Last Updated : 15 Mar, 2016 11:25 AM

 

Published : 15 Mar 2016 11:25 AM
Last Updated : 15 Mar 2016 11:25 AM

ஓவியம் தீட்ட விரல் எதற்கு?

சீறிப் பாயும் சிறுத்தை, கண்களால் கைது செய்யும் கழுகு, விரிந்த கண்களோடு கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் சிறுத்தைப் புலி என காட்டு விலங்குகளின் அழகையும் பராக்கிரமத்தையும் தத்ரூபமாக கருப்பு வெள்ளையில் தீட்டுபவர் டவுக் லாண்டிஸ். “விலங்கின் ஆன்மா அதன் கண்களில் ஒளிரும் என்பதால் நான் கண்களிலிருந்துதான் வரையத் தொடங்குவேன்” எனச் சொல்லும் லாண்டிஸ் வரைவதும் ஓவியம் தீட்டுவதும் விரல்களால் அல்ல. வியத்தகு கலைப்படைப்புகளை இவர் தன் உதடுகளால் உருவாக்குகிறார். ஆனால் அடிப்படையில் இவர் ஓவியரே அல்ல.

மேல்நிலைப் பள்ளி மாணவராக மல்யுத்த போட்டிகளில் வீரதீரமாக சண்டையிட்டபோது விபத்துநேர்ந்தது. கழுத்துக்கு கீழே முற்றிலுமாக செயலிழந்து வாழ்க்கை முடங்கிப்போனது. “நான் எதை செய்ய முடியாதோ அதை எண்ணி வருந்தாமல் என்ன செய்ய முடியும் என எனக்குள்ளேயே தேடத் தொடங்கினேன். உதடுகளால் வரையவும் ஓவியம் தீட்டவும் நானாகவே பழகினேன்” என்று ‘டவுக் லாண்டிஸ் மவுத்ஆர்ட்’ என்னும் இவருடைய இணையதளத்தில் எழுதியிருக்கிறார்.

முதலில் தான் வரையவிருக்கும் விலங்கின் ஒளிப்படங்களை, வீடியோ காட்சிகளை பார்த்து அதன் தசை அமைப்பு, முடி அசைவை உற்றுக்கவனிக்கிறார். பின்னர் மனக்கண்ணில் அதை எவ்வாறு தீட்டலாம் என கற்பனை செய்துவிட்டு படத்தை தலைகீழாக வரையத் தொடங்குவார். கிட்டத்தட்ட 40 முதல் 200 மணி நேரம் வரை லயித்து ஒரு படத்தை வாயாலேயே வரைகிறார். ‘வாய் ஓவியம்’ என்னும் கலை வடிவத்தை சேர்ந்த படைப்பை உருவாக்கும் இவரை பல விருதுகள் கவுரவித்துவருகின்றன. வாய் மற்றும் பாத ஓவியக் கலைஞர்கள் சங்க உறுப்பினராகவும் இருக்கிறார்.

மேலும் இவ்வகை அரிய ஓவியங்களைக் காண: >www.mouthart.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x