கு அவருடைய 12 வயது மகள் ப்ரீத் கவுர் இறுதிச் சடங்கு செய்தார். சமூகத்தின் கற்பிதத்தை மாற்றும் முன்நகர்வுகளாக இவை பேசப்பட்டன.

இனிதாகும் பயணம்

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும் அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் பெண்களுக்குக் ‘கட்டணமில்லா பேருந்துத் திட்டம்’ முக்கியமானது. தமிழகம் முழுவதும் உள்ள சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம் என்கிற அறிவிப்புக்குப் பெருவாரியான வரவேற்பு இருந்தபோதும், போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

பள்ளிகளிலும் பாதுகாப்பு இல்லை

சென்னையின் தனியார் பள்ளி ஒன்றின் மாணவியர் சிலர் தங்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய ஆசிரியர் குறித்துப் புகார் அளித்ததைத் தொடர்ந்து வேறு சில பள்ளிகளிலும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்தன. உடற்பயிற்சிக் கூடங்களிலும் விளையாட்டுத் துறையிலும் பாலியல் அத்துமீறல் நடப்பதையும் சிலர் கவனப்படுத்தினர். இவை குறித்து விசாரணை நடந்துவந்த நிலையில், ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் மீதான #மீடூ விவகாரமும் வெளிவந்தது. இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்குள் பாலியல் தொல்லை காரணமாக கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கரூர் மாணவி ஒருவரும் தங்களை மாய்த்துக்கொண்டது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.

வரதட்சிணை மரணங்கள்

கல்வியறிவு உள்படப் பல்வேறு சமூக நல அளவுகோல்களில் முன்னிலை வகிக்கும் கேரள மாநிலத்தில் வரதட்சிணைக் கொடுமையால் பெண்கள் மரணமடைவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் வசித்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர், தன் புகுந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து மேலும் சில வரதட்சிணை மரணங்கள் நிகழ, அரசு ஊழியர்கள் ‘வரதட்சிணை வாங்க மாட்டேன்’ என்று ஒப்புதல் அளித்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கேரள அரசு அறிவித்தது.

விளையாட்டில் சமத்துவம்

ஒலிம்பிக் வரலாற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் கடைப்பிடிக்கப்பட்ட பாலினச் சமத்துவ நடவடிக்கைகள் முக்கியமான மைல் கற்கள். ஒலிம்பிக் கழகத்தின் அறிவிப்பால் பல நாடுகளும் தங்கள் அணியில் பெண்களை அதிக எண்ணிக்கயில் இடம்பெறச் செய்தன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, கனடா ஆகிய நாடுகள் ஒருபடி மேலே போய், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பின.

விடியலுக்கான முதல் கீற்று

கரூரைச் சேர்ந்த சுஹாஞ்சனா, சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவாராக நியமிக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்றவர்களில் திருச்சி செம்பட்டுவைச் சேர்ந்த அங்கையற்கண்ணியும் ஒருவர். உறையூர் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் ஓதுவாராக அவர் நிய மிக்கப்பட்டார். இதன்மூலம் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முதல் பெண் ஓதுவார் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். அவரைத் தொடர்ந்து சுஹாஞ்சனாவும் ஓதுவாராக நியமிக்கப்பட்டிருப்பது பாலினச் சமத்துவத்தை எய்துவதற்கான முன் நகர்வு.

அவனுக்குப் பதில் அவர்

பாலின அடையாளமற்ற சொற்களை மக்கள் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் இறங்கியது. கூகுள் டாக்குமென்ட்டில் நாம் Chairman என்று டைப் செய்தால் அதற்குப் பதிலாக chair person என்கிற சொல்லை கூகுள் நமக்குப் பரிந்துரைக்கும். அதேபோல் Policeman என்று டைப் செய்தால் Police officer என்கிற சொல்லைப் பயன்படுத்துமாறு அறிவிப்பு வரும். சொற்களில் குடியிருக்கும் ஆணாதிக்கத்தை ஒழிப்பதன்மூலம் மக்கள் மத்தியில் பாலினப் பாகுபாட்டைக் களைவதுடன் சமத்துவச் சிந்தனையை வளர்க்க முடியும் என்கிற நோக்கத்துடன் கூகுள் எடுத்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒடுக்கப்படும் போராட்டக் குரல்

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் சங்கம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டு வாயிலில் போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் பங்கேற்ற மாணவியர் இருவரைப் பெண் காவலர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட 20 வயது மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தார். காவலர்கள் தன்னையும் இன்னொரு மாணவியையும் வெவ்வேறு இடங்களில் வைத்து ஆடையைக் களைந்து அவமதித்ததாகவும் மோசமாகத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார். நீதி கேட்டு உயரும் குரல்கள் இப்படி ஒடுக்கப்படுவதற்குக் கண்டனங்கள் குவிந்தன.

ஆடையின்மீது தொட்டாலும் குற்றம்தான்

தோலுடன் தோல் தொடர்பு நிகழ்ந்திருந்தால்தான் தொடுதல் என்கிற அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும் என்கிற பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ‘தோலுக்குத் தோல்’ என்னும் வரையறையின் அடிப்படையிலான தீர்ப்பை ‘அபத்தமானது’ என்று கூறி ரத்து செய்தது. குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே போக்சோ சட்டத்தின் நோக்கமாக இருக்கையில் சட்டத்தில் இடம்பெற்ற தொடுதல், உடல்ரீதியான தொடர்பு ஆகிய சொற்களை அகராதியில் உள்ள பொருளில் மட்டும் எடுத்துக்கொள்வது அந்தச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பாலியல் நோக்கத்துடன் நிகழ்த்தப்படும் எந்த வகையான தொடுதலும் பாலியல் குற்றமாகவே கருதப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநாட்டியது.

குறையும் பாலின விகிதம்?

தேசியக் குடும்ப நல கணக்கெடுப்பு - 5இன் (National Family Health Survey-5) முடிவுகள் தமிழகத்தில் பாலின விகிதம் சரிந்திருப்பதாகக் கூறியது. முந்தைய கணக்கெடுப்பின்படி 2016-17-ல் தமிழகத்தில் பாலின விகிதம் பிறக்கும் குழந்தைகளில் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்பதாக இருந்தது. 2020-21இல் 1000க்கு 878ஆகக் கடும் சரிவைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் தேசிய அளவிலான சராசரி 919-லிருந்து 929ஆக அதகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்குள்ளே வன்முறை

இந்தியப் பெண்களில் 30 சதவீதத்தினர் திரு மணத்துக்குப் பிறகு தங்கள் கணவனால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உடல்ரீதியாகவோ பாலியல்ரீதியாகவோ வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு -5 முடிவுகள் தெரிவிக்கின்றன. 2015-16-ல் நடத்தப்பட்ட நான்காம் கணக்கெடுப்பு முடிவுகளோடு ஒப்பிடுகையில் இந்த சதவீதம் குறைவு என்கிறபோதும், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் குடும்ப வன்முறையின் சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றங்கள் எங்கேயும் பதிவுசெய்யப்படவில்லை. பிஹாரில் 40 சதவீதப் பெண்களும் தமிழகத்தில் 38 சதவீதப் பெண்களும் கணவனால் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். தேசிய மகளிர் ஆணையத்தில் 2021-ல் பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளைக் காட்டிலும் உச்சத்தைத் தொட்டிருப்பது பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.

அமைச்சர் உதிர்த்த முத்து!

கர்நாடக சுகாதார அமைச்சரும் மருத்து வர் பட்டம்பெற்றவருமான கே.சுதாகர், நவீனப் பெண்கள் குறித்துப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து கர்நாடக எதிர்கட்சிகள், பொதுமக்கள் சிலரின் கண்டனத்தைப் பெற்றது. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் “நவீன இந்தியப் பெண்கள் தனித்து வாழ விரும்புகின்றனர். அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதையும் தாண்டி குழந்தை பெற்றுக் கொள்வோர் செயற்கைக் கருத்தரிப்பு முறைகளை நாடுகின்றனர். இந்த மாற்றம் நல்ல தல்ல” என்று பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவ, அவருக்கு எதிர்ப்பு வலுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x